பீட்டர் ப்ரூக்: அஞ்சலி

பிரபல நாடக, திரைப்பட இயக்குனர் பீட்டர் ப்ரூக் நேற்று மறைந்தார்.

பீட்டர் ப்ரூக்கை நான் மகாபாரத நாடக/திரைப்பட இயக்குனராக மட்டுமே அறிவேன். அவரது ஒன்பது மணி நேர திரைப்படம் (நாடகத்தின் ஒளி வடிவம் என்றும் சொல்லலாம்) மகாபாரதத்தை வேற்று கலாசாரத்தவர் எப்படி உள்வாங்கிக் கொள்ளலாம் என்று கொஞ்சமாவது புரிய வைக்கும்.

யோசித்துப் பாருங்கள், நாம் – குறைந்தபட்சம் என் தலைமுறை இந்தியர்களுக்கு – பீமன் யார், அர்ஜுனன் யார், திரௌபதி யார், கிருஷ்ணன் யார், ராமனும் ராவணனும் அனுமனும் யார் யார் என்றெல்லாம் விளக்க வேண்டியதில்லை. எந்த வித சிரமமும் இல்லாமல் அவர்களைப் பற்றி பேசிக் கொள்கிறோம். அர்ஜுனன் வில்லு என்று பாட்டு ஆரம்பித்தால் அது யாருப்பா அர்ஜுனன் என்று கேள்வி கேட்க மாட்டோம். ஆனால் ஒரு சராசரி ஐரோப்பியருக்கு இதெல்லாம் முடியாது அல்லவா?

ப்ரூக்கின் சவால் அதுதான். மகாபாரதம் போன்ற ஒரு சிக்கலான கதைப்பின்னல் உள்ள கதையை மேலை நாட்டு பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கு முதலில் அதை தான் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மகாபாரதத்தை இலக்கியமாக அணுகுவதா, மதச்சார்புள்ள தொன்மமாக அணுகுவதா, கிருஷ்ணனின் மாயாஜாலங்களை எப்படி விளக்குவது என்பதை எல்லாம் மனதில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். ஒன்பது மணி நேரம் (இடைவேளைகளுடன் 11 மணி நேரம்) உட்கார்ந்து பார்ப்பது என்பது மேலை நாட்டவருக்கு மட்டுமல்ல, நமக்குமே சிரமம்தான். ஒன்பது மணி நேரம் பார்வையாளர்களை கட்டிப் போடுவது என்பது அசாதாரணம். ஆனால் ஒன்பது மணி நேரம் என்பது மகாபாரதத்துக்கு மிகக் குறைவு. அந்த ஒன்பது மணி நேரத்தில் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியத்தின் சாரத்தை புரிய வைக்க வேண்டும். நம்மூர் என்றால் பாரதத்தில் நடுவிலிருந்து ஆரம்பிக்கலாம், போரிலிருந்து ஆரம்பிக்கலாம், யாருக்கும் பின்புலம் என்ன, முன்கதை என்ன என்று தெரியும். அதுவும் முடியாது.

ப்ரூக் அந்த சவாலை வென்றிருக்கிறார். பாரதத்தை எனக்கு திருப்தியாக காட்டிய ஒரே நாடக/திரைப்பட வடிவம் இதுதான் பி.ஆர். சோப்ரா மகாபாரதம் கலாபூர்வமான வெற்றி அல்ல, ஆனால் அதுவே இந்திய முயற்சிகளில் சிறந்தது என்று கருதுகிறேன். மாயாபஜார் போன்ற திரைப்படங்கள் சிறு பகுதியை, கிளைக்கதையை காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் அவை முழுவடிவம் இல்லை. எனக்கு மகாபாரதப் பித்து நிறையவே உண்டு, தானவீரசூர கர்ணா மாதிரி காலாவதி ஆகிவிட்ட மிகை நடிப்பு திரைப்படங்களையும் விடமாட்டேன், அதனால் என் வெற்றி தோல்வி கணிப்பை எல்லாம் ரொம்ப நம்பக் கூடாது.

ப்ரூக் பாத்திரங்களுக்கு இந்தியர்களை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. என் நினைவு சரி என்றால் திரௌபதியாக நடித்த மல்லிகா சாராபாய் மட்டுமே இந்தியர். (சாராபாயின் நடிப்புக்கு ஒரு ஜே!) பீமனாக, பீஷ்மராக நடித்தவர்கள் கறுப்பர்கள் என்று நினைக்கிறேன். அர்ஜுனன் ஐரோப்பிய நடிகர். துரோணர் ஜப்பானியர் என்பது நன்றாக நினைவிருக்கிறது. ஒரு விதத்தில் பார்த்தால் இது வெறும் gimmick மட்டுமே. ஆனால் இன்னொரு விதத்தில் பார்த்தால் மகாபாரதம் உலகத்தின் பொக்கிஷம் என்பதை வலியுறுத்தவும் செய்கிறது.

ப்ரூக் ஆஸ்கர் விருது பெற்ற ழான்-க்ளாட் காரியருடன் கிட்டத்தட்ட பத்து வருஷம் இந்த நாடகத்தை உருவாக்க உழைத்திருக்கிறார். இந்தியாவின் பல இடங்களில் பல வடிவங்களைப் பார்த்து படித்து ஆராய்ந்திருக்கிறார். குறிப்பாக கேரள கதகளி வடிவங்கள், தமிழகத்தின் தெருக்கூத்து வடிவங்களை இவருக்கும் காரியருக்கும் பெரிய முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. காரியர் இந்த அனுபவங்களை Big Bhishma in Madras புத்தகத்தில் சுவாரசியமாக (குறைந்தபட்சம் எனக்கு சுவாரசியமாக) விவரித்திருக்கிறார். 1985-இல் நாடகம் ஃப்ரெஞ்சு மொழியில் அரங்கேறி இருக்கிறது. நாடகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த 16 நடிகர்கள். நடிகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களி ஏற்று நடித்திருக்கிறார்கள். முன்னர் சொன்ன மாதிரி ஒன்பது மணி நேர நாடகம், இடைவேளைகளுடன் சேர்த்து 11 மணி நேரம்.

நாடகம் நான்கு வருஷங்கள்தான் நடந்திருக்கிறது. 1987-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் இரண்டு வருஷம். நாடகத்தில் மூன்று பாகங்கள் – Game of Dice, Exile in the Forest, War. 1989-இல் தொலைக்காட்சி தொடராக ஆறு மணி நேர நிகழ்ச்சியாக சுருக்கப்பட்டிருக்கிறது. பிறகு மூன்று மணி நேர திரைப்படமாக சுருக்கப்பட்டிருக்கிறது. நான் பார்த்தது தொலைக்காட்சித் தொடர் என்று நினைக்கிறேன், மூன்று மணி நேரம் அளவு சின்ன நிகழ்ச்சி இல்லை.

மகாபாரதத்தை மேலை நாட்டவருக்கு “மொழிபெயர்க்கும்” முயற்சியில் அதன் சாரத்தை விட்டுவிட்டார், இது தோல்வி, ப்ரூக்கின் காலனிய மனப்பான்மைதான் தெரிகிறது என்றெல்லாம் சில விமர்சனங்களைப் பார்த்திருக்கிறேன். நான் அவற்றை வன்மையாக மறுக்கிறேன். வியாசரே மகாபாரதத்தை முழுமையாக எழுதவில்லை என்று குறை சொல்லலாம், ப்ரூக் தனக்கென வகுத்துக் கொண்ட நேரத்தில் பாரதத்தை சிறப்பாக சித்தரித்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

மீண்டும் ஒரு முறை; இலியட், ஆடிஸி, பியோவுல்ஃப், கில்கமேஷ் போன்ற காவியங்களில் அகச்சிக்கல்கள் குறைவு. பியோவுல்ஃப் எல்லாம் பீமன், பகாசுரன், இடும்பன் மாதிரி நாலு பேர் மட்டுமே உள்ள ஒரு காவியத்தை எழுதுவது போலத்தான். இத்தனை குறைந்த நேரத்தில் மகாபாரதத்தின் சாரத்தை புரிய வைப்பது உலக மகா கஷ்டம். அதில்தான் ப்ரூக் வெற்றி பெற்றிருக்கிறார்.

ப்ரூக் பல ஷேக்ஸ்பியர் நாடகங்கள், Lord of the Flies உள்ளிட்ட பல நாடகங்கள், தொடர்கள், திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மகாபாரத இயக்குனர் என்பதைத் தாண்டி நான் அதிகம் அறியேன். குருக்ஷேத்திரப் போரை மையமாக வைத்து Battlefield என்று ஒரு நாடகத்தையும் எழுதி இயக்கி இருக்கிறாராம், அதையாவது பார்க்க/படிக்க வேண்டும்.

ப்ரூக்க்கு 2021-இல் பத்மஸ்ரீ கொடுத்திருக்கிறார்கள். கொடுத்த அரசுக்கு ஒரு ஜே! இத்தனை நாள் தாமதத்துக்கு ஒரு boo!

நானே சிலிகன்ஷெல்ஃபில் எழுதுவதை சில மாதங்களாக நிறுத்தி வைத்து ஏறக்குறைய வனவாசத்தில்தான் இருந்தேன். ஆனால் பீட்டர் ப்ரூக் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உத்வேகம்…


தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், மகாபாரதம்

தொடர்புடைய சுட்டிகள்:
தொலைக்காட்சித் தொடர்
பீட்டர் ப்ரூக் விக்கி குறிப்பு

2 thoughts on “பீட்டர் ப்ரூக்: அஞ்சலி

  1. பீட்டர் ப்ரூக் அஞ்சலி !
    யார் சார். ஒன்பது மணி
    நேரம் பொறுமையாக,
    பார்க்க முடியும்?
    தெரிந்து கொண்டேன் ஜெ
    மூலமாக.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.