நீலகண்ட பிரம்மச்சாரி

நீலகண்ட பிரம்மச்சாரியைப் பற்றி நான் முன்னால் அறிந்தவற்றை இரண்டு வரியில் எழுதிவிடலாம். ஆஷ் கொலை வழக்கில் சிறை சென்றவர் (அவர்தான் சூத்திரதாரி என்று நினைத்திருந்தேன்), பிற்காலத்தில் சாமியாராகிவிட்டவர். கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒரு சிறு பாத்திரம்.

தற்செயலாக பாரதி பயிலகம் தளத்தில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை தென்பட்டது. தஞ்சை வெ. கோபாலனுக்கு ஒரு ஜே!

பிபின் சந்திர பால் 1907-இல் சென்னை வந்ததும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் ஒரு inflection point என்று தோன்றுகிறது. சில படித்த இளைஞர்களிடம் ஆங்கில ஆட்சி பற்றி இருந்த அதிருப்தி திரண்டிருக்கிறது. சிறிய எண்ணிக்கை உள்ள கூட்டம்தான் என்று நினைக்கிறேன், நூறு பேர் இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை, ஆனால் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். பிரம்மச்சாரி அப்போதுதான் பாரதியை சந்தித்திருக்கிறார். சூரத் காங்கிரஸிற்கு பாரதி, வ.உ.சி.யோடு போயிருக்கிறார், அப்போதுதான் காங்கிரஸ் திலகர் கட்சி கோகலே கட்சி என்று இரண்டாக உடைந்திருக்கிறது. வங்காளத் தீவிரவாத இயக்கத்தினரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் தீவிரவாத இயக்கத்தைப் பரப்ப வேண்டும் என்று கிளம்பி வந்திருக்கிறார்.

பழைய பாளையக்காரர்களை திரட்டினாராம், ஆயிரக்கணக்கில் ஆள் திரட்டினார் , ஆஷ் கொலையால் புரட்சி நடக்காமல் போய்விட்டது என்கிறார் கோபாலன். எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. 40-50 பேர் இருந்தால் அதிகம் என்று நினைக்கிறேன்.

ஆஷ் கொலையில் இவருக்கு நேரடியான பங்கில்லையாம். கொலை நடந்தபோது காசியில் இருந்தாராம். அதனால் தைரியமாக சரணடைந்திருக்கிறார். ஆனால் அன்றைய ஆங்கில அரசு வ.உ.சி.யின் செல்வாக்கு, ஆஷ் கொலை ஆகியவற்றை கண்டு அஞ்சியது என்று தோன்றுகிறது. வாஞ்சி இறந்தாயிற்று, இவரைத்தான் முதல் குற்றவாளி ஆக்கி இருக்கிறார்கள்.

இவருக்காக வாதாடிய வக்கீல்களில் ஆந்திரகேசரி என்று பின்னாளில் புகழ் பெற்ற தங்குதூரி பிரகாசாவும் உண்டு. மூன்று நீதிபதிகளில் இருவர் பிரம்மச்சாரி குற்றவாளி என்று தீர்ப்பளிக்க, சி. சங்கரன் நாயர் மட்டும் dissenting judgment. கடைசியில் ஏழாண்டுகள் கடுங்காவல். பெல்லாரி சிறையிலிருந்து தப்பியும் இருக்கிறார், ஆனால் பிடிபட்டுவிட்டார்.

சிறைவாசத்துக்குப் பிறகு கஷ்ட ஜீவனம். பிச்சையே எடுத்தாராம். பாரதியிடம் அவ்வப்போது ஓரணா இரண்டணா வாங்கிச் சென்று சாப்பிடுவாராம். இவரது பசியைப் பார்த்த ஆவேசத்தில்தான் பாரதி “தனி ஒருவனுக்கு உணவில்லையேல்” என்ற வரிகளையே எழுதினாராம். பாரதியின் மரண ஊர்வலத்தில் பங்கேற்ற இருபது பேரில் இவரும் ஒருவராம்.

1922-இல் கம்யூனிசம் பற்றி புத்தகம் எழுதியதற்காக மீண்டும் சிறை, இந்த முறை பெஷாவரிலும் ரங்கூனிலும் பத்தாண்டு சிறைவாசமாம். சிறையிலிருந்து வந்த பிறகு கர்நாடகத்தின் நந்தி ஹில்ஸ் அருகே சாமியாராக வாழ்க்கை. 1936-இல் காந்தியோடு சந்திப்பு. 1978-இல் இறப்பு.

என்ன எதிர்பார்த்து போராடினார்? புகழ் கூட கிடைக்கவில்லை. பெரும் கனவுகளைக் காண்பதில் – அவை நிறைவேறாவிட்டாலும் கூட – இருக்கும் திருப்தி ஒன்றுதான் அவருக்கு கிடைத்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டி: தஞ்சை வெ. கோபாலன் பதிவு

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.