அகதா கிறிஸ்டி: Death Comes as the End

agatha_christieஆர்தர் கானன் டாயிலுக்கு அடுத்தபடி என்றால் அகதா கிறிஸ்டிதான். பெரும் புகழும் வெற்றியும் பெற்ற எழுத்தாளர். ஹெர்க்யூல் பொய்ரோ, மிஸ் மார்பிள் என்ற இரண்டு புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர்களை உருவாக்கியவர்.

ஒரு சட்டகத்தை அடிக்கடி பயன்படுத்துவார். ஒரு கொலை நடக்கும். ஏழெட்டு பேரில் யாரோ ஒருவர்தான் கொலை செய்திருக்க வேண்டும். கொலை செய்தது இவனா அவளா என்று யோசிக்கும்போது அடுத்த கொலை விழும். கதைப் பின்னல் (well plotted mysteries), வாசகர்களை மீண்டும் மீண்டும் தவறாக யூகிக்க வைத்தல் (red herrings) எல்லாம் இந்த சட்டகத்தில் சிறப்பாக வெளிப்படும். அழுத்தமான, நம்பகத்தன்மை உள்ள பாத்திரங்கள் பற்றி எல்லாம் அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

போய்ரோ, மிஸ் மார்பிள் இல்லாமலும் நிறைய எழுதி இருக்கிறார். அவற்றில் சில சிறந்த துப்பறியும் கதைகளும் கூட. இந்தப் பதிவு அப்படிப்பட்ட ஒரு நாவல் பற்றித்தான்.

Death Comes as the End (1945) புத்தகம்தான் நான் படித்த முதல் கிறிஸ்டி. படிக்கும்போது 15 வயதிருக்கலாம். முதல் புத்தகத்திலேயே மனதைக் கவர்ந்துவிட்டார்.

கதை நடப்பது பழங்கால எகிப்தில். அப்பா, அவருடைய புது துணைவி அதாவது வைப்பாட்டி, மூன்று வயது வந்த மகன்கள், இருவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றன. விதவை மகள். வயதான பாட்டி. புது துணைவி வந்ததும் வீட்டில் சச்சரவுகள். துணவி இறக்கிறாள். அது கொலை மாதிரி இருந்தாலும் விபத்து என்று பூசி மழுப்பிவிடுகிறார்கள்.

அதன் பிறகு வரிசையாக மரணங்கள். மூத்த மகன் மட்டும்தான் விஷம் கொடுக்கப்பட்டும் பிழைத்திருக்கிறான். யார் குற்றவாளி என்ற சந்தேகத்தை அருமையாக மாற்றிக் கொண்டே இருப்பார். மறுவாசிப்பில் தட்டையான பாத்திரங்கள், அங்கங்கே இழுப்பது எல்லாம் தெரிந்தது. ஆனால் பதின்ம வயதில் படித்தபோது புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை.

கிறிஸ்டியின் பலங்கள் – குறிப்பாக red herring உத்தி – மிகச் சிறப்பாக வெளிப்படும் நாவல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். துப்பறியும் நாவல் விரும்பிகள் தவறவிடக் கூடாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.