வரலாற்று சாகச நாவல்: Sharpe’s Regiment

bernard_cornwellபெர்னார்ட் கார்ன்வெல் எழுதும் ரிச்சர்ட் ஷார்ப் நாவல்கள் கொஞ்சம் உயர்தர சாண்டில்யன் நாவல்கள். விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. வேகத்தடை (speedbreaker) போல காதல் காட்சிகள், பெண் வர்ணனைகள் வராது. எல்லாவற்றையும் விட பெரிய வித்தியாசம் போர்கள் ஓரளவு தத்ரூபமாக சித்தரிக்கப்படுவதுதான். எல்லா சாகச நாவல்களிலும் உள்ள மாதிரி நாயகன் இறக்க முடியாது மாதிரி சில விதிகள் இருந்தாலும் ரத்தம் தெறிக்கிறது. இதை ரஃபேல் சபாடினி நாவல்களிலோ, ராமேஜ் நாவல்களிலோ, ஹார்ன்ப்ளோயர் நாவல்களிலோ உணர முடிவதில்லை.

richard_sharpeஇரண்டாவதாக அன்றைய சமூக நிலை – உயர்குடியினர், ராணுவ ஊழல்கள், திறமையை அமுக்கும் அரசியல் – என்று பல முகங்களின் குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது. குறிப்பாக திறமை இருந்தும் பிறந்த குடி, அந்தஸ்து ஆகியவற்றால் அமுக்கப்படுவது. அது கர்ணன் காலத்திலிருந்தே அழியாத அலுப்பு தராத கரு. அதை அருமையாக வெளிப்படுத்த்கிறார். சாண்டில்யனுக்கும் இவருக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான். யாராவது அயல் நாட்டினர் சாண்டில்யன் நாவல்களை மட்டும் படித்து இந்தியாவைப் பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொண்டால் இந்தியாவில் ஜாதி என்று ஒன்று இருந்ததா என்று சந்தேகப்படுவார்கள்.

மேலும் சாகச நாவல்களை படிக்கும் பதின்ம வயது மனநிலை ஏழு கழுதை வயதாகியும் எனக்குப் போகவில்லைதான். அதனால் இந்தத் தொடர் நாவல்களை நான் பரிந்துரைக்கிறேன்.

அனேகமான ஷார்ப் நாவல்கள் ஸ்பெயினில் வெல்லிங்டன் பிரபுவுக்கும் நெப்போலியனின் தளபதிகளுக்கும் இடையே நடந்த போர்களை பின்புலமாகக் கொண்டவை. பின்னால் எழுதப்பட்ட சில நாவல்கள் ஷார்ப்பின் ஆரம்ப வாழ்வை – இந்தியாவில் – சித்தரிக்கின்றன. வெல்லிங்டன் பிரபு – அப்போது அவர் பேர் வெல்லஸ்லி – இந்தியாவில் திப்பு சுல்தானோடு போரிட்டு வென்றவர். அவரது உயிரை ஒரு போரில் ஷார்ப் காப்பாற்றி இருக்கிறான். அதனால்தான் சிப்பாயாக இருந்தவனுக்கு அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கிறது.

கார்ன்வெல் சுவாரசியத்துக்காக, வரலாற்றை அவ்வப்போது கொஞ்சம் திரித்துக் கொள்வேன் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார், அது இந்திய நாவல்களில்தான் எனக்கு நன்றாகவே தெரிந்தது. குறிப்பாக திப்பு சுல்தான் வரும் Sharpe’s Tiger நாவலில்.

ஒன்று சொல்ல வேண்டும், இந்திய வரலாற்று நாவல்களில் ஒன்ற முடிவதைப் போல வேறு வரலாற்று நாவல்களில் ஒன்ற முடிவதில்லை. ஸ்பெயினில் இந்தப் போரில் வெல்லிங்டன் தோற்றிருந்தால் நெப்போலியனின் ஐரோப்பிய வெற்றி முழுமை அடைந்திருக்கும் என்று கார்ன்வெல்லே தெளிவாகச் சொல்கிறார். அதனால் என்ன என்று எந்த யோசனையும் எழுவதில்லை. திப்பு சுல்தான் இந்தப் போரில் வென்றிருந்தால் என்று யோசனை வந்தால் அடடா, மிஸ்ஸாகிவிட்டதே என்று தோன்றுகிறது!

ஷார்ப்பிற்கு பெரிய பின்கதை உண்டு. அவன் லண்டனின் சேரிகளில் வளர்ந்த ஒரு அனாதை. பச்சையாகச் சொன்னால் தேவடியாப்பையன். பதின்ம வயதில் திருடன். தண்டனையிலிருந்து தப்பிக்க கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் சேர்கிறான். சிப்பாயாகச் சேர்ந்தவன் மெதுமெதுவாக அதிகாரி பதவிக்கு உயர்கிறான். அன்றைய ஆங்கிலேய ராணுவத்தில் அதிகாரி பதவிகள் உயர்குடியினருக்குத்தான் கிடைக்கும். பல சமயம் விலை கொடுத்து வாங்கப்படும். இந்த மாதிரி ஏழ்மை பின்புலம் உள்ளவன் சிப்பாயிலிருந்து சின்ன பதவி உயர்வு பெற்று சார்ஜெண்ட் ஆகலாம், ஆனால் அதிகாரி ஆவது மகா அபூர்வம். அப்படியே அதிகாரி ஆனபிறகும் அந்தஸ்து பிரச்சினை, சரியாக ஒட்ட முடியாது. ஆனாலும் ஷார்ப்பின் போர்த்திறனால் அவன் சகித்துக் கொள்ளப்படுகிறான்.

இந்தத் தொடரின் முக்கியக் களம் ஸ்பெயின் நாடுதான். (சில prequels இந்தியாவில் நடக்கின்றன.) நெப்போலியன் ஏறக்குறைய ஐரோப்பாவை பிடித்தாயிற்று. ஸ்பெயினில் வெல்லிங்டன் அவனது படைகளைத் திறமையாக எதிர்த்து வெல்கிறார். அந்த யுத்தத்தின் பல போர்கள்தான் இந்தத் தொடரின் களம். நெப்போலியனின் வீழ்ச்சியில் ஸ்பெயின் யுத்தத்து தோல்விதான் முதல் படியாம். (அடுத்தது ரஷியப் படையெடுப்பு, கடைசியாக வாட்டர்லூ போர்.)

வெல்லிங்டனின் உயிரைக் இந்தியாவில் காப்பாற்றி இருப்பதால் வெல்லிங்டன் ஷார்ப்பை அறிவார். அவன் சிறந்த வீரன், நேரடி தாக்குதல்களை தலைமை வகித்து நடத்தக் கூடிய நல்ல தளபதி என்பதை உணர்ந்திருக்கிறார். கடினமான பணிகளை திறமையாக செய்யக் கூடியவன் என்று நினைக்கிறார். ஆனால் அன்றைய எழுதப்படாத விதிகள் அவரது கையைக் கட்டிப் போட்டிருக்கின்றன, ஷார்ப்புக்கு அவன் திறமைக்கேற்றபடி பதவி உயர்வு கொடுத்துவிட முடியாது. தொடரின் முதல் நாவலான Sharpe’s Eagle-இல் ஷார்ப் ஒரு lieutenant. 25-30 rifle வீரர்களின் தலைவன். வாட்டர்லூ போரிலும் அப்படித்தான், அவனது திறமை அந்தச் சிறு குழுவை நடத்துவதில்தான் வெளிப்படுகிறது. ஆனால் கர்னல் பதவி வரைக்கும் உயர்கிறான்.

காலவரிசைப்படி பார்த்தால் ஷார்ப் இந்தியப் போர்களுக்குப் பிறகு ஸ்பெயினில் வெல்லிங்டன் பிரபுவின் தலைமையில் நெப்போலியனின் படைகளை எதிர்த்துப் போராடுகிறான். ஷார்ப்பின் உயிர் நண்பனாக மாறும் அவனுடைய சார்ஜெண்ட் பாட்ரிக் ஹார்பர் எப்போதும் துணையாக இருக்கிறான். ஹார்பருக்கு ஷார்ப்தான் மேலதிகாரி, அதனால் வெளிப்பார்வைக்கு கொஞ்சம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டி இருக்கும்.

நெப்போலியன் வாட்டர்லூவில் இறுதித் தோல்வி அடையும் வரை விடாத போர்கள். அதற்குப் பிறகு ஷார்ப் தன் முன்னாள் எதிரி ஒருவனின் மனைவியோடு ஏழைப் பண்ணையாராக வாழ்கிறான்.

நான் பரிந்துரைக்கும் புத்தகங்கள் Sharpe’s Eagle, Sharpe’s Gold, Sharpe’s Company, Sharpe’s Siege, Sharpe’s RegimentSharpe’s Waterloo, மற்றும் Sharpe’s Assassin. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் Sharpe’s Regiment-ஐ பரிந்துரைக்கிறேன்.

Version 1.0.0

Sharpe’s Regiment (1986) நாவலில் ஸ்பெயினில் விடாது போர் நடந்து கொண்டிருக்கிறது. ஷார்ப் இந்த நாவலின் காலத்தில் மேஜர். அவனது படையில் (regiment) – தெற்கு எஸ்ஸெக்ஸ் படை – ஆட்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு படையில் ஆயிரம் பேர் இருப்பார்களோ என்னவோ. ஒரு அளவுக்கு மேல் ஆட்கள் இறந்தால் படையைக் கலைத்து ஆட்களை வேறு வேறு படைகளில் சேர்த்துவிடுவார்கள். பல போர்களில் ஒன்றாகப் போரிட்டவர்கள், அவர்களுக்குள் நல்ல பந்தம் இருக்கிறது. மேலும் இங்கிலாந்தில் இந்தப் படையில் சேர ஆள் எடுக்கிறார்கள் என்று தெரியும், ஆனால் இங்கிலாந்திலிருந்து ஸ்பெயினுக்கு பல மாதங்களாகியும் யாரும் வந்து சேரவில்லை. இதோ வருவார்கள் அதோ வருவார்கள் என்று சாக்குப்போக்கு கடிதங்கள் மட்டும் இங்கிலாந்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.

ஷார்ப், ஹார்பர், இன்னும் இரண்டு அதிகாரிகள் இங்கிலாந்தில் என்ன நடக்கிறது என்று விசாரிக்கப் போகிறார்கள். ஷார்ப், ஹார்பர் இருவருமே ஓரளவு புகழ் பெற்றவர்கள். ஒரு ஃப்ரெஞ்சு சின்னத்தை இருவரும் போரில் கைப்பற்றியது இங்கிலாந்தில் பேசப்படும் நிகழ்ச்சி. பட்டத்து இளவரசனுக்கே இவர்களைப் பற்றி நேரடியாகத் தெரியும். இளவரசன் எல்லாம் சவுகரியமாக மாளிகையில் சுகபோகம் அனுபவிப்பன், அவ்வளவுதான். போர், அதற்கு தேவையான தளவாடங்கள், செலவுகள் எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டான், ஆனால் வெற்றிகளைக் கொண்டாடுவான். ஷார்ப் தெற்கு எஸ்ஸெக்ஸ் படையில் 700 சிப்பாய்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கண்டுபிடிக்கிறான், ஆனால் படையைக் காணவில்லை. படைக்கு இன்னும் ஆள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. இளவரசனிடமே நேரடியாக புகார் செய்தாலும் ராணுவ மந்திரி ஃபென்னர் இது எல்லாம் காகிதப் பிரச்சினை, சில விதிகளை சமாளிக்க இப்படி எல்லாம் செய்யப்படுகிறது என்று சமாளித்துவிடுகிறான். ஷார்பைக் கொல்லவும் முயற்சி நடக்கிறது, ஆனால் ஷார்ப் தப்பிக்கிறான்.

ஷார்ப்பும் ஹார்பரும் வேலையற்ற நாடோடிகள் போல மாறுவேடத்தில் ஊர் ஊராகப் போகிறார்கள். அவர்கள் திட்டம் தெற்கு எஸ்ஸெக்ஸ் படைக்கு ஆள் எடுக்கும் எவனையாவது கண்டுபிடித்து படையில் சேர்வது, சேர்ந்தால் படை எங்கிருக்கிறது என்று தெரிந்துவிடும். ஆள் எடுப்பவர்கள் ஷார்ப்/ஹார்பர் பேரைச் சொல்லிதான், அவர்கள் புகழை வைத்துதான் ஆளே பிடிக்கிறார்கள். இவர்களது திட்டம் வெற்றி, படை இருக்கும் இடத்துக்குப் போய்விடுகிறார்கள். அங்கே படைகள் ஏறக்குறைய சிறையில் இருக்கின்றன. சில படைகளுக்கு – குறிப்பாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு போக வேண்டிய படைகளுக்கு – ஆளே சேர்வதில்லை.  வில்லன்கள் – மந்திரி ஃபென்னரும் அவர்களில் அடக்கம் – அடிப்படை பயிற்சி முடிந்த பிறகு அந்த மாதிரி படைகளுக்கு இந்த சிப்பாய்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஷார்ப்பும் ஹார்பரும் சிறையிலிருந்து தப்புகிறார்கள். மேஜர் ஷார்ப், சார்ஜெண்ட் ஹார்பராகத் திரும்பி வருகிறார்கள். இருக்கும் படையை லண்டன் நோக்கி நடத்திச் செல்கிறார்கள். ஆனால் எந்த தஸ்தாவேஜுகளும் இல்லாமல் இவர்கள் தரப்பை நிரூபிக்க முடியாது, ஷார்ப்பிற்கு இருக்கும் பதவியும் போகும் அபாயம். அதிர்ஷ்டவசமாக அவையும் கிடைக்க, ஊழல் முடிவுக்கு வருகிறது. வில்லன்கள் தப்புகிறார்கள். ஷார்ப்பால் ஸ்பெயினுக்கு ஒரு படையை அழைத்துச் செல்ல முடிகிறது.

மிகச் சிறப்பாக எழுதப்பட்ட சாகச நாவல். இப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்று நம்மை நம்ப வைக்கிறது. வில்லன்களுக்கு தண்டனை கிடைக்காதது, ஏறக்குறைய் சித்திரவதை செய்யும் சிறு அதிகாரிகள் ஷார்ப்புக்கு படை நடத்த தேவைப்படுவது, அதனால் அவர்களுக்கும் தண்டனை கிடைக்காதது எல்லாம் அந்த நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகின்றன. ஃபென்னர் மிகச் சுலபமாக ஷார்ப்பை சமாளிப்பது, ஷார்ப்பின் ஒரு கால “நண்பன்”/மேலதிகாரி லாஃபோர்ட் ஷார்ப்புக்கு பதவி உயர்வு கொடுத்து ஊழலைப் பூசி மெழுக முயற்சிப்பது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

சிறை முகாமின் சித்தரிப்பு, அங்கிருந்து ஷார்ப்/ஹார்பர் தப்பிக்கும் காட்சி, மீண்டும் அதே முகாமுக்கு வந்து படை நடத்தும் காட்சி பிரமாதமானவை.

சாகச நாவல் விரும்பிகள் தவற விடக் கூடாது. மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்

தொடர்புடைய சுட்டி: கார்ன்வெல் தளம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.