அம்ரிதா ப்ரீதம்: பிஞ்சர்

அம்ரிதா ப்ரீதம் சாஹித்ய அகடமி, ஞானபீடம், பத்மவிபூஷன் விருது பெற்ற பஞ்சாபி எழுத்தாளர். பிஞ்சர் (1950) (எலும்புக்கூடு என்று அர்த்தமாம்) புகழ் பெற்ற நாவல். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்று என்கிறார்கள்.

பிஞ்சர் எளிமையான, நேரடியான நாவல். எளிமையும், நேரடியாகக் கதை சொல்லுதலும் என் கண்ணில் குறைகள் அல்ல. மேலும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போன்ற மாபெரும் மனித சோகங்களை நேரடியாக, உண்மையாக விவரித்தாலே போதும், சிறப்பாக வரும். அந்த மாதிரி அசாதாரண வரலாற்றுத் தருணங்களை பின்புறமாக வைத்து எழுதும்போது, கொஞ்சம் திறமை இருந்தாலே போதும்; இத்தனை சாகசம் புரிய முடியுமா, இத்தனை குரூரமாக நடந்து கொள்வார்களா, இத்தனை கருணையா, நம்பகத்தன்மை குறைவாக இருக்கிறதே என்றெல்லாம் தோன்றப் போவதில்லை. அதுவும் பிரிவினை நடந்து மூன்று வருஷங்களுக்குள் எழுதப்பட்ட நாவல். யார் நினைவிலும் இந்த நிகழ்ச்சிகள் மரத்துப் போயிருக்காது, காயம் ஆறியே இருக்காது. அம்ரிதா கொஞ்சம் அல்ல, நிறையவே திறமை உடையவர்.

15-16 வயதுப் பெண் பூரோவுக்கு பக்கத்து கிராமத்து ராம்சந்துடன் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. பூரோவின் குடும்பத்தினருக்கும் ஷேக் குடும்பத்தினருக்கும் இரண்டு தலைமுறைப் பகை. ஷேக் குடும்பத்தினர் முஸ்லிம்கள். இளைஞன் ரஷீதாவை பூரோவை கடத்தி வருமாறு தூண்டுகிறார்கள். ரஷீதாவுக்கோ பூரோவை கண்டதும் காதல். கடத்திவிடுகிறான். சில நாட்களுக்குப் பின் பூரோ தப்பிக்கிறாள், ஆனால் அவள் குடும்பத்தினர் அவளை ஏற்க மறுக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் ரஷீதாவிடம் திரும்ப, ரஷீதா அவளை திருமணம் செய்து கொள்கிறான். வேறு கிராமத்துக்கு போய்விடுகிறார்கள். பூரோ இப்போது ஹமீதா. ஜாவேத் பிறக்கிறான். ரஷீதாவுக்கு அவள் மேல் உண்மையான அன்பு, ஆனால் ஹமீதாவின் மனம் ஊசலாடிக் கொண்டே இருக்கிறது. ஒரு முறை ராம்சந்தின் கிராமத்துக்கு சென்று அவனை சந்திக்கவும் சந்திக்கிறாள்.

ஆகஸ்ட் 15, 1947. பிரிவினை. கொலை, கற்பழிப்பு, கொள்ளை. ராம்சந்த் இந்தியாவுக்கு செல்ல காத்திருக்கும்போது பூரோ அவனை சந்திக்கிறாள். ராம்சந்த் தன் தங்கையையே மணந்து கொண்டதையும், ராம்சந்தின் தங்கை லாஜோ தன் தம்பியை மணந்ததையும் அறிகிறாள். லாஜோ ஒரு முஸ்லிம் குடும்பத்த்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறாள். ஹமீதா ரஷீதாவின் உதவியோடு லாஜோவை காப்பாற்றி தன் தம்பியோடு இணைத்து வைக்கிறாள். எங்களுடன் இந்தியாவுக்கு வந்துவிடு என்று தம்பி அழைக்கும்போது ஹமீதா நான் ரஷீதாவின் மனைவி என்று பாகிஸ்தானில் தங்கிவிடுகிறாள்.

கதையின் பலம் ஹிந்து-முஸ்லிம் உரசல் பின்புலம், பூரோவின் பாத்திரப் படைப்பு, புது சூழ்நிலையில் நட்புக்கு ஏங்கும் ரஷீதா, அனாதைக் குழந்தையை எடுத்து வளர்க்கும் கருணை, அது ஹிந்துக் குழந்தை, எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்யும் கிராமத்து பெரியவர்கள், ராம்சந்தின் காலடி மண்ணை நெற்றியில் பூரோ குங்குமமாக தடவிக் கொள்ளும் காட்சி, ரஷீதாவின் மாறாத அன்பின் சித்தரிப்பு. பலவீனம், அது பிரிவினையைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று அம்ரிதா நினைத்தது. பூரோவின் அகச்சிக்கல்களோடு நிறுத்தி இருந்தால் கதை வேறு தளத்திற்குப் போயிருக்கும். அதனால் எளிய கதை என்ற நிலையைத் தாண்டவில்லை. அம்ரிதாவை குறை சொல்லிப் பயனில்லை. பிரிவினையால் தான் அடைந்த மனப் பாதிப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்றுதான் எழுதவே ஆரம்பித்திருப்பார்.

2003-இல் ஊர்மிளா மதோண்ட்கர், மனோஜ் பாஜ்பாய் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

நான் படித்தது குஷ்வந்த் சிங்கின் ஆங்கில மொழிபெயர்ப்பில்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்