ராஜேஷ்குமார்: சுயசரிதை

நான் ராஜேஷ்குமார் புத்தகங்களை அதிகமாகப் படித்ததில்லை. அவரோ ஆயிரத்துக்கும் மேல் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். நானும் கண்டதையும் படிப்பவன். தமிழ் வணிக எழுத்தில் ஆர்வம் உள்ளவன். குற்றப் பின்னணி நாவல்களை விரும்பிப் படிப்பவன். பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா சௌந்தரராஜன் எல்லாரையும் படித்திருக்கிறேன். அது என்னவோ ராஜேஷ்குமாரைப் படிப்பதில் மட்டும் ஒரு விசித்திரமான மனத்தடை. எப்படியும் எனக்குப் பிடிக்கப் போவதில்லை என்ற ஒரு நினைப்பு. படித்த வெகு சிலவற்றில் எதுவும் மனதில் நின்றதும் இல்லை. என்றாவது ஒரு நாள் ஒரு பத்து நாவல்களைப் படித்துவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், பார்ப்போம்.

ஆனால் அவரது சுயசரிதை – என்னை நான் சந்தித்தேன் – நிச்சயமாக சுவாரசியமாக இருக்கிறது. சாதாரண மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ராஜகோபால் வழக்கமான படிப்பு, அரசு வேலை என்றுதான் முயன்றிருக்கிறார். மிகத் துரதிருஷ்டமான நிகழ்ச்சிகளால் அரசு வேலை இரண்டு முறை தட்டிப் போகிறது. சிறுகதை எழுதிப் பார்க்கிறார். குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார். பத்திரிகைகள் – குமுதம், விக்டன் முதல் படியில், கல்கி, குங்குமம், இதயம், சாவி என்று பல அடுத்த நிலையில் – கொடி கட்டிப் பறந்த காலம். குமுதத்திற்கு 127 கதைகள் அனுப்பி இருக்கிறார், ஒன்று கூட பிரசுரம் ஆகவில்லை. ரா.கி. ரங்கராஜனை நேரில் சந்தித்து ஏன் என்று கேட்டிருக்கிறார். ரங்கராஜன் 127 கதைகளா என்று அதிர்ச்சி அடைகிறார். ஒரு கதை பிரசுரம் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பேர் கிடைக்கிறது. மாத நாவல் எழுதுகிறார். தொடர்கதைகள். எஸ்.ஏ.பி., சாவி, எஸ். பாலசுப்ரமணியன் மீது பெரிய மரியாதை தெரிகிறது. பாக்கெட் நாவல் அசோகனோடு தொடர்பு. அசோகன் இவருக்கென்றே தனியாக க்ரைம் நாவல் என்ற மாத இதழை ஆரம்பிக்கிறார். தமிழின் முதன்மை வணிக எழுத்தாளர்களில் ஒன்றாக உருவெடுக்கிறார்.

ராஜேஷ்குமாரின் உழைப்பு வியக்க வைக்கிறது. மாத நாவல்தானே, 60-70 பக்கம்தான் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு லட்சம் பக்கங்களாவது எழுதி இருக்க வேண்டும். பத்திரிகை உலகில் நுழைய, அங்கீகாரம் கிடைக்க, பெரிய நட்சத்திரம் ஆக உருவாக அவரது விடாமுயற்சியும், பத்திரிகைகளுக்கு என்ன வேண்டும், வாசகர்கள் எதை விரும்புவார்கள் என்று மீண்டும் மீண்டும் கணித்து அதை சரியாகத் தந்ததும்தான் காரணங்கள். எனக்குப் பிடிக்கப் போவதில்லை என்று நான் நினைப்பது பத்து நாவல் படித்துப் பார்த்த பிறகு ஊர்ஜிதம் ஆகலாம், ஆனால் அதில் அவருக்கு எந்தக் குறைவும் இல்லை. அது என் மனத்தடையாக இருக்கலாம், அவர் எனக்கான எழுத்தாளராக இல்லாமல் போய்விடலாம். ஆனால் அதெல்லாம் அவரது ஆகிருதியை எந்த விதத்திலும் குறைத்துவிடப் போவதில்லை.

யாரையும் குறையே சொல்லவில்லை என்று பார்த்தேன். கல்கி பத்திரிகைக்குள் நுழையவே முடியவில்லை போலிருக்கிறது. திரை உலகில் நிறைய ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லவில்லை. இது 24 காரட் துரோகம் என்ற புத்தகமாக வந்திருக்கிறது.

நான் முகம் பார்த்த கண்ணாடிகள் என்ற புத்தகத்தில் அவர் சந்தித்த பெரும் தலைகளைப் பற்றி எழுதி இருக்கிறார். காமராஜரைப் பார்க்க மாணவர் அணி என்று கூட்டம் சேர்த்து இவரையும் அழைத்துப் போனார்களாம். காமராஜர் காலேஜை கட் அடித்துவிட்டு வந்தீர்களா என்று கண்டித்து திருப்பி அனுப்பிவிட்டாராம். அதை விட சுவாரசியம், 1960களில் ஆளுக்கு நூறு ரூபாய் தருகிறேன் என்று இவரை அழைத்துப் போயிருக்கிறார்கள். குறைந்தது 5000 ரூபாயாவது தன் கெத்தை காட்ட செலவழித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஏது இத்தனை பணம்?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணி விமர்சனம்

3 thoughts on “ராஜேஷ்குமார்: சுயசரிதை

  1. https://rengasubramani.blogspot.com/2018/10/blog-post_24.html?m=1

    படிப்பது என்றால் தொடர் கதைகளாக வந்த நாவல்களை படிப்பது உத்தமம். மாத நாவல்களில் பல அவர் இடது கையால் எழுதியவை. தெரியாமல் கொலை செய்துவிட்டு அதை மறைக்க பாடுபடும் கதைகள் மட்டுமே பத்திற்கு மேல் படித்துள்ளேன்.

    கதைகளின் தலைப்பு வித்தியாசமாக வைப்பார். அதுவே அதை மறக்கவும் வைத்துவிடுகிறது எனக்கு. அதனால் எந்த நாவல் எதைப்பற்றியது என்று கூட குழப்பம் வரும். ஒரே நாவல் இரண்டு தலைப்புகளிலும் வந்துள்ளது.

    எது இருந்தாலும் கிண்டில் அன்லிட்டட் எடுத்தால் இவரின் நாவல்களை விஷ் லிஸ்ட்டில் வைத்து பத்து பத்தாக படித்து தள்ளுவது வழக்கம்.

    Like

    1. ரெங்கா,

      உங்கள் கருத்துகளுக்கு முழுதாக உடன்படுகிறேன். நானும் சிறுவயதில் ராஜேஷ் குமார் படித்தே வளர்ந்தேன்.

      தலைப்பைத் தவிர்த்து, முதல் இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களின் கட்டமைப்பை அற்புதமாக கொண்டு வந்து விடுவார். பிறகு எவ்வளவு அதல பாதாளத்திற்கு கதை சென்றாலும் (99% அதுதான் நடக்கும்) அந்த முதல் சில பக்கங்களுக்காகவே (premise) மன்னித்து விடலாம்.

      உங்களைப்போலவே இன்றும் கிண்டில் மூலம் அவ்வப்போது படித்து வருகிறேன். இப்பொழுது படிப்பது சிறுவயது நினைவுகளுக்காகவே.

      ஆர். வி., நீங்களும் கிண்டிலில் படித்துப் பாருங்கள் 🙂

      பாலாஜி.

      Like

  2. ரெங்கா, உங்கள் விமர்சனத்தையும் இணைத்துவிட்டேன். பாலாஜி, அது என்னவோ ஒரு மனத்தடை. உங்கள் இருவரின் மறுமொழிகளைப் படித்த பிறகு படித்துப் பார்க்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது…

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.