மு. ராஜேந்திரனுக்கு சாஹித்ய அகடமி விருது

2022-க்கான சாஹித்ய அகடமி விருது மு. ராஜேந்திரனின் காலா பாணி (2021) புத்தகத்திக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

காலா பாணி என்றால் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. காலா பானியைத்தான் ஒரு வேளை காலா பாணி என்று குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. அதுவும் நாடு கடத்தலைப் பற்றிய புத்தகம் என்றால் அந்த எண்ணம் மேலும் வலுப்படுகிறது. ஆனால் இத்தனை எளிய எழுத்துப் பிழையை யாரும் அவரிடம் சொல்லாமலா இருப்பார்கள்?

ராஜேந்திரன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இதற்கு முன்னும் வடகரை, 1801 ஆகிய நாவல்களை எழுதி இருக்கிறார். 1801, காலா பாணி இரண்டும் மருது சகோதரர்களை பின்புலமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றன.

நடுவர் குழு திலகவதி, கலாப்ரியா, மற்றும் ஆர். வெங்கடேஷ் இருந்திருக்கிறார்கள். வெங்கடேஷ் யாரென்று தெரியவில்லை. குற்ம்பட்டியலில் ராஜேந்திரனின் இன்னொரு நாவலான 1801-உம் இருந்திருக்கிறது. குறும்பட்டியலில் இருந்த மற்ற புத்தகங்கள்:

  1. ஞானசுந்தரம் எழுதிய ராமன் கதை (இலக்கிய விமர்சனம்)
  2. ஷண்முகம் எழுதிய ஏற்பின் பெருமலர் (கவிதைகள்)
  3. சந்திரசேகரன் எழுதிய கருவறை தேசம் (கவிதைகள்)
  4. குமரிமைந்தன் எழுதிய குமரிக் கண்ட வரலாறும் அரசியலும் (வரலாறு)
  5. சுப்ரபாரதிமணியன் எழுதிய மூன்று நதிகள் (சிறுகதைகள்)
  6. கோணங்கி எழுதிய நீர்வளரி (நாவல்)
  7. ராஜாராம் எழுதிய நோம் சோம்ஸ்கி (வாழ்க்கை வரலாறு)
  8. சிவசங்கரி எழுதிய சூரிய வம்சம் (தன் வாழ்க்கை வரலாறு)
  9. முத்துநாகு எழுதிய சுளுந்தீ

சுப்ரபாரதிமணியனுக்கு இன்னும் சாஹித்ய அகடமி விருது கிடைக்கவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. கோணங்கிக்கும் இன்னும் கிடைக்கவில்லையா? பாமா, யுவன் சந்திரசேகருக்கும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் எல்லாரும் இன்னும் என்னதான் எழுத வேண்டும்? இந்தியக் குடிமகன் என்ற விதி எதுவும் இல்லாவிட்டால் இவர்களுக்கும் முன்னால் கௌரவிக்கப்பட வேண்டியவர் முத்துலிங்கம்!

பெருமாள் முருகனின் பூனாச்சி நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தற்காக என். கல்யாணராமனுக்கும், கன்னட எழுத்தாளர் நேமிசந்திரா எழுதிய யாத் வேஷம் நாவலை தமிழில் மொழிபெயர்த்தற்காக கே. நல்லதம்பிக்கும் மொழிபெயர்ப்பு விருது கிடைத்திருக்கிறது. எம்.ஏ. சுசீலா (அருண் ஷர்மா எழுதிய அஸ்ஸாமிய நாவல் ஆஷிர்வாதர் ரங்), கே.வி. ஷைலஜா (ஷாபு கிளித்தட்டில் எழுதிய மலையாள தன்வரலாற்று நாவல் நிலாச்சோறு) இருவரும் குறும்பட்டியலில் இருந்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு விருதுக்கான குறும்பட்டியலில் இருக்கும் இன்னொரு மொழிபெயர்ப்பாளர் ஜெயமோகன்! அவரது யானை டாக்டர் (பகுதி 1, 2, 3) புதினத்தை மலையாளத்தில்  மொழிபெயர்த்தற்காக!

யுவபுரஸ்கார் விருது பி. காளிமுத்துவுக்கு அவரது கவிதைத் தொகுப்பான தனித்திருக்கும் அரளிகளின் மத்தியம் என்ற நூலுக்கும் பாலபுரஸ்கார் விருது ஜி. மீனாட்சிக்கு அவரது சிறுகதைத் தொகுப்பான மல்லிகாவின் வீடு என்ற நூலுக்கும் கிடைத்திருக்கிறது.

எல்லா மொழிகளுக்குமான விருது விவரங்கள் இங்கே, இங்கே (மொழிபெயர்ப்பு), இங்கே (யுவபுரஸ்கார்), இங்கே (பாலபுரஸ்கார்)

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்