தஞ்சை பிரகாஷ்: சிறுகதைகள்

thanjai_prakashதஞ்சை பிரகாஷ் என்ற பேரை கேட்டிருந்தாலும் அதிகம் படித்ததில்லை. பிரகாஷின் சிறுகதைகள் எதுவும் ஜெயமோகனின் seminal பட்டியலில் இடம் பெறாததும் ஒரு காரணமாக இருக்கலாம். archives.org தளத்தில் சில சிறுகதைகள் கிடைத்தன.

பிரகாஷின் சிறுகதைகளை நான் பரிந்துரைக்க மாட்டேன். ஓரிரண்டு சிறுகதைகளைத் தவிர மற்றவை படுசுமாராக இருக்கின்றன. ஆனால் அவருக்கு ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்கும் பிரபலம் வியப்பூட்டுகிறது. எனக்குத்தான் ரசிக்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை.

சரி நான் மதிக்கும் விமர்சகர்களான ஜெயமோகன், எஸ்ரா என்ன நினைக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். எஸ்ரா பிரகாஷின் மேபல் சிறுகதை, கரமுண்டார் வீடு நாவல் ஆகியவற்றை முறையே தன் சிறந்த தமிழ் சிறுகதைகள், சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார், ஆனால் பிரகாஷைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவரது தளத்தில் இல்லை. பிரகாஷின் கள்ளம் நாவல் ஜெயமோகனின் தமிழின் சிறந்த நாவல் பட்டியலில் இடம் பெறுகிறது. ஆனால் ஜெயமோகன் பிரகாஷை பொருட்படுத்த வேண்டிய எழுத்தாளராகக் கருதவில்லை. ஜெயமோகன் ரசனையும் என் ரசனையும் பெருமளவு ஒத்துப் போகும்…

ஒரே ஒரு சிறுகதை படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம். சிறுகதையில் என்னவோ இருக்கிறது. அது என்ன என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. தொழுநோய் என்று ஒதுக்கப்பட்ட பெண் வரைந்து தள்ளுகிறாள் என்று எல்லா விதத்திலும் பற்றாக்குறை உள்ள கதைச்சுருக்கம் மட்டும்தான் எழுத முடிகிறது.

ஆலமண்டபம் சிறுகதை தமிழை பெரும் ஆலமரம் ஆயிரங்கால் மண்டபமாக மாறியதாக உருவகிக்கிறது. சிலப்பதிகாரத்திலிருந்து புதுமைப்பித்தன் வரை எல்லாரும் பெரும் விழுதுகள்/தூண்கள்!

நாகம் சிறுகதையில் வழக்கமான முக்கோணம் – வயதான கிழவன், மிக அழகிய மனைவி, திருமணத்துக்கு முன் (பின்னும் கூட) அவள் மேல் ஆசை வைத்திருந்த ஏழை வாலிபன். படிக்கலாம்.

வடிகால் வாரியம் சிறுகதை தஞ்சாவூரில் – காவிரிக்கரை தஞ்சாவூரில்! குழாயில் தண்ணீர் வராத சூழ்நிலை, ஊழல், தண்ணீர் எடுத்துப் பிழைக்கும் பாட்டியின் சாவு என்ற ஒரு சோக சித்திரத்தைக் காட்டுகிறது. 1992-இல் எழுதப்பட்ட கதை, அப்போதே இந்த நிலையா என்று வியக்க வைத்தது.

பொறா ஷோக்கு என்ற சிறுகதையைப் படிக்கும்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. பிரகாஷுக்கு தஞ்சையின் வரலாறு – அதுவும் நுண்ணிய வரலாறு (micro-history) நன்றாகவே தெரியும். அதை வைத்து அவர் இன்னும் எழுதி இருக்கலாம், அவை நல்ல இலக்கியமாக வர வாய்ப்பு இருந்திருக்கிறது.

அங்கிள் படிக்கக் கூடிய கதை. பக்கத்து வீட்டு இளம் பெண் மேல் அரைக்கிழம் அங்கிளுக்கு ஈர்ப்பு. உம்பளாயி சிறுகதையையும் படிக்கலாம். மீன்வாசம் உள்ள பெண்ணை சுகிக்கும்போதும் மூக்கை மூடிக் கொள்ளும் பிராமணப் பையன் என்ற கரு மனதில் நிற்கிறது. நியூசன்ஸ் சிறுகதையையும் படிக்கலாம். ஆனால் இதே கருவை இதை விட நன்றாக யாரோ (பட்டுக்கோட்டை பிரபாகர் என்று நினைக்கிறேன்) எழுதி படித்த நினைவிருக்கிறது. திண்டி சிறுகதையும் படிக்கலாம். தஞ்சையின் முதல் சுதந்திரப் போராட்டம் தஞ்சாவூரில் அமர்சிங்குக்குப் பிறகு சரபோஜி ஆட்சிக்கு வந்த காலகட்டத்தை தளமாக வைத்து எழுதப்பட்ட கதை, படிக்கலாம். பூகோஸ் சிறுகதையையும் படிக்கலாம். அஞ்சுமாடி இன்னொரு படிக்கக் கூடிய சிறுகதை. பூடகமாகச் சொல்வது – அல்லது அவர் பூடகமாகச் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றுவது – நன்றாக வந்திருக்கிறது. அங்குசம் சிறுகதையில் 13 வயதில் காதலிக்க ஆரம்பிப்பது 20-30 வருஷங்களாகியும் கல்யாணத்தில் முடியவில்லை…

எஸ்ரா பரிந்துரைக்கும் மேபல் (1988) சிறுகதை முரட்டு அப்பா பெண் உறவை விவரிக்கிறது. என் கண்ணில் படுசுமார்அதே போலத்தான் வெட்கம் கெட்டவன் சிறுகதையும் – மனைவியை போட்டு அடிக்கும் கணவனை விவரிக்கிறது. வைரமலையில் காசில் குறியாக இருக்கும்  மனைவி, எளிய வாழ்க்கை வாழ விரும்பும் கணவன். வத்சலி விகல்பம் இல்லாமல் வளர்ந்த பெண்ணின் மண வாழ்வில் கஷ்டங்கள். கயாமத் என்னும் இறுதி நாள் என்ற சுமாரான சிறுகதையில் ரௌடி மனைவி. கொலைஞன் சிறுகதையிலும் அதே. கடைசிகட்டி மாம்பழம் சிறுகதையில் பத்து சகோதரிகளும் ஆசைப்படுபவனுக்கு அவர்கள் அம்மா மீது ஆசை. சோடியம் விளக்குகளின் கீழ், ராவணசீதை, ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள், இருட்டின் நிறங்கள், எரித்தும் புதைத்தும் எல்லாம் சுமார்தான். என்னை சந்திக்க வந்த என் கதாபாத்திரம், உனக்கும் ஒரு பக்கம், சுயம், புலன்விசாரணை, பேய்க்கவிதை எல்லாம் ஒரு கதையா! பள்ளத்தாக்கு (1983) எல்லாம் என்ன எழவு என்று புரியவில்லை. படித்த நல்ல பதவியில் இருக்கும் பெண். ஆண்களைக் கண்டால் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என்னதான் சொல்ல வருகிறார்?

சுருக்கமாகச் சொன்னால் அலுப்புத் தட்டுகிறது. சிறுகதைகளை மட்டும் வைத்து சொல்கிறேன்; பிரகாஷ் இலக்கியவாதிதான்; இலக்கியம் படைக்க முயன்றிருக்கிறார்தான்; இலக்கியம் படைக்கத் தேவையான பின்புலம், கருக்கள் எல்லாம் இருக்கின்றனதான். ஆனால் அவர் சில வக்ரங்களை எழுத வேண்டும் என்று ஒரு சின்ன வட்டத்தில் சிக்கிக் கொண்டுவிட்டார். நல்ல இலக்கியம் படைப்பதில் வெற்றி பெறவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

1 thoughts on “தஞ்சை பிரகாஷ்: சிறுகதைகள்

  1. வெறும் அதிர்ச்சி தரும் நோக்கில் எழுதப்பட்டது போல தோன்றும் எழுத்து. சிறுகதைகள்.படித்ததில்லை நாவல்கள் கரு நன்றாகம் இருந்தும் ஒரு வள வள தன்மை. அலுப்பான நடை.

    https://rengasubramani.blogspot.com/2020/08/blog-post.html?m=0

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.