தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர்

தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர்

கிருஷ்ணசாமி பாவலரின் சகோதரர் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம். ஆனால் ஒரு காலத்தில் அவர் பாவலரின் சகோதரர் என்றே அறியப்பட்டிருப்பார். பாவலரின் நாடகங்கள் – கதரின் வெற்றி, பதிபக்தி, பஞ்சாப் கேசரி, தேசியக்கொடி போன்றவை அந்தக் காலத்தில் அத்தனை பிரபலமாக இருந்தன.

பாவலர் 43 வயதிலேயே (1934-இல்) இறந்துவிட்டார். பத்து பதினைந்து வருஷமாவது நாடகத் துறையில் பிரபலமாக இருந்தார். சதாவதானம் செய்யக் கூடியவராம், சதாவதானம் கிருஷ்ணசாமி பாவலர் என்றே அறியப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கிறார். அவரது முக்கியப் பங்களிப்பு என்பது நாடகங்கள் மூலம் காங்கிரஸை, காங்கிரஸ் கொள்கைகளைப் பிரபலமாக்கியதுதான்.

பதிபக்தி நாடகம் மதுவின் தீமைகளை பிரச்சாரம் செய்ததாம். கதரின் வெற்றி கதரை; பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராயைப் பற்றியதாம். பதிபக்தி, பஞ்சாப் கேசரி இரண்டும் பிற்காலத்தில் திரைப்படங்களாக வந்தன. இந்த நாடகங்கள் எல்லாம் கிடைக்கமாட்டேன் என்கின்றன.

பாவலரின் தேசிங்கு ராஜன் என்ற புத்தகத்தைப் படித்தேன். இதில் எத்தனை சரித்திரம், எத்தனை கற்பனை என்று தெரியவில்லை. தேசிங்குக்கு ஒரு மாற்றாந்தாய் மகன் – தாவூத் கான் – இருந்ததாகவும் அவன் தேசிங்கை எதிர்த்துப் போரிட்டு இறந்ததாகவும், தான் கொன்றவன் தன் சகோதரனே என்று தெரிந்ததும் தேசிங்கு தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் எழுதி இருக்கிறார். எம்ஜிஆர் நடித்த ராஜா தேசிங்கு திரைப்படத்தின் கதை இப்படியேதான் இருக்கிறது.

விஜயவிலோசனை (1916) நாடகம் சரளமாகச் செல்லும் இன்னொரு நாடகம். சொந்தமாக யோசித்து எழுதப்பட்ட நாடகம், புராண இதிகாச தொன்மங்களின் நாடகமாக்கம் இல்லை என்பதுதான் இதன் முக்கியத்துவம், அன்று – 1916இல் – முன்னேற்றமாக இருந்திருக்க வேண்டும்.

பிரஹ்லாதா, சாவித்ரி நாடகங்களில் புதுமை எதுவுமில்லை. ஆனால் அன்று இந்த மாதிரி நாடகங்களுக்குத் தேவை இருந்தது, வெற்றி பெற்றிருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்: