நாட்டுடமை ஆன எழுத்து: நாரண. துரைக்கண்ணன்

நாரண. துரைக்கண்ணன் 1906-இல் பிறந்து கிட்டத்தட்ட 90 வயது வரை வாழ்ந்திருக்கிறார். பிரசண்டவிகடன் பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார். பாரதியின் கவிதைகள் நாட்டுடமை ஆக வேண்டும் என்று நிறைய உழைத்திருக்கிறார். அவரது புனைவுகள் என்னைப் பொறுத்த வரையில் காலாவதி ஆனவையே. ஆனால் அந்த காலகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்த அகிலனுக்கு எவ்வளவோ தேவலாம். 2007-இல் இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

கொஞ்சம் பற்றாக்குறை வாழ்க்கை என்றுதான் தோன்றுகிறது.

துரைக்கண்ணன் எழுதிய சில புத்தகங்கள் கிடைத்தன. தும்பைப்பூ அகிலன் பாணி நாவல். விதவை இளைஞிக்கு அக்கா கணவன் மீது கொஞ்சம் ஈர்ப்பு ஏற்பட்டாலும் சமாளித்துக் கொள்கிறாள். ஈர்ப்பு இருக்கிறது என்று வெளிப்படையாக சொல்வதே அந்த காலத்துக்கு புரட்சியாக இருந்திருக்கலாம். நாவலில் ஒரு இடத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றால் சிதம்பரம், சிவம், பாரதி, கல்யாணசுந்தரம், வரதராஜன், ராமசாமி, சத்தியமூர்த்தி, சீனிவாசன், ராஜகோபால் என்கிறார். காமராஜின் பேரைத்தான் காணோம்.

தரங்கிணி (1964) இன்னொரு காலாவதி ஆன நாவல். நாயகனின் தியாகம் அந்தக் காலத்தில் படிப்பவர்களைக் கவர்ந்திருக்கலாம். இன்று அம்புலிமாமா கதை போலத்தான் இருக்கிறது. அனாவசிய மிகைப்படுத்தல்கள் இல்லாதது மட்டுமே நினைவில் நிற்கிறது.

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன் மகா கற்றுக்குட்டித்தனமான எழுத்து.

திருவள்ளுவர் தமிழனின் (பழம்)பெருமை பேசும் நாடகம். பல கர்ண பரம்பரைக் கதைகளைத் தொகுத்து ஒரு நாடகம் ஆக்கிவிட்டார்.

ராஜாஜியைப் பற்றி சம்பிரதாயமான வாழ்க்கை வரலாறு ஒன்றையும் எழுதி இருக்கிறார்.

சூத்திரனுக்கு தமிழ் கற்றுத் தரமாட்டேன் என்று உ.வே.சா. இவருக்குத் தமிழ் கற்றுத் தர மறுத்ததாக ஒரு செய்தியைப் பார்த்திருக்கிறேன். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர்; சவேரிநாதப் பிள்ளையின் சக மாணவர்; தன் வீட்டிற்கு தியாகராஜ செட்டியாரை கௌரவிக்க தியாகராஜ விலாசம் என்று பெயர் வைத்தவர்; சேலம் ராமசாமி முதலியாரிடம் காலம் முழுவதும் நன்றி பாராட்டியவர்; திருவாவடுதுறை ஆதீனத்தோடு இரண்டு மூன்று தலைமுறையாகத் தொடர்பு கொண்ட குடும்பத்தவர் அப்படி சொல்லி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் கற்றுத் தர இயலவில்லை என்று சொல்லி இருக்கலாம், அது பிற்காலத்தில் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

காலாவதி ஆகிவிட்ட எழுத்து என்று நான் கருதினாலும் இந்த கௌரவத்தை ஏற்க தகுதி உள்ளவரே என்றுதான் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்: