அசோகமித்ரனின் “இன்று”

asokamithranஇன்று ஒரு “சிறுகதை”த் தொகுப்பு. சில சிறுகதைகளைப் படிக்கும்போது சிறுகதைதானா இல்லை ஏதாவது கட்டுரையா என்று சந்தேகமாக இருந்தது. அசோகமித்ரன் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்தான், ஆனால் அதே சமயம் எனக்கு அவர் ஒரு challenging எழுத்தாளரும் கூட. எத்தனையோ முறை என்னதான் சொல்ல வருகிறார் என்று புரியாமல் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். குமுதத்தில் அவர் எழுதிய சிறுகதை ஒன்று (ஒற்றன் புத்தகத்தில் வரும் – பஸ்ஸுக்காக காத்திருப்பார், பஸ் அவருக்குப் பழகிய விதத்தில் இருக்காது.) பத்து வருஷங்களுக்குப் பிறகு தன்பாத் நகரத்தில் பஸ் தேடி ஒரு டிரக்கரில் ஏறிய நொடியில்தான் புரிந்தது. புகழ் பெற்ற காந்தி சிறுகதை எனக்கு சிறுகதையாகவே தெரிவதில்லை. ஆனால் புரியும்போது மண்டையில் டங் என்று அடி விழுகிறது, அந்த அனுபவத்துக்காகவே அவரை மிகவும் விரும்பிப் படிக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் முதல் சிறுகதையின் பேர் “டால்ஸ்டாய்”. முதலில் டால்ஸ்டாயைப் பற்றி சம்பிரதாயமான ஒரு உரை. பிறகு இன்னொரு உரை. என்னடா எழவு இது என்று படித்துக் கொண்டே போனேன். கடைசி வரி –

“இந்த இரு உரைகளையும் சேர்த்துப் படித்தபோது அவனுக்கு சிரிப்பாக வந்தது. சிரித்து முடித்தபோது வருத்தமாகவும் இருந்தது.”

மனிதர் டால்ஸ்டாயைப் பற்றி எழுதவில்லை, இந்த உரைகளைக் கேட்கும் மனிதர்களைப் பற்றி, இந்த சிறுகதையைப் படித்துக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி எழுதி இருக்கிறார்! மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அற்புதமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளவர். “நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற சிறுகதையில் எழுத்தாளர் ஹரிதாசனைப் பேட்டி காண்கிறார்கள். பேட்டி எடுப்பவர் ஹரிதாசன் எழுதிய கதை என்று எதையோ விவரிக்கிறார். அப்போதைய உரையாடல்.

இந்தக் கதையை நான் எழுதலே.
நீங்க எழுதலையா? ரொம்ப நல்ல கதை.
என்ன செய்யறது? நான் எழுதலை.”

Sarcasm கசப்பே இல்லாமல் வெளிப்படும் ஒரு அபூர்வ தருணம்!

குரூரமான நகைச்சுவையும் உண்டு. ஒரு ஆர்ப்பாட்டம், ஜனாதிபதி வருகை, ரகளை, போலீஸ், அப்பா, அம்மா, குழந்தைகள் உள்ள குடும்பம் பிரிந்துவிடுகிறது. குடும்பத் தலைவன் சுந்தரராமனின் மன ஓட்டம்

“எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கியது நல்லதாகப் போயிற்று. ஒரேயடியாக மின்சார ரயிலில் ஏறி பரங்கிமலை போய்விடலாம். குழந்தைகளை கடவுள் காப்பாற்றுவார்.”

அடுத்த வரி –

“கடவுள் காப்பாற்றினார், ஒரு குழந்தையில் காலைத் தவிர.”

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த சிறுகதை(கள்) ஆக நான் கருதுவது “புனர்ஜென்மம்” மற்றும் அதன் தொடர்ச்சியான “இனி நாம் செய்ய வேண்டியதுதான் என்ன?”. புனர்ஜென்மத்தில் முதிர்கன்னி சீதா, ஏற்கனவே மணமான ஒருவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறாள். கசப்பும் மன அழுத்தமும் அதிகம் ஆக ஆக ஒரு நாள் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். இதே கருவை எம்.வி. வெங்கட்ராம்பைத்தியக்காரப் பிள்ளை” என்ற அற்புதமான சிறுகதையில் எழுதி இருக்கிறார். எம்.வி.வி.யின் அணுகுமுறைக்கும் அசோகமித்ரனின் அணுகுமுறைக்கும் எத்தனை வித்தியாசம்! எம்.வி.வி. ஒரு மாஸ்டர்பீஸைப் படைத்திருக்கிறார் என்பது புரியாதவர்கள் இருக்க முடியாது. அசோகமித்ரனின் சிறுகதையை நானே என் இருபதுகளில் படித்திருந்தால் என்ன அழுமூஞ்சிக் கதைடா என்று விசிறி அடித்திருப்பேன். அவரது subtlety புரிந்திருக்காது.

ஆனால் இந்த இரண்டு சிறுகதைகளையும் ஒன்றாக எந்த வயதில் படித்திருந்தாலும் இரண்டாம் பகுதிக்கு சிரித்திருப்பேன். அதுவும் என் இருபதுகளில் வாய்விட்டு கபகபகபகபவென்று சிரித்திருப்பேன். சீதாவின் தற்கொலையைப் பற்றி ஒரு பொதுக் கூட்டம் இனி நாம் செய்ய வேண்டியதுதான் என்ன என்று விவாதிக்கிறது. வரதட்சணை வாங்க மாட்டேன் என்று கையெழுத்து வாங்குவோம் என்று ஒருவர் ஆலோசனை சொல்கிறார். அதை இன்னொருவர் வரதட்சணைக் கொடுமை கையெழுத்துப் போடவும் இயலாத எழுத்தறிவில்லாதவர்களால்தான் வளர்க்கப்படுகிறது என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார். அமைப்பாளரின் தீர்வு – கையெழுத்துப் போட முடியாதவர்களிடம் கைநாட்டு வாங்கிக் கொள்ளலாம், அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை!

இவற்றைத் தவிரவும் இன்னும் இரண்டு நல்ல சிறுகதைகள் உண்டு. “ஒரு மனிதனுக்கு வேண்டிய நிலம் எவ்வளவு?” டால்ஸ்டாயின் சிறுகதையை நினைவுபடுத்தும் தலைப்பு. இங்கே ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி – தமிழர் – தன் கடைசி நாட்களை டெல்லியில் தன் சொந்தங்களிடமிருந்து வெகு தூரத்தில், வயதான தியாகிகள் வசிக்கும் ஒரு ஹாஸ்டலில் கழிக்கிறார். டால்ஸ்டாய் எழுப்பும் அதே கேள்விதான், ஆனால் முற்றிலும் வேறான விடை. “நடனத்துக்குப் பின்” சிறுகதையில் அவசர நிலையின்போது பல கஷ்டங்களை அனுபவித்த சோமு இன்று தன் பழைய அரசியல் நண்பன் ஒருவனைப் பார்க்க வருகிறான்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது, விலை 50 ரூபாய்தான். ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டிருக்கிறார்கள். (மொழிபெயர்த்தவர் – சாந்தி சிவராமன்) அவர்களுடைய மார்க்கெட்டிங் blurb கீழே. நானே பரவாயில்லை, சிறுகதையா கட்டுரையா என்றுதான் குழம்பினேன். அவர்கள் ஒரு படி மேலே போய் இதை நாவலாக்கிவிட்டார்கள். 🙂

Today
Ashokamitran
ISBN:978-81-8368-384-5 Page :88 Rs. 100
Ashokamitran’s Today—translated from his Tamil novel Indru—is an avant garde departure from traditional forms of writing. The novel strings together a number of genres such as narrative fiction, poetry, lectures and a newspaper interview to produce a rare amalgam of fiction and recent history. The condition of freedom fighters in free India, social evils like dowry, corruption and crass commercialism, institutions like marriage and politics are highlighted as problems that occupy centre stage today. The period chosen for such delineation is immediately before and after the imposition of a national emergency by Prime Minister Indira Gandhi. Anger, persecution, lack of compassion and tolerance find their counterpoint in a father figure-perhaps a veiled reference to the Father of the Nation whose dreams lie shattered in the present. Today is also for all time. Its concerns are universal, its people are of flesh and blood. It raises serious questions about the validity of the value systems governing our lives in an increasingly complex world. It is without doubt a trailblazer in post-modern Tamil literature. Translated from Tamil by Shanti Sivaraman

சின்னப் புத்தகம், கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

10 thoughts on “அசோகமித்ரனின் “இன்று”

  1. இன்று இன்னும் படிக்கவில்லை…படிக்கவேண்டும். ஆனால், அசோகமித்திரனே அண்மையில் வந்த காலச்சுவடு பேட்டியில் அதை நாவல் என்றுதானே சொல்கிறார் 🙂

    “எமர்ஜென்ஸி காலத்தில் பார்த்த, கேள்விப்பட்ட எல்லாம்தான் இன்று நாவலில் வருகிறது. அவ்வப்போது எழுதி முடித்த நாவல். அதனாலேயும் அதற்கு என்று எந்தத் திட்டமும் இல்லை.”

    Like

  2. இப்பொழுது தான் பார்த்தேன்.

    புனர்ஜென்மமும்யும், பைத்தியக்கார பிள்ளையும் எந்த வகையில் ஒத்திருக்கிறது,, ஆர்வி?

    பைத்தியக்கார பிள்ளை படித்து வெகு வருஷமாயிற்று என்றாலும் அவன் கடைசியில் ரயிலின் முன் வீழ்ந்து இறந்து விடுகிறான்; இதில் கட்டிடத்தின் உயரத்திலிருந்து.
    வேறு என்ன ஒப்புமை?..

    பைத்தியக்கார பிள்ளையில் பார்வையிலேயே இவன் விரும்பும் கல்யாணமாகாத
    ஒருத்தி இல்லையா?.. ‘நல்ல வேளை, கல்யாணத்திற்கு முன்பே ரயிலில் விழுந்தான்; பைத்தியக்கார பிள்ளை’ என்று அவள் நினைத்துக் கொள்வாள், இல்லையா?.. என் நினைவுப் பிழைதானா?.. தங்கள் ஒப்பீடு விளங்கவில்லை..

    Like

    1. ஜீவி, பார்த்து ரொம்ப நாளாயிற்று, எப்படி இருக்கிறீர்கள்?

      உங்கள் நினைவு சரியாகத்தான் இருக்கிறது. எப்போதோ படித்த கதை என்கிறீர்கள், ஆனால் எல்லா விவரமும் நினைவிருக்கிறது. அதுதான் பைத்தியக்காரப் பிள்ளை சிறுகதையின் சிறப்பு இல்லையா? மனதில் ணங் என்று அழுத்தமான அடி விழுகிறது.

      மன அழுத்தம், தற்கொலை முடிவு என்ற விதத்தில்தான் இரண்டு சிறுகதைகளும் ஒரே கருவைக் கையாள்வதாக நினைக்கிறேன்.

      Like

      1. நல்லா இருக்கேன், ஆர்வி சார்!

        தாங்கள் நலம் தானே?..

        இனி அடிக்கடி வருவேன். தங்கள் விசாரிப்புக்கு நன்றி.

        Like

  3. //“ஒரு மனிதனுக்கு வேண்டிய நிலம் எவ்வளவு?” டால்ஸ்டாயின் சிறுகதையை நினைவுபடுத்தும் தலைப்பு.//

    ‘இனி நாம் செய்ய வேண்டியது தான் என்ன?’ தலைப்பு கூட அதே மாதிரி தான்.,

    Like

  4. அருமையான பதிவு R.V !

    Blankஆக ஒருவரிடம் படிக்கக் கொடுத்தால், இது கட்டுரை/சிறுகதைகளின் தொகுப்பே என்ற முடிவுக்கு வருவார்கள் என்று நினைக்கிறேன். நம்மில் பெரும்பாலானவர்கள் bottom-to-top மாடலில், அ.மு. அவர்கள் இதை நாவல் என்று சொல்வதால், இதை நாவல் என்ற வரைமுறைக்கு கொண்டுவர என்னவிதமான வழி இருக்கிறது என்று ஆராய்கிறோம் 🙂 மேலும் நாவல் என்பதற்கு எந்தவிதமான கோட்பாடும் இல்லை என்றே நினைக்கிறேன்.அதனால் இதுவும் நாவலே!

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.