காத்தவராயன் நாடகம்

நான் சிறு வயதில் கிராமங்களில் வளர்ந்தவன். வருஷாவருஷம் தெருக்கூத்து உண்டு. மூன்று நான்கு கூத்துகளைப் பார்த்திருக்கிறேன். அந்த வயதிலேயே தாங்க முடியாத அறுவையாக இருந்தது. இன்று கூத்து பற்றிய புத்தகங்களைப் படிக்கும்போதும், பழைய நாடகங்களைப் படிக்கும்போதும் அடடா ஒரு நல்ல கூத்து கூட பார்த்ததில்லையே, பாய்ஸ் கம்பெனி நாடகம் மாதிரி ஒன்று கூடப் பார்த்ததில்லையே என்று சின்ன ஆதங்கம் ஏற்படுகிறது. இந்தக் கலை வடிவத்துக்கு இன்று ஓரளவாவது அருகில் இருப்பது கதகளிதான் என்று தோன்றுகிறது, அதையாவது பார்க்க வேண்டும்.

kathavarayanயாழ்ப்பாண கலாச்சாரப் பேரவை பல நாடகப் பிரதிகளை ஒன்று சேர்த்து தொகுத்த காத்தவராயன் நாடகம் இணையத்தில் கிடைத்தது. அதைப் படிக்கும்போதுதான் இந்தக் கூத்துகளின்/நாடகங்களின் பலம் என்ன என்ற ஞானோதயம் ஏற்பட்டது. கூத்துகளின் பலம் வசனம்/பாட்டுகளில் இருக்கும் rhythm – சந்தம்தான். ‘தன்னானே தானானே தன்னனன தானே’ என்ற சந்தத்தில்தான் அனேக பாட்டுகள் இருக்கின்றன. காத்தவராயன் ‘ஆரியப்பூ மாலையை நானே மணப்பேனே’ என்று பாடினால் அதற்கு ஆரியமாலா ‘காத்தவராயன் உன்னைத்தானே மணப்பேனே’ என்று அதே சந்தத்தில் எதிர்ப்பாட்டு பாடுகிறாள்.மாறி மாறி ஏறக்குறைய ஒரே வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அந்த சந்தம் மனதில் பதிந்துவிடுகிறது. படிக்கும்போதே பாதி நாடகம் போனதும் அந்தச் சந்தம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. படிக்கும்போதே இப்படி என்றால் கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருந்தால் தானாகவே நமது தலை அந்தத் தாளத்துக்கு ஆட ஆரம்பித்துவிடும்.

கூத்துகள் புதிய கதைகளை நமக்கு சொல்வதில்லை. எல்லாருக்கும் தெரிந்த திரௌபதி கதையும் துரியோதனன் கதையும் கர்ணன் கதையும் ராவணன் கதையும் அல்லி அர்ஜுனன் கதையும் வள்ளி திருமணம் கதையும் இன்று யாருக்கும் தெரியாவிட்டாலும் அன்று நன்றாகத் தெரிந்திருந்த காத்தவராயன் கதையும் நல்லதங்காள் கதையும் சதாரம் கதையும் ஆரவல்லி சூரவல்லி கதையும்தான் சொல்லப்படுகிறது. காட்சி அமைப்புக்கு பெரிதாக செலவு செய்ய முடியாது. பிறகு எப்படித்தான் புதுமையைக் கொணர்வது? பாடல்கள், ஆரவாரமான நடிப்பு – சமயத்தில் மிகை நடிப்பு, துள்ளல் நிறைந்த நடை (சிவாஜி கணேசன் நடை, முகமது பின் துக்ளக்கில் சோ ராமசாமியின் நடை, சில பழைய திரைப்படங்களில் கே.ஆர். ராமசாமி நாடகத்தில் நடிப்பார், காலைத் தூக்கி தூக்கி வைத்து நடப்பார்) என்றுதான் ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது. அதை மிகை நடிப்பு என்று சொல்வதே தவறு, அதுவும் ஒரு நாடக உத்திதான் என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது.

காத்தவராயன் கதை பெருசுகளுக்குத் தவிர வேறு யாருக்கும் நினைவிருக்கப் போவதில்லை. அதனால் சுருக்கமாக. மாய மந்திரம் தெரிந்த ‘கீழ்ஜாதிக்காரனான’ காத்தவராயன் ராஜகுமாரி ஆரியமாலாவை விரும்புகிறான். பல சாகசங்களைப் புரிகிறான், உதவிக்கு நண்பன் சின்னான். ஆனால் ஆரியமாலா பிறந்தபோது அவளுடன் ஒரு கழுமரமும் பிறந்திருக்கிறது. அவளை மணக்க வேண்டுமென்றால் கழுமரத்தில் ஏற வேண்டும். அப்புறம் மேலே போக வேண்டியதுதான், எப்படி திருமணம் செய்து கொள்வது? அதனால் காத்தவராயனின் அம்மா அனுமதி தர மறுக்கிறாள். காத்தவராயன் கடைசியில் கழுமரம் ஏறி இறக்கிறான், அப்போது சிவபெருமான் வந்து காப்பாற்றுகிறார்…

இந்த நாடகப் பிரதியில் காத்தவராயனின் அம்மா முத்துமாரி அம்மன். முத்துமாரிதான் பெரியம்மை, வைசூரி போன்ற தொற்றுநோய்க்கெல்லாம் அம்மன். வைசூரிராயன் என்ற ராஜாவின் ஆட்சியில் பெரியம்மை போட்டு எல்லாரும் இறக்கிறார்கள். அப்புறம் முத்துமாரி கருணை வைத்து எல்லாரையும் பிழைக்க வைக்கிறாள்.

முத்துமாரியால் சிவனுக்கே அம்மை போடுகிறது. சிவனும் கிருஷ்ணனும் சேர்ந்து உனக்கு பிள்ளை கிடையாது என்று சாபம் தருகிறார்கள். முத்துமாரி சிவனுக்கு கஞ்சா கொடுத்து பிள்ளை வரம் வாங்குகிறாள். ஆனால் பெற்ற பிள்ளை இல்லை, வளர்ப்புப் பிள்ளைதான் – காத்தவராயன்.

காத்தவராயன் தொட்டியத்து சின்னானை தோற்கடித்து தனக்கு நண்பன்/அடிமையாக்கிக் கொள்கிறான். ஆரியமாலாவை மணக்க முத்துமாரி அனுமதி தரவில்லை. பல பெண்களை வெல்லச் சொல்கிறாள். காத்தவராயன் சின்னானின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வெல்கிறான். கடைசியில் கழுமரம், சிவபெருமான்…

முதலில் இப்படி ஒரு பிரதியைத் தொகுத்ததற்காக இந்த அமைப்பைப் பாராட்ட வேண்டும். படிக்க சுலபமான புத்தகம் அல்லதான், ஆனால் முக்கியமான ஆவணம்.

தாசி வீட்டிற்குப் போவது, ‘டாபர்’ மாமாக்கள், சாராயம் குடிப்பது, கஞ்சா அடிப்பது எல்லாம் நிறைய வருகின்றன.

சந்தத்திற்கு ஒரு உதாரணம்:

கரியமலை மீதேறி காத்தான் கரடி வேட்டை ஆடுறன் பார்
கரியமலை மீதேறி சின்னான் கரடி வேட்டை ஆடுறன் பார்
உச்சிமலை மீதேறி காத்தான் உடும்பு வேட்டை ஆடுறன் பார்
உச்சிமலை மீதேறி சின்னான் உடும்பு வேட்டை ஆடுறன் பார்
பச்சைமலை மீதேறி காத்தான் பன்றி வேட்டை ஆடுறன் பார்
பச்சைமலை மீதேறி சின்னான் பன்றி வேட்டை ஆடுறன் பார்
வெள்ளி மலை மீதேறி காத்தான் விருது வேட்டை ஆடுறன் பார்
வெள்ளி மலை மீதேறி சின்னான் விருது வேட்டை ஆடுறன் பார்

மலை மேலே காத்தான் ஏறியல்லோ மான் வேட்டை சுழன்றாடுறன் பார்
மலை மேலே சின்னான் ஏறியல்லோ மான் வேட்டை சுழன்றாடுறன் பார்
குன்று குளம் காத்தான் ஏறியல்லோ இப்போ குருவி வேட்டை சுழன்றாடுறன் பார்
குன்று குளம் சின்னான் ஏறியல்லோ இப்போ குருவி வேட்டை சுழன்றாடுறன் பார்

வேட்டை எல்லாம் காத்தான் தானாடிக் களைத்து இப்போ வீற்றிருந்தேன் நடுக் கானகத்தே
வேட்டை எல்லாம் சின்னான் தானாடிக் களைத்து இப்போ வீற்றிருந்தேன் நடுக் கானகத்தே

இது எல்லாருக்குமான புத்தகம் இல்லை. ஆனால் இந்த மாதிரி விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் முக்கியமான புத்தகம். இணைத்திருக்கிறேன்.

பின்குறிப்பு: எழுத்தாளர் அ. முத்துலிங்கம் கனடாவில் காத்தவராயன் நாடகம் பார்த்த அனுபவத்தைப் பற்றி இங்கே அருமையாக எழுதி இருக்கிறார்.

பின் -பின்குறிப்பு: நிறைய பொறுமை இருப்பவர்கள் சிவாஜி, சாவித்ரி, பாலையா, சந்திரபாபு, கண்ணாம்பா நடித்த காத்தவராயன் திரைப்படத்தை இங்கே பார்க்கலாம். ஆனால் இதை வெறும் மாய மந்திரப் படமாக மாற்றிவிட்டார்கள். குறைந்த பட்சம் நாடகத்தின் பாடல்களையாவது பயன்படுத்தி இருக்கலாம்.

அவ்வளவு பொறுமை இல்லாதவர்கள் எனக்குப் பிடித்த ஒரு பாடலை – வா கலாப மயிலே! – மட்டும் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

2 thoughts on “காத்தவராயன் நாடகம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.