வேதசகாயகுமார் – அஞ்சலி

வேதசகாயகுமாருக்கு பல முகங்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித் தேடிப் பதிப்பித்த முன்னோடி அவர். எனக்குத் தெரிந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் அதுவே அவரது முதன்மையான அடையாளம்.

அவரது தேடல் அபூர்வமானது. அர்ப்பணிப்பு மிகுந்தது. கிடைத்தால் படிப்போம், இல்லாவிட்டால் இல்லை என்று என் போல சோம்பிக் கிடப்பவர் அல்லர். ஆராய்ச்சி மாணவரான அவரை வ.ரா.வின் மனைவி வீட்டுக்குள் விட மறுத்தபோது வீட்டுவாசலில் உட்கார்ந்து சத்தியாக்கிரகம் செய்து அவரது மனதை மாற்றி இருக்கிறார். எதற்காக? வைக்கோல் போர் போலக் குவித்து வைக்கப்பட்டிருந்த இதழ்களைத் தேடுவதற்காக. மணிக்கொடி இதழ்கள் சுலபமாகக் கிடைத்தனவாம், அவரது மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது.

அன்று என் கையில் 5000 ரூபாய் இருந்திருந்தால் வ.ரா. சேகரித்து வைத்திருந்த (பாரதி முன்னின்று நடத்திய) இந்தியா பத்திரிகை இதழ்களை வாங்கி இருப்பேன் என்று அவர் வருத்தப்படுவது உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சி.

இதே போல ரோஜா முத்தையாவும் அவருக்கு முதலில் ஒத்துழைப்பு தரவில்லை. பிறகு நிறைய உதவி செய்திருக்கிறார்.

ஒரு மாணவர் – அதுவும் தமிழில் முனைவர் பட்டத்துக்கு படித்துக் கொண்டிருப்பவர் – அதுவும் எழுபதுகளில் – புதுமைப்பித்தன் வீடு எங்கே, சி.சு. செல்லப்பா வீடு எங்கே, வ.ரா. வீடு எங்கே, பி.எஸ். ராமையா வீடு எங்கே, பத்திரிகை அலுவலங்கள் எங்கே, பழைய புத்தகக் கடை எங்கே என்று அலைந்த திரிந்து இத்தனை சேகரித்தார் என்றால் அவர் எவ்வளவு பாராட்டப்பட வேண்டும்? அவருக்கு அவருக்குரிய இடம் கிடைத்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

அழியாச்சுடர்களின் தனது தேடலின் கதையை விவரித்திருக்கிறார். திண்ணை தளத்தில் சிறு வேறுபாடுகளுடன் இதே கட்டுரை இருக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்னாளில் ஆ.இரா. வேங்கடாசலபதி காலச்சுவடு பதிப்பகம் மூலமாக கொண்டு வந்த செம்பதிப்புதான் இன்றைக்கு புதுமைப்பித்தன் சிறுகதைகளுக்கு gold standard. ஆனால் அதன் பின்னால் வேதசகாயகுமாரின் பெரும் உழைப்பு இருக்கிறது. சலபதி போகிறபோக்கில் casual ஆக வேதசகாயகுமாரின் பங்களிப்பைப் குறிப்பிடுவது பெரிய அநியாயம்.

அவருடைய குணாதிசயங்களை, சில ஆய்வுகளை நாஞ்சிலும் ஜெயமோகனும் முறையே இங்கே மற்றும் இங்கே (1, 2) விவரிக்கிறார்கள். படுசுவாரசியமான ஆளுமையாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். நாஞ்சில் குறிப்பிடும் அவரது எக்கர் புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்…

வேதசகாயகுமாருக்கு என் உளமார்ந்த நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.