வரலாற்று சாகச நாவல்கள் – இந்தியாவில் ரிச்சர்ட் ஷார்ப்

bernard_cornwellபெர்னார்ட் கார்ன்வெல் எழுதும் ரிச்சர்ட் ஷார்ப் நாவல்கள் கொஞ்சம் உயர்தர சாண்டில்யன் நாவல்கள். விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. சாண்டில்யன் நாவல்களில் வேகத்தடை (speedbreaker) போல வரும் காதல் காட்சிகள், பெண் வர்ணனைகள் இருக்காது. எல்லாவற்றையும் விட பெரிய வித்தியாசம் போர்கள் ஓரளவு தத்ரூபமாக சித்தரிக்கப்படுவதுதான். எல்லா சாகச நாவல்களிலும் உள்ள மாதிரி நாயகன் இறக்க முடியாது மாதிரி சில விதிகள் இருந்தாலும் ரத்தம் தெறிக்கிறது. இதை ரஃபேல் சபாடினி நாவல்களிலோ, ராமேஜ் நாவல்களிலோ, ஹார்ன்ப்ளோயர் நாவல்களிலோ உணர முடிவதில்லை.

richard_sharpeஇரண்டாவதாக அன்றைய சமூக நிலை – உயர்குடியினர், ராணுவ ஊழல்கள், திறமையை அமுக்கும் அரசியல் – என்று பல முகங்களின் குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது. குறிப்பாக திறமை இருந்தும் பிறந்த குடி, அந்தஸ்து ஆகியவற்றால் அமுக்கப்படுவது. அது கர்ணன் காலத்திலிருந்தே அழியாத அலுப்பு தராத கரு. அதை அருமையாக வெளிப்படுத்த்கிறார். சாண்டில்யனுக்கும் இவருக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான். யாராவது அயல் நாட்டினர் சாண்டில்யன் நாவல்களை மட்டும் படித்து இந்தியாவைப் பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொண்டால் இந்தியாவில் ஜாதி என்று ஒன்று இருந்ததா என்று சந்தேகப்படுவார்கள்.

மேலும் சாகச நாவல்களை படிக்கும் பதின்ம வயது மனநிலை ஏழு கழுதை வயதாகியும் எனக்குப் போகவில்லைதான். அதனால் இந்தத் தொடர் நாவல்களை நான் பரிந்துரைக்கிறேன்.

ஷார்ப்பிற்கு பெரிய பின்கதை உண்டு. அவன் லண்டனின் சேரிகளில் வளர்ந்த ஒரு அனாதை. பச்சையாகச் சொன்னால் தேவடியாப்பையன். பதின்ம வயதில் திருடன். தண்டனையிலிருந்து தப்பிக்க கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் சேர்கிறான். சிப்பாயாகச் சேர்ந்தவன் மெதுமெதுவாக அதிகாரி பதவிக்கு உயர்கிறான். அன்றைய ஆங்கிலேய ராணுவத்தில் அதிகாரி பதவிகள் உயர்குடியினருக்குத்தான் கிடைக்கும். பல சமயம் விலை கொடுத்து வாங்கப்படும். இந்த மாதிரி ஏழ்மை பின்புலம் உள்ளவன் சிப்பாயிலிருந்து சின்ன பதவி உயர்வு பெற்று சார்ஜெண்ட் ஆகலாம், ஆனால் அதிகாரி ஆவது மகா அபூர்வம். அப்படியே அதிகாரி ஆனபிறகும் அந்தஸ்து பிரச்சினை, சரியாக ஒட்ட முடியாது. ஆனாலும் ஷார்ப்பின் போர்த்திறனால் அவன் சகித்துக் கொள்ளப்படுகிறான்.

நான் பரிந்துரைக்கும் புத்தகங்கள் Sharpe’s Eagle, Sharpe’s Gold, Sharpe’s Company, Sharpe’s Siege, Sharpe’s RegimentSharpe’s Waterloo, மற்றும் Sharpe’s Assassin. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் Sharpe’s Regiment-ஐ பரிந்துரைக்கிறேன். Sharpe’s Regiment பற்றி விரிவாக இங்கே.

அனேகமான ஷார்ப் நாவல்கள் ஸ்பெயினில் வெல்லிங்டன் பிரபுவுக்கும் நெப்போலியனின் தளபதிகளுக்கும் இடையே நடந்த போர்களை பின்புலமாகக் கொண்டவை. நான் மேலே குறிப்பிட்டிருக்கும் அத்தனை நாவல்களும் ஏறக்குறைய ஸ்பெயினில் நடப்பவைதான். பின்னால் எழுதப்பட்ட மூன்று நாவல்கள் மட்டுமே – prequels – ஷார்ப்பின் ஆரம்ப வாழ்வை இந்தியாவில் சித்தரிக்கின்றன.

இந்தியப் பின்புல நாவல்களும் சுவாரசியமானவைதான். படிக்கக் கூடிய சாகச நாவல்கள்தான். மேலும் என்னால் இந்திய வரலாற்று நாவல்களில் ஒன்ற முடிவதைப் போல வேறு வரலாற்று நாவல்களில் ஒன்ற முடிவதில்லை. ஸ்பெயினில் இந்தப் போரில் வெல்லிங்டன் தோற்றிருந்தால் நெப்போலியனின் ஐரோப்பிய வெற்றி முழுமை அடைந்திருக்கும் என்று கார்ன்வெல்லே தெளிவாகச் சொல்கிறார். அதனால் என்ன என்று எந்த யோசனையும் எழுவதில்லை. திப்பு சுல்தான் இந்தப் போரில் வென்றிருந்தால் என்று யோசனை வந்தால் அடடா, மிஸ்ஸாகிவிட்டதே என்று தோன்றுகிறது!

கார்ன்வெல் சுவாரசியத்துக்காக, வரலாற்றை அவ்வப்போது கொஞ்சம் திரித்துக் கொள்வேன் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார், அது இந்திய நாவல்களில்தான் எனக்கு நன்றாகவே தெரிந்தது. குறிப்பாக திப்பு சுல்தான் வரும் Sharpe’s Tiger நாவலில்.

இந்த மூன்று நாவல்களின் காலம் கிட்டத்தட்ட 1798-1805. திப்பு சுல்தானோடு கடைசிப் போர் காலத்தில் ஆரம்பித்து இரண்டாம் மராத்தியப் போர் வரை இந்த நாவல்களின் தளம். ஆங்கிலேயர்களின் தளபதி பின்னாளில் நெப்போலியனைத் தோற்கடித்த வெல்லிங்டன் பிரபு. திப்பு சுல்தானை வென்றவர். மராத்தியர்களைத் தோற்கடித்தவர். இந்த நாவல்களின் காலத்தில் அவர் பேர் வெல்லஸ்லி. அன்றைய கவர்னர் ஜெனரல் வெல்லஸ்லியின் தம்பி.

அதுவும் Sharpe’s Fortress நாவலைப் படித்தபோது ஆங்கிலேயர்கள் காவில்கர் கோட்டையை எப்படித்தான் வென்றார்கள், போர் பாரம்பரியம் உள்ள மராத்தியர்களா இத்தனை மோசமாக போர் புரிந்தார்கள் என்று வியப்பாக இருக்கிறது.

Version 1.0.0

22-23 வயதில் ஷார்ப் இந்தியாவில் ஒரு சிப்பாய். ஆங்கிலேயர்களின் அன்றைய முதன்மை எதிரி திப்பு சுல்தான். 1799-1800 காலகட்டம். வெல்லஸ்லி பிரபு ஆங்கிலேயப் படைகளின் தளபது (அவரது அண்ணன் வெல்லஸ்லி கவர்னர் ஜெனரல்).  Sharpe’s Tiger (1997) இந்த காலகட்டத்தை விவரிக்கிறது. இறுதிப் போர் நடக்கப் போகிறது என்று இரு தரப்புக்கும் தெரிந்திருக்கிறது. ஷார்ப் இந்த நாவலில் ஒரு சிப்பாய். அவனை வெறுக்கும் evil மேலதிகாரி (சார்ஜெண்ட்) ஒபாடியா ஹேக்ஸ்வில்.

ஒபாடியா ஷார்ப்பின் ஒரு சிறந்த எதிரி – நாலைந்து நாவலில் வருகிறான். கொஞ்சம் மனநிலை பிறழ்ந்தவன். சிறு வயதில் தூக்கிலிடப்படுகிறான், ஆனால் இறக்காமல் பிழைத்துவிடுகிறான். அதனால் தனக்கு இறப்பே கிடையாது என்று நம்புகிறான். தனக்குக் கீழே இருக்கும் சிப்பாய்களை தண்டிப்பதில் நிறைய மகிழ்ச்சி அடைபவன்.

ஒபாடியாவின் சூழ்ச்சியால் ஷார்ப்புக்கு 2000 கசையடி என்று தண்டனை கிடைக்கிறது. 2000 கசையடி என்றால் அது மரண தண்டனைதான். ஆனால் அதே தருணத்தில் இன்னொரு மேலதிகாரி – லுட்டினன்ட் லாஃபோர்ட் – திப்புவின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு ஒற்றனாக அனுப்பபடுகிறான், சிறைப்படுத்தப்பட்டிருக்கும் அவனுடைய மாமா, ஒற்றர் படைத் தலைவர் கர்னல் மக்காண்ட்லசைக் காப்பாற்ற வேண்டும், ஸ்ரீரங்கப்பட்டினத்தின் அரண்கள், படைகள் பற்றி தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. லாஃபோர்டுக்கு ஷார்ப் மேல் எப்போதும் கொஞ்சம் இரக்கம் உண்டு. எனவே  ஷார்ப்பை எனக்குத் துணையாக அனுப்புங்கள் என்கிறான். அதனால் 200 கசையடியோடு ஷார்ப் தப்பிக்கிறான். இருவரும் திப்புவின் படையில் சேர்வதாக நடிக்கிறார்கள்.

மக்காண்ட்லசை சுடுமாறு ஷார்ப்புக்கு திப்பு ஒரு பரீட்சை வைக்கிறார். துப்பாக்கி சுடாது என்பதை புரிந்து கொள்ளும் ஷார்ப் அவரைச் சுட முயற்சிக்கிறான், அவரிடமிருந்து ஒரு தகவலைப் பெற்றுக் கொள்கிறான் – மேற்கு கோட்டை சுவரை இடித்து தாக்குதல் நடத்தக் கூடாது. திப்பு அங்கே வெடிகள் நிறைந்த ஒரு சுரங்கத்தை நிர்மாணித்திருக்கிறார், அதன் வழியாக வரும் எந்தப் படையும் தூள்தூளாகிவிடும். மக்காண்ட்லஸை சுட முயற்சி செய்ததால் திப்பு இவர்களை நம்பி படையில் சேர்த்துக் கொள்கிறார். ஆனால் நகரில் பலத்த காவல் இருக்கிறது, அதனால் நகரை விட்டு தகவலை ஆங்கிலப் படைகளுக்கு இவர்களால் அனுப்ப முடியவில்லை.

நடுவில் ஒபாடியா திப்புவிடம் மாட்டிக் கொள்கிறான், இவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறான்.  மக்காண்ட்லஸோடு இவர்களும் சிறைப்படுத்தப்படுகிறார்கள். ஷார்ப் தப்பித்து, சுரங்கத்தை செயலிழக்கச் செய்கிறான், திப்புவை கொல்வதும் அவனே. ஒபாடியாவை ஷார்ப் திப்புவின் ஆட்கொல்லிப் புலிகள் நடுவே விட்டுவிட்டுச் செல்கிறான். ஆனால் ஒபாடியா தப்பித்துவிடுகிறான், ஏனென்றால் புலிகள் அப்போதுதான் சாப்பிட்டிருக்கின்றன. ஒபாடியாவுக்கு தனக்கு இறப்பில்லை என்ற நம்பிக்கை மேலும் உறுதிப்படுகிறது…

திப்பு வீரனாக சித்தரிக்கப்பட்டாலும் sympathetic portrait என்று சொல்வதற்கில்லை.

Version 1.0.0

காலவரிசைப்படி இரண்டாவது நாவலான Sharpe’s Triumph (1998)-இல் ஸ்ரீரங்கப்பட்டினம் போருக்குப் பின் ஷார்ப் சார்ஜெண்டாகப் பதவி உயர்கிறான். களம் ஆங்கில-மராத்தியப் போர். பல மடங்கு அதிக மராத்தியப் படை எப்படித்தான் தோற்றது என்று எனக்குப் புரியவே இல்லை.

ஒபாடியாவும் ஷார்ப்பும் இப்போது சம பதவியில் இருக்கும் சார்ஜெண்ட்கள். ஷார்ப்தான் திப்புவைக் கொன்றிருக்க வேண்டும், திப்புவின் உடலில் இருந்த பல நகைகளை கொள்ளை அடித்திருக்க வேண்டும் என்று ஒபாடியா உணர்ந்து கொள்கிறான். அவற்றை ஷார்ப்பிடமிருந்து கைப்பற்ற அவன் மேல் ஒரு பொய் வழக்கை ஜோடித்து அவனை சிறை செய்ய உத்தரவை உருவாக்குகிறான்.

ஷார்ப் இப்போது மக்காண்ட்லஸோடு சுற்றிக் கொண்டிருக்கிறான், அவர்கள் குறி டாட் என்ற மராத்தியத் தளபதி. டாட் ஆங்கிலேயன், ஆனால் 100 பேர் கொண்ட ஒரு படையோடு மராத்தியர்கள் பக்கம் சேர்ந்துவிட்டான். கைது செய்ய வரும் ஒபாடியாவிடமிருந்து ஷார்ப்பை மக்காண்ட்லஸ் காப்பாற்றுகிறார். ஆனால் ஒபாடியா  மக்காண்ட்லஸை நயவஞ்சகமாகக் கொன்றுவிடுகிறான்.

அஸ்ஸாயே போரில் வெல்லெஸ்லி இசகுபிசகாக மாட்டிக் கொள்கிறார். ஷார்ப்பின் வீரம் அவரைக் காப்பாற்றுகிறது. ஷார்ப்புக்கு அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கிறது. கைது உத்தரவு தானாக காலாவதி ஆகிவிடுகிறது. ஷார்ப் இப்போது ஒபாடியாவை விட உயர்ந்த பதவியில் இருக்கிறான்.

நாவலின் இறுதியில் ஷார்ப் ஒபாடியாவை காலால் அழுத்திக் கொல்லும்படி பழக்கப்பட்ட ஒரு யானையிடம் விட்டுச் செல்கிறான், ஆனால் மீண்டும் ஒபாடியா தப்பித்துவிடுகிறான்.

Sharpe’s Fortress (1999) இரண்டாம் மராத்தியப் போரில் காவில்கர் கோட்டை மீது நடந்த தாக்குதலை விவரிக்கிறது. இதையெல்லாம் படிக்கும்போது எப்படித்தான் ஆங்கிலேயர்களால் இந்த மாதிரி கட்டப்பட்ட கோட்டைகளை வெல்ல முடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. ஒபாடியா ஷார்ப்பை பல விதமாக கொல்ல எடுக்கும் முயற்சிகள் தோல்வி. காவில்கர் கோட்டைப் போரில் ஷார்ப் போன நாவலில் அறிமுகமான டாடைக் கொன்றுவிடுகிறான், ஒபாடியாவை பாம்புகள் நிறைந்த ஒரு குழியில் தள்ளிவிடுகிறான். ஆனால் ஒபாடியா மீண்டும் பிழைக்கிறான்..

Stonehenge (1999) நாவலைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை, அதனால் இங்கேயே ஒரு வார்த்தை. பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு பழங்குடி இதை கோவிலாகக் கட்டியது என்று கதை போகிறது. படிக்கலாம், ஆனால் சுமார்தான்.

Gallows Thief (2001) பற்றியும் தனியாக எழுதுவதற்கில்லை. நெப்போலியன் சகாப்தம் முடிந்த பின்னர், வாட்டர்லூவில் போரிட்ட ஒரு அதிகாரி – பிரபு குலத்தவர் – நொடித்துப் போய்விடுகிறார். கொலைக் குற்றத்துக்காக தூக்கிலிடப்படப் போகும் ஒருவனை குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கிறார். படிக்கலாம், ஆனால் சுமார்தான்.

Fools and Mortals (2017) நாவலைப் பற்றியும் தனியாக எழுதுவதற்கில்லை, அதனால் இங்கேயே ஒரு வார்த்தை. ஷேக்ஸ்பியரின் Midsummmer’s Night Dream எழுதப்பட்ட பின்புலத்தை வைத்து ஒரு நாவல். படிக்கலாம், ஆனால் சுமார்தான்.

எல்லா ஷார்ப் நாவல்களும் வணிக, சாகச நாவல்களே. ஆனால் எனக்குப் பிடித்தவை, நான் பரிந்துரைப்பவை.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்

தொடர்புடைய சுட்டி: கார்ன்வெல் தளம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.