பிடித்த சிறுகதை: பிரேம்சந்தின் இத்கா

பிரேம்சந்த் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய கதைகள் எளிமையானவை, நேரடியானவை, உண்மையானவை. அவற்றில் அனேகமாக உத்திகள் இருப்பதில்லை, பெரிய வீச்சு என்று சொல்லும்படி எதுவும் இருக்காது, பிரச்சாரம் அறவே கிடையாது. அவை காட்டுவது (கிராம) வாழ்வின் எளிய கோட்டுச் சித்திரங்கள்தான். ஆனால் பல கதைகள் மனதைத் தொடுகின்றன.

இத்கா அப்படிப்பட்ட ஒரு கதைதான். இருபது இருபத்தி இரண்டு வயதில் நண்பன் ஸ்ரீகுமார் சொல்லி முதல் முறையாகப் படித்தேன். அன்று ஏற்பட்ட நெகிழ்ச்சி இன்று மீண்டும் படிக்கும்போதும் ஏற்படுகிறது.

idgah

பிரேம்சந்த் பாணி, எளிய நேரடியான கதைதான். தாய் தந்தை இல்லாமல் பாட்டியால் வளர்க்கப்படும் நாலு வயது ஏழைச் சிறுவன் ஹமீத். ஈத் பண்டிகை. கிராமத்தின் பிற சிறுவர்களோடு பெரிய சந்தைக்குப் போகிறான். அவனிடம் இருப்பது மூன்றே பைசா. பிற சிறுவர்கள் அவனைப் போல நாலைந்து மடங்கு பணம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் பொம்மைகளை, தின்பண்டங்களை வாங்குகிறார்கள், ரங்கராட்டினத்தில் சுற்றுகிறார்கள். ஹமீத் ஒரு கிடுக்கியை மட்டும் வாங்குகிறான். வீடு திரும்பியதும் பாட்டி தலையில் அடித்துக் கொள்கிறாள். கிறுக்குப் பிள்ளையே எதையாவது உனக்குப் பிடித்ததை வாங்கி சந்தோஷமாக இருக்கக் கூடாதா, எதற்கு இந்த கிடுக்கியை வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்கிறாள். நீ ரொட்டி சுடும்போது கையால் எடுக்க வேண்டி இருக்கிறதே, அவ்வப்போது கையை சுட்டுக் கொள்கிறாயே என்று ஹமீத் சொல்கிறான். பாட்டி ஏன் அழுகிறாள் என்று ஹமீதுக்குப் புரிவதில்லை.

இந்தக் கதைக்கு என்ன விளக்கம் வேண்டும்? நேராக படித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஹமீதும் பிற சிறுவர்களும் தங்கள் பொம்மைகளின் உயர்வு தாழ்வைப் பற்றி பேசிக் கொள்ளும் இடம் அருமை!

மொழிபெயர்த்தவர் குஷ்வந்த் சிங். அர்விந்த் குப்தா தளத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பிரேம்சந்த் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்