தமிழ் வரலாற்றுப் புத்தகங்கள் (மா. ராஜமாணிக்கம்)

மா. ராஜமாணிக்கம் பல வரலாற்றுப் புத்தகங்களை எழுதி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் அவரது பங்களிப்பு என்பது தமிழக வரலாற்றை கோர்வையாக தொகுத்து எழுதியதுதான். ஏறக்குறைய கல்லூரிப் படிப்புக்கான அடிப்படை புத்தகங்களைத்தான் எழுதி இருக்கிறார். அவரது சொந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் கல்லூரிப் பாடம் போல இல்லாமல் படிக்கக் கூடிய விதத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள். தமிழகத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள – குறிப்பாக பல்லவர், பிற்காலச் சோழர் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளவை.

ராஜமாணிக்கம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்தவர். தமிழ் இலக்கியம், சைவ சமயம் ஆகியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி இருக்கிறாராம். 60 வயது வாக்கில் 1967-இறந்தார்.

இவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன.

maa_raajamaanikkam_pallavar_varalararuபல்லவர் வரலாறு (1944) புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு யோசித்தால் பல்லவ ராஜாக்கள் சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். மிஞ்சிய நேரத்தில் கோவில் கட்டி இருக்கிறார்கள் என்ற பிம்பம்தான் எஞ்சுகிறது. அதுவும் சாளுக்கியர்களோடும் ராஷ்ட்ரகூடர்களோடும் பாண்டியர்களோடும் தலைமுறை தலைமுறையாகப் போர். சாளுக்கியர்களும் ராஷ்ட்ரகூடர்களும் காஞ்சிபுரம் வரைக்கும் சும்மா உல்லாசப் பயணம் வந்த மாதிரி படை எடுத்து வந்திருக்கிறார்கள். கல்லூரி பாடப்புத்தகம் போல இருந்தாலும் ஒரே மூச்சில் படிக்கலாம். பழைய காலத்துப் பல்லவர்களில் – ஐதீகங்களைக் கூட விடவில்லை, மணிபல்லவம், பாரசீகத்தில் பஹ்லவி குடியினர் (எனக்குத் தெரிந்த வரை பஹ்லவிகளுக்கும் பல்லவர்களுக்கும் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது) என்றெல்லாம் கூட குறிப்பிடுகிறார் – ஆரம்பித்து அபராஜித பல்லவனில் முடிக்கிறார். மன்னர்களின் வரிசை பற்றி ஒரு கழுகுப்பார்வை கிடைக்கிறது. ஆனால் புதிய insights என்று எதுவும் இல்லை. ஜெயமோகன் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியது இங்கே.

அதே மாவை மீண்டும் பல்லவப் பேரரசர் என்ற புத்தகத்தில் அரைத்திருக்கிறார். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் பற்றி கொஞ்சம் விவரித்திருக்கிறார். வழக்கமான வரலாற்று பாடப் புத்தகப் பாணியில், கொஞ்சம் அலுப்புத் தட்டும் விதத்தில் எழுதி இருக்கிறார்.

சோழர் வரலாறு கல்லூரி பாடப்புத்தகம் மாதிரி எழுதப்பட்டிருக்கிறது. இங்கும் சிபி ஐதீகத்திலிருந்து ஆரம்பிக்கிறார். சோழ சாம்ராஜ்ய அழிவு வரை எழுதி இருக்கிறார். புத்தகத்தின் சிறப்பு மீண்டும் மீண்டும் ஆதாரங்களை – கல்வெட்டுகள், பாடல்கள் – ஆகியவற்றைக் கொடுத்திருப்பது. பிற நாட்டு ஆதாரங்களைக் குறிப்பிட்டாலும் அவை என்ன என்று விளக்காதது ஒரு குறைதான். ஒரு நிபுணர் எழுதியது என்று தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் குலோத்துங்கன் புத்தகத்தில் அதே மாவு, ஆனால் குலோத்துங்கன் II பற்றி அதிக விவரங்கள்.

நாற்பெரு வள்ளல்கள் பாரி, ஆய், அதியமான், குமணன் பற்றிய கட்டுரைகள். படிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நாற்பெரு புலவர்கள்: சீத்தலைச் சாத்தனார், கபிலர், பரணர், நக்கீரர் பற்றிய கட்டுரைகள். படிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. சேக்கிழார், புதிய தமிழகம் போன்ற புத்தகங்களைத் விர்க்கலாம்.

வேறு சில புத்தகங்களைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன்.

அவ்வை துரைசாமி, சேர மன்னர் வரலாறு: சங்கப் பாடல்கள், மற்ற ஆதாரங்களை முன் வைத்து பெருஞ்சோற்றுதியன், செங்குட்டுவன் போல பல மன்னர்களின் வரலாற்றை எழுதி இருக்கிறார். அவரது நடை கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது. மன்னர்களின் காலகட்டத்தையும் விளக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

சதாசிவப் பண்டாரத்தார், முதல் குலோத்துங்க சோழன்: எளிமையான, புரிந்து கொள்ளக் கூடிய, நேரடியான அறிமுகம். குலோத்துங்கனின் பூர்வாங்கம், அவன் காலத்து அரசியல், போர்கள், அரசு நிர்வாகம் போன்றவற்றை சுருக்கமாக எழுதி இருக்கிறார்.

கேப்ரியல் ஜூவா-டுப்ரேல் (Gabriel Jouveau-Dubreuil) எழுதியது ஃப்ரெஞ்சு மொழியில். இருந்தாலும் நான் படித்தவை பல்லவர் பற்றிய புத்தகங்கள் என்பதால் இங்கே சேர்த்திருக்கிறேன். Pallavas (1917) புத்தகமும் நிபுணர்களுக்குத்தான். பல்லவ அரசு எப்படி ஆரம்பித்தது என்று அவர் எழுதி இருப்பதைப் பரிந்துரைக்கிறேன். பல்லவ அரசர்களின் வம்சாவளியை கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் ஊகிக்கிறது. குறிப்பாக முற்காலப் பல்லவர்களின் வம்சாவளியை இந்தப் புத்தகம் நிறுவி இருக்க வேண்டும். Dravidian Architecture புத்தகம் கோவில் கட்டுமானங்கள், ஸ்தம்பங்கள் எப்படி கட்டப்படுகின்றன என்று விவரிக்கிறது. சிறு புத்தகம்தான், ஆனால் புரிந்து கொள்ள எனக்கு அறிவு பத்தாது. நேரில் பார்த்தால்தான் கொஞ்சம் புரியும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய சுட்டிகள்: