முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு)
“நிறுவப்படும் தோறும் உண்மை பொய்யாகிறது. நிறுவப்படாத உண்மையை யாரும் அறிவதில்லை” – விஷ்ணுபுரத்தில் யாரோ.
இந்தப் பகுதியை எழுத எனக்குப் போதாமைகள் பல உண்டு. தெரிந்த வரை எழுதுகிறேன்.
மார்க்ஸிய தத்துவங்களின் தாக்கம் நாவலில் நிறையவே இருக்கிறது.
- “இந்த நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகங்களாக மாற்றி தன்னுள் இழுத்துக் கொள்ளும்.”
- தந்திர சமுச்சயம் விஷ்ணு வேறு, நாராயணன் வேறு என்கிறது.
- காட்டில் செங்கழல் கொற்றவையாக இருக்கும் தாய் தெய்வம், நிலத்திற்கு வரும்போது பத்தினித் தெய்வமாகிறது.
- உள்ளூர் பண்டிதர்கள், ஞானம் என்றால் வைகைக் கரை நாணல் போல என்று நினைத்துக் கொள்கிறார்கள். பார்த்தான் பாண்டியன், அக்னிதத்தனை குலகுருவாக ஏற்று, விஷ்ணுபுரத்தை கட்ட ஆனையிட்டு, மற்ற பாண்டியர்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டான்.
தன் இணைய தளத்தில் விரிவாகவே இதைப் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர். இந்து மதம் போன்ற தொன்மையான மதங்களை ஆய்வதற்கு நம்மிடையே இருக்கும் சிறந்த கருவி மார்க்ஸிய முரணியக்கம் என்கிறார். ஒரே நேரத்தில் விஷ்ணுபுரத்தை ஹிந்துத்துவ நூல் என்றும், மார்க்ஸிய நூல் என்றும் சொல்கிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் விஷ்ணுபுரத்தில் சேவை சாதிப்பது, விஷ்ணுவோ, ததாதகரோ, பெருமூப்பனோ இல்லை, அது மார்க்ஸ் என்கிறார் :-). ஆனால், நாவலின் மையம் தாந்திர சமுச்சையம் சொல்லும் ‘செய்தி’ அல்ல. ஒரு முனையில், எல்லாம் வல்ல பரம்பொருளோ, அறியவே முடியாத இருள் சூழ்ந்த சூன்யமோ, ஏதோ ஒன்று இருக்கிறது. மறு முனையிலிருந்து அதை அறிவதற்கு விட்டில் பூச்சிகள் போல, மனிதர்கள் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள். யுக யுகமாக தொடரும் இந்தப் பயணத்தை அள்ள முயலும் நாவலே விஷ்ணுபுரம்.
விஷ்ணுபுரம் ஒரு தத்துவ நூலும் கூட. முதல் பகுதியில் வரும் பிங்கலன்-சிரவண மகாபிரபு, பிங்கலன்-சாருகேசி, சங்கர்ஷணன்-பத்மாட்சி உரையாடல்களும், நாவலின் இரண்டாம் பகுதியும் தத்துவச் செறிவு நிறைந்தவை. விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் சாமானியர்களின் கண்களுக்கு முப்பது அடுக்குகளுக்கு மேல் தெரிவதில்லை. ராஜகோபுரத்தின் மேல் ஏறியவர்கள் யாரும் திரும்பி வருவதில்லை. விஷ்ணுபுரத்திலே, சுடுகாட்டுச் சித்தன் மட்டும்தான் ராஜகோபுரம் மேல் ஏறி இறங்கியவன். விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரத்தை மனிதன் கண்டடைந்த ஞானம் என்று உருவகித்தால், கோபுரத்தின் பின்னால் உள்ள ஹரிதுங்கா மலையை ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக உருவகிக்கலாம். ஒரு வேளை, சித்தன் ராஜகோபுரத்தின் மீதேறி, ஹரிதுங்காவைக் கண்டதால்தான், கோபுரத்திலிருந்து இறங்கி வந்தவுடன் ஞான நூல்களை எரித்துவிட்டானோ?
வைதீக மரபை உயர்த்தியோ, பௌத்தத்தை உயர்த்தியோ நாவல் பேசவில்லை. மொத்த நாவலில், சித்தனும், நீலியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். அனைத்தையும் கற்று, அனைத்தையும் உதறி, சூன்யத்தை உணர்ந்தவன் சித்தனென்றால், செங்கழல் கொற்றவையின் பேருருவம் கொள்பவள் நீலி. ஜெயமோகனின் கதைப்புலத்தில் நீலிக்கும் சித்தனுக்கும் தனி இடமுண்டு. காடு, விஷ்ணுபுரம், கொற்றவை, எண்ணற்ற சிறுகதைகளில் வரும் பெண் தெய்வமாக நீலியும், ஏழாம் உலகம் மற்றும் விஷ்ணுபுரத்தில் சித்தனும் அவர் நாவல்களைப் பினைக்கும் சங்கிலி என மீளமீள வருகிறார்கள். (நான் காந்தியை பித்தனாகக் கருதுவதால் சித்தன் வரிசையில் இன்றைய காந்தியையும் சேர்த்துக்கொள்வேன்).
இன்னொன்றையும் கவனித்தேன். விஷ்ணுபுரத்தில் வரும் சில வரிகளைக் கூட சாராம்சமாகக் கொண்டு தன் தளத்தில் விரிவான கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். ஒரு வகையில் அவர் மீளமீள விஷ்ணுபுரத்தைத்தான் தன் கட்டுரைகளில், கதைகளில் வெவ்வேறு வடிவங்களில் எழுதுகிறார். பேரிலக்கியவாதிகளும் அதைத்தான் செய்தார்களா? என்னால், தர்க்கத்தை விடவும் முடியவில்லை, அதேசமயம் தர்க்கத்தை தாண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்றும் அகம் இடைவிடாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இருபது வயதில் எல்லோரும் தேடுகிறார்கள், நாற்பது வயதில் கண்டடைகிறார்கள் என்று இந்நாவலில் ஒரு வரி வேறு வருகிறது! (ஆர்வி தத்துவ விவாதெமெல்லாம் தியரிடிக்கல் எக்ஸைஸ் என்கிறார் :-)).
அறிய முடியாமை (சூன்யம்) என்பதை எப்படி பதிலாக ஏற்க முடியும், அடுத்த வேளை உணவில்லையென்றால் ஞானத்தை பற்றியெல்லாம் யோசிப்போமா என்றெல்லாம் யோசித்தாலும், இதுவரை பொருளாதார ரீதியாக அடைந்தவற்றில் சிறிதைக் கூட துறக்கத் தயாரில்லாமல் ‘அறிவது’ என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கே எந்தத் தகுதியும் இல்லை என்று உணர்ந்து என் மனம் சிறுமை கொள்கிறது. இலக்கியம், அறிதல் என்றெல்லாம் பேசினாலும், ஆழ்மனதில், என் ஊழ், பொருள் ஈட்டுவதுதான் என்று அறிந்தே இருக்கிறேன். நாளை, ஒரு வேளை பெரும் பணம் ஈட்டினால், புண்ணியம்/மறுபிறவி என்றெல்லாம் யோசித்து, எந்த மடத்திற்கோ, மடாதிபதிக்கோ, கோவிலுக்கோ ஒரு பைசா கொடுக்கப் போவதில்லை. ஏனோ, விஷ்ணுபுரம், இந்தக் கருத்தை என்னுள் வலுப்படுத்துகிறது.
முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு)
தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் பதிவுகள் – அறிவிப்பு
விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்
விஷ்ணுபுரம் – வரலாறு
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்
//அடைந்தவற்றில் சிறிதைக் கூட துறக்கத் தயாரில்லாமல் ‘அறிவது’ என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கே எந்தத் தகுதியும் இல்லை//
எத்தனை சத்தியமான வார்த்தை 🙂
LikeLike
நன்றி ரமணன் :-).
LikeLike
விஸ்ணுபுறத்தின் கௌஸ்துபம் முக்கிய பகுதி என நினைத்தேன்.அதற்கு காரணம் ஓஷோவின் புத்தகங்களை படித்ததுதான். ஆனால் பிட்சுக்கள் தண்ணீரில் இறங்கும் போதுமுழு நிலவு தண்ணீரில் மலர்ந்திருப்பதாக படித்த போது என் காலுக்கு அடியில் ஓடிய பரபரப்பு என்னும் நதி நின்ற போது கௌஸ்துபத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது.வர்ணைகளின் சூட்சமத்தை ஓரளவு உணர்ந்து கொண்டேன்.
நன்றியுடன் சுரேஷ்
LikeLike