உலகின் முதல் இலக்கியம் – கில்கமேஷ் தொன்மம்

gilgamesh_enkidu_slaying_the_divine_bullகிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய (கிறிஸ்து பிறப்பதற்கு பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்) சுமேரியாவின் களிமண் சிலேட்டுகளில் கில்கமேஷ் தொன்மத்தின் சில பகுதிகள் கிடைக்கின்றன. அதற்கு முன் எத்தனை நூற்றாண்டு வாய்வழியாக இந்தத் தொன்மம் பேசப்பட்டதோ தெரியவில்லை. அவை மீண்டும் மீண்டும் பிரதி எடுக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ஸீரிய அரசனான அஷூர்பானிபாலின் நூலகத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பிரதி ஒன்றில் முழுக் கதையும் கிடைத்ததாம்.

எத்தனை பழையது என்று பார்த்தால்: ரிக் வேதம் கிட்டத்தட்ட கி.மு. 1500-1200 காலகட்டத்தில் எழுதப்பட்டது என்று யூகிக்கிறார்கள். டோரா (யூத பைபிள்) அல்லது பழைய ஏற்பாடு கி.மு. 500 வாக்கில் எழுதப்பட்டது என்று யூகிக்கிறார்கள். பார்சிகளின் ஜெண்ட்-அவெஸ்தாவும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில்தான் எழுதப்பட்டது என்கிறார்கள். சீனாவின் “Four Classics” கி.மு. நான்காம்/மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையாம். தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாம்.

எகிப்திய நாகரீகம்தான் மிகப் பழையது என்பார்கள். ஆனால் கில்கமேஷ் கதையையே ஆதி காவியம் என்று கொண்டாடுவதால் நமக்கு கிடைத்திருக்கும் எகிப்திய கதைகள் இதற்கு அப்புறம்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கில்கமேஷின் கதை மிகவும் எளிமையானது. பலசாலி அரசன் கில்கமேஷ் உருக் நகரத்தை ஆள்கிறான். அவனை எதிர்க்க யாருமில்லாததால் எல்லார் வீட்டு பெண்களிடமும் தான் இஷ்டப்பட்டபோது போய் வருகிறான். அவனுக்குப் போட்டியாக எங்கிடு என்ற காட்டு மனிதனை கடவுள்கள் உருவாக்குகிறார்கள். பெண்ணையே பார்த்திராத அவனை ஒரு தாசியின் மூலம் நகரத்துக்கு அழைத்து வருகிறார்கள். கில்கமேஷும் எங்கிடுவும் முதலில் போரிடுகிறார்கள், பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள். ஹம்பாபா என்ற ராட்சதனை வெல்கிறார்கள். இஷ்டார் என்ற பெண் கடவுள் கில்கமேஷ் மீது மோகம் கொள்கிறாள். ஆனால் கில்கமேஷ் மறுக்கிறான். ஒரு பெரும் எருதை கில்கமேஷ் மீது இஷ்டார் ஏவுகிறாள். நண்பர்கள் அதைக் கொன்று விடுகிறார்கள். கோபம் கொள்ளும் கடவுளர் இரு நண்பர்களில் ஒருவர் இறக்கட்டும் என்று சபிக்கிறார்கள். எங்கிடு இறக்கிறான். நண்பனின் சாவைக் கண்டு அஞ்சும் கில்கமேஷ் சாவை வென்ற ஒரே மனிதனான உட்னாபிஷ்டிமைத் தேடிச் செல்கிறான், சாவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறான். தோல்விதான். கடைசியில் அவன் இறப்பதோடு கதை முடிகிறது. (உட்னாபிஷ்டிம் சுமேரிய நோவா. பெருவெள்ளம் உலகை மூழ்கடிக்கும்போது தப்பிய மூதாதை.)

இதில் எத்தனை motif-கள் இந்திய, யூத, கிரேக்கத் தொன்மங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன? உட்னாபிஷ்டிம், நோவா, டியூகாலியன், மனு எல்லாரும் பெருவெள்ளத்திலிருந்து பிழைத்த மூதாதைகள்தான். எங்கிடுவை நகரத்துக்கு அழைத்து வருவது ரிஷ்யசிருங்கரை நினைவுபடுத்துகிறது. நசிகேதனைத்தான் கில்கமேஷில் பார்க்கிறோம். ஆவிகள் வாழும் பாதாள உலகத்துக்கு (underworld) சென்று திரும்பும் கிரேக்க வீரர்கள் நிறைய உண்டு. எல்லா ஊரிலும் இந்த motif-கள் இருப்பதைப் பார்க்கும்போது நிறைவாக இருக்கிறது.

சுலபமான மொழியில் படிக்க இங்கே. சுமேரிய சிலேட்டுகளின் மொழிபெயர்ப்பைப் படிக்க இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்