Espionage நாவல்களின் அரசன் ஜான் லீ காரின் பரம ரசிகன் நான். அனேகமாக அவரது அனைத்து நாவல்களை படித்து விட்டு அதன் சினிமா மற்றும் சீரியல் வெர்ஷன்களையும் தேடிப் பிடித்துப் பார்ப்பவன். மீண்டும் மீண்டும் பார்த்தும் வருபவன். அந்த வகையில் ஜான் லீ காரின் அற்புதமான romantic espionage நாவல்களில் ஒன்று இந்த Russia House. இது பின்னாளில் பழைய ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியும் மிஷைல் ஃபிஃபைரும் நடிக்க சினிமாவாகவும் வந்தது.
அந்த நாள் தொடங்கி நமது பழைய எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர்களின் சிஐடி/ஒற்றர்கள் படங்களில் எல்லாம் ஒற்றர்களின் தனி வாழ்க்கை அவர்களது சாகசங்களுடன் இணைந்தே தொடரும். ஒற்றர்களின் காதலி (ஜேம்ஸ் பாண்ட் வழக்கப்படி மனைவியாக இருக்க மாட்டார், அந்த நாள் தவிர) அம்மா, தங்கை இத்யாதிகளை எதிரிகள் கடத்திக் கொண்டு போய் மிரட்டி கடைசியில் ஹீரோ சண்டை போட்டு எதிரிகளை அழித்து மீட்டுக் கொண்டு வருவார். ஜேம்ஸ் பாண்ட் படமாக இருந்தால் காதலியைத் தியாகம் செய்து விடுவார்கள். அவருக்கோ புதுக் காதலிகள் நூற்றுக் கணக்கில் கிடைக்கும், தமிழ்ப் படங்களில் அப்படியெல்லாம் விட்டு விட முடியாது பாருங்கள்!
ஆக ஒற்றர்களின் தனி வாழ்க்கைக்கும் அவர்கள் தொழில் முறை வாழ்க்கைக்கும் தொடர்பு இருந்து கொண்டேயிருக்கும். அந்த நாளுக்குப் பிறகு தமிழில் உருப்படியான espionage படங்கள் எதுவும் வந்ததாக நினைவில்லை.
RAW ஒற்றர்களை வைத்து மிகைப்படுத்தப் பட்ட கற்பனைக் கதைகள் ஒரு சில எழுதப் பட்டுள்ளன. Patriotic Games போன்ற ஹாலிவுட் ஒற்றர் படங்களிலும் கூட ஒற்றர்களின் மனைவி குடும்பம் கதைக்குள் இழுக்கப்படுவதும் உண்டு. பெரும்பாலும் honey trap எனப்படும் உத்தி – பெண்களை வைத்து ஆட்களைக் கவர்ந்து மிரட்டி தகவல்களைப் பெறுவது – இந்தத் தொழிலில் சகஜமான ஒன்றுதான். அப்படித்தான் நம்ம சீனாத்தானா கூட எம்ஐ-5 இடம் மாட்டிக் கொண்டிருப்பதாக மன்மோகனிடம் சுப்ரமணிய சுவாமி புகார் கொடுத்திருக்கிறார்.
ஒற்றர்களின் தனிப்பட்ட உறவுகளைத் தங்களது சதித் திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமான கதைகளும் பல வந்துள்ளன. ஜான் லீ காரின் பல நாவல்களிலும் இந்தத் தனி மனிதப் பலவீனங்களையும் காதல் போன்ற உறவுகளையும் பிரிட்டிஷ் உளவு நிறுவனம் தன் வசதிக்குப் பயன் படுத்திக் கொள்வது குறித்து வருகின்றன. Smiley’s People என்னும் நீண்ட பெரும் நாவல் ரஷ்யாவின் உளவுத் தலைவரின் தனிப் பட்ட பலவீனத்தைக் கண்டுபிடித்து அதை வைத்து அவரை மிரட்டி இவர்கள் பக்கம் மாறச் செய்வது பற்றிய ஒரு முத்தொடர் நாவல்களில் ஒன்று. அது போலவே Tinker Tailor Soldier Spy என்ற கதையும் (இது இப்பொழுது ஹாலிவுட் படமாக வந்துள்ளது). லீ காரின் பிரபலமான நாவலும் சினிமாவுமான The Spy Who Came in from the Cold அந்த வகையில் ஒற்றனது காதல் வாழ்வைத் தங்கள் திட்டத்துக்குப் பயன் படுத்திக் கொண்டு காதலியைக் காவு கொடுத்து விடும் தந்திரமான ஒரு கதை. அதே பாணியில் வந்துள்ள இன்னுமொரு படம்தான் இந்த ரஷ்யா ஹவுஸ்.
ரஷ்யா ஹவுஸ் லீக்காரின் Cold War நாவல்களில் ஒன்று. சோவியத் யூனியனின் பிளவுக்கு முன்னால் நடக்கும் கதை. சோவியத்தின் அணு ஆயுத முஸ்தீபுகள் எவையும் காயலான் கடைச் சமாச்சாரம் என்பதையும் அவர்கள் சும்மா பூச்சாண்டி காட்டுகிறார்கள் ஆகவே அமெரிக்காவும் மேற்கும் சோவியத்தைப் பொருட்படுத்தித் தங்கள் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை என்றும் விளக்கி ஒரு ரகசிய manuscript-ஐ ரஷ்யாவின் ஒரு அணு விஞ்ஞானி பிரிட்டனின் புத்தகப் பதிப்பாளர் ஒருவருக்குக் கொடுத்து அதை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறார்.
நம்ம கிழக்கு பத்ரி போன்ற ஒரு பப்ளிஷரான ஷான் கானரி தானுண்டு தன் ஸ்காட்ச் உண்டு என்று இருக்கிறார். அவருக்கு வர வேண்டிய பார்சல் எம்ஐ-5 இடம் போய் விட அவர்களும் அவர்களது பங்காளிகளான சிஐஏவும் சேர்ந்து இவரை வைத்து ரஷ்ய விஞ்ஞானியிடமிருந்து அனைத்து விஷயங்களையும் கறந்து விட வேண்டும் என்று தீர்மானித்து பதிப்பாளரான கானரியை அழைத்து வந்து அவரை ஒரு ஒற்றராக மாற்றி மாஸ்கோவுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
மாஸ்கோவுக்குப் போகும் கானரிக்கு வேறொரு அதிர்ஷடம் அடித்து விடுகிறது. அவர் தன்னை அனுப்பியவர்களைக் கிறுக்கர்களாக்கி விடுகிறார். எந்தவொரு லீ காரின் சினிமா போலவே ஒரு ஆர்ட் ஃபிலிமுக்குரிய நிதானத்துடன் நகரும் ஒரு வித்தியாசமான espionage காதல். பதிப்பகத்தார்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு வரலாம் என்பதை நம் ஊர் பதிப்பகத்தார்கள் கவனத்தில் கொண்டு காத்திருக்கவும் :))
சோவியத் நாடுகளும், நேச நாடுகளும் மீண்டும் மீண்டும் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இடையில் மாட்டிய சிலர் அதைப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒற்று வேலை பார்க்கப் போகும் கானரிக்கு அருமையான அழகான காதலி ஒருத்திக் கிடைத்து விடுகிறாள். எம்ஐ-5 கொடுத்த காசில் புதுக் குடித்தனம் அமைத்து லிஸ்பனில் செட்டிலாகி விடுகிறார் படத்தை லிஸ்பனிலும் மாஸ்கோவிலும் எடுத்திருக்கிறார்கள். அருமையான காட்சிகளும் இசையும் நிரம்பிய ஷான் கானரி வித்தியாசமான ஒரு ரோலில் நடித்திருக்கும் படம். மிஷைல் ஃபைஃபர் போன்ற பேரழகி கிடைக்கும் என்றால் நம் பதிப்பகத்தார்களும் ஒற்றர்களாக மாறி உளவு பார்க்க கிளம்பி விடலாம்!
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், ராஜன் பதிவுகள்
தொடர்புடைய சுட்டிகள்:
சினிமாவான இன்னொரு லெ கார் புத்தகம் – A Most Wanted Man
இன்னொரு லெ கார் புத்தகம் – Our Kind of Traitor
nice write up. I have read the novel.Perhaps I had seen the film also. But it was made long ago and Rajan has reviewed it Now ! anyway it is good and concise. thanks.
LikeLike