கமல் பரிந்துரை: பெருமாள் முருகனின் “கூளமாதாரி”

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் புத்தகங்களைப் பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூளமாதாரி புத்தகத்தை பரிந்துரைத்தாராம், அதனால் இதை மீள்பதித்திருக்கிறேன்.

பெருமாள் முருகன் காட்டும் உலகங்கள் நம்பகத்தன்மை அதிகம் உடையவை. அந்த உலகங்களுக்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகம் தெரியாதவை. அவரது பலம் பலவீனம் இரண்டுமே அந்த உலகங்கள்தான். மெய்யாகத் தோன்றும் வாழ்க்கை அனுபவத்தை நமக்குக் காட்டுகிறார். அதே நேரம் அந்த உலகங்கள் எல்லாருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. நான் பண்ணையம் என்ற வார்த்தையையே நாலைந்து வருஷம் முன்னால்தான் முதல் முறையாக கேள்விப்பட்டேன். இந்த உலகம் எனக்கு முற்றிலும் அந்நியமானது.

பெருமாள் முருகன் காட்டும் உலகங்களில் வாழ்க்கை கொந்தளிப்பதில்லை, அநியாயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில்லை. வாழ்க்கை அது பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஏழாம் உலகத்தைப் படிப்பவர்களுக்கு அந்தப் போத்திக்கு தான் செய்வது பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லையே என்று நிச்சயமாகத் தோன்றும். அப்படி தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலியே போன்ற வசனங்களையும், உருப்படிகள் போத்திக்கு ஏறக்குறைய அஃறிணைதான் என்று நமக்கு உணர்த்தும் காட்சிகளையும் ஜெயமோகன் உருவாக்கி இருக்கிறார். இங்கே கவுண்டருக்கு குற்ற உணர்ச்சி கிடையாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவருக்கு அப்படி குற்ற உணர்ச்சி இல்லையே என்பது படிப்பவர்களுக்கு தோன்றிவிடுமா என்பதே சந்தேகம்தான்.

நிழல் முற்றத்தில் ஒரு டெண்டுக் கொட்டாய் சூழல் என்றால் இங்கே பண்ணையம் பார்க்கும், அதுவும் குறிப்பாக ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர் சிறுமியரின் உலகம். பதின்ம வயதுகளில் அடி எடுத்து வைத்துக் கொண்டிருப்பவர்கள். ஏழ்மை மற்றும் ஜாதீய அடக்குமுறையை தினந்தோறும் சந்திப்பவர்கள். அது அவர்களுக்கு அடக்குமுறையாகத் தெரிகிறதா என்பதே சந்தேகம்தான். அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கை அதுதான். அவர்களுக்கு கவுண்டரும் கவுண்டச்சியும் எஜமான் எஜமானி மட்டுமல்ல, வாழ்வாதாரமே அவர்கள்தான். சோறும் துணியும் கொடுப்பவர்கள். அப்பா, அம்மா, மற்ற உறவினர் எல்லாம் இரண்டாம் கட்ட பந்தங்கள்தான். அவர்கள் ஆடு மேய்ப்பதும் கிணற்றில் குதித்து நீந்துவதும் முனிக்கு பயப்படுவதும் ஆடுகள் விஷச்செடி சாப்பிட்டு இறக்கும்போது பயந்து ஊரை விட்டு ஓடிவிடுவதும் காமம் பற்றி புரிய ஆரம்பிப்பதும் தேங்காய் திருடுவதும் கவுண்டரிடம் அடி வாங்குவதும் முடியாதபோது வீட்டுக்கு ஓடுவதும் கவுண்டரின் மகனோடு ஒரு நட்பு உருவாக முயற்சிப்பதும், அந்த நட்பு உருவாகாமல் அவர்கள் அந்தஸ்து வித்தியாசம் தடுப்பதும்தான், சிறுவன் கூளையன் adult கூளமாதாரியாக மாறுவதும்தான் கதை. இதில் கதை இருக்கிறது என்றால் இருக்கிறது, இல்லை என்றால் இல்லை. எனக்கு இருக்கிறது, அவ்வளவுதான்.

பெருமாள் முருகன் தமிழின் சாதனையாளர்களில் ஒருவர். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: அவரது புடுக்காட்டி, முனி, இளன் கதைகள் சுமார்தான்.

தொடர்புடைய சுட்டிகள்:
பெருமாள் முருகனின் தளம்
பெருமாள் முருகன் பக்கம்

1 thoughts on “கமல் பரிந்துரை: பெருமாள் முருகனின் “கூளமாதாரி”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.