ஜான் ஸ்டைன்பெக்: Of Mice and Men

The best laid plans of mice and men gang aft agley

நான் முதன்முதலாகப் படித்த ஜான் ஸ்டைன்பெக் புத்தகம் இதுதான். 21-22 வயதில் படித்தேன் என்று நினைக்கிறேன். மிகவும் எளிய கதை என்று தோன்றியது. இந்த மாதிரி அற்பக் கதைகளை எழுதுபவரா ஸ்டைன்பெக் என்று அவரை மேலும் படிப்பதற்கு மனத்தடை ஏற்பட்டுவிட்டது. Grapes of Wrath படிப்பதை இத்தனை வருஷமாகத் தள்ளிப் போட்டிருக்கிறேன்.

ஸ்டைன்பெக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். பக்கத்து ஊர்க்காரர். சாலினாஸ் 75 மைல் தூரம்தான். இன்னும் நெருங்கிய ஊரான பாலோ ஆல்டோவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் (பட்டப் படிப்பை முடிக்கவில்லை). மாண்டரே நகரத்தின் பின்புலத்தில் Cannery Row என்ற நாவலை எழுதி இருக்கிறார். Grapes of Wrath அவரது மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது.

சிறிய புத்தகம்; திருப்பிப் படித்துத்தான் பார்ப்போமே என்று எடுத்தேன். முதல் பத்து பக்கங்களிலேயே என்னைக் கட்டிப் போட்டுவிட்டது. என் முந்தைய வாசிப்பின் போதாமை நன்றாகப் புரிந்தது. இப்போது அலமாரியில் Grapes of Wrath-ஐத் தேட வேண்டும்.

என்னைக் கவர்ந்தது அவரது நுட்பமான எழுத்து – craft. கலை என்பதை விட திறமை என்றுதான் சொல்ல வேண்டும். உரையாடல்கள், நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக அவை கதையின் முடிவை நோக்கிச் செலுத்துகின்றன. தேவை இல்லாத காட்சி என்று எதுவுமே இல்லை. வேலை செய்ய வேண்டிய பண்ணைக்குப் போகாமல் ஆற்றங்கரையில் இரவு தங்குகிறார்களா, அது பின்னால் ஒரு காட்சியில் பிணைக்கப்படுகிறது. வீட் (Weed) என்ற சிறு நகரத்திலிருந்து ஜார்ஜும் லென்னியும் தப்பித்து ஓடி வருகிறார்கள் என்று ஒரு முன்கதை சொல்லப்படுகிறதா, அது பின்னால் ஒரு காட்சியில் பிணைக்கப்படுகிறது. வயதான நாயை கருணைக் கொலை செய்கிறார்களா, அதுவும்.

கதையின் கருவும் பிரமாதம். உறவு, நட்பு, பந்தம் ஆகியவற்றுக்கு நாம் ஒவ்வொருவரும் அந்தரங்கத்தில் ஏங்கத்தான் செய்கிறோம். உண்மையான உறவும் பந்தமும் கிடைத்துவிட்டால் அதைத் தக்க வைத்துக் கொள்ள நிறையவே விலை கொடுப்போம். விலை கொடுக்கிறோம் என்பதே தோன்றுவதில்லை, அது ஒரு விலையாகவே தெரிவதில்லை. நிகழ்காலத்தில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் நிம்மதியான வாழ்வு என்று ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவும் நண்பர்களுக்குள்ளோ, கணவன் மனைவிக்குள்ளோ, பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளோ, அண்ணன் தங்கைக்குள்ளோ உறவினருக்குள்ளோ பகிர்ந்து கொள்ளப்பட்டால் அந்த உறவு மிக முக்கியமாக மாறிவிடுகிறது. அந்தக் கருவை அற்புதமாக விவரித்திருக்கிறார்.

ஒரு வகையில் பார்த்தால் இது நாஞ்சில் நாடனின் உலகம். என்ன நாஞ்சில் நாடனின் பாத்திரங்களுக்கு சொந்த ஊர், அங்கே பந்தங்கள் என்று வலுவான பின்புலம் இருக்கும். இங்கே இரண்டு வேரில்லாத நண்பர்கள்.

என்ன கதை? லென்னி மனதளவில் குழந்தைதான், ஆனால் உடல்ரீதியாக பெரிய பலசாலி. அவனது நண்பன் ஜார்ஜ். லென்னியை தாய் குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல, ஏன் செல்ல மிருகத்தைப் பார்த்துக் கொள்வது போல பார்த்துக் கொள்கிறான். லென்னிக்கு மிருதுவான எல்லாவற்றையும் தடவிக் கொடுப்பதில் மிகுந்த ஆசை. பூனை, நாய், முயல், ஏன் எலியைக் கூட தடவிக் கொடுப்பான். ஆனால் தன் பலம் தனக்கே தெரியாது, அதனால் கொஞ்சம் அழுத்திவிடுவான், அவை இறந்தே போய்விடும். வீட் என்ற சிறுநகரத்தில் ஒரு பெண் அணிந்திருந்த ஆடையைத் தடவ முயற்சி செய்கிறான், அவள் கத்துகிறாள். இவன் பயந்துபோய் இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறான். ஊரே இவர்களைத் துரத்த எப்படியோ தப்பிக்கிறார்கள். இப்போது இன்னொரு பண்ணையில் வேலைக்கு சேர்கிறார்கள்.

லென்னிக்கும் ஜார்ஜுக்கும் ஒரே கனவுதான். எப்படியாவது சொந்தமாக கொஞ்சம் நிலம் வேண்டும், அதில் விவசாயம் செய்து, கால்நடை வளர்த்து நிம்மதியாக வாழ வேண்டும். லென்னிக்கு அந்த சின்னப் பண்ணையில் முயல்களை வளர்க்க வேண்டும், அவற்றை செல்லமாகத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஜார்ஜுக்கு அப்படி ஒரு பண்ணையைத் தெரியும். ஆறேழு மாதம் வேலை செய்து சம்பளத்தைச் சேர்த்தால் வாங்கிவிடலாம். ஆனால் இது வரை முடியவில்லை. லென்னி அந்தப் பண்ணையை விவரிக்கும்படி ஜார்ஜிடம் மீண்டும் மீண்டும் கேட்பதும் ஜார்ஜ் விளக்குவதும், லென்னி இல்லாவிட்டால் தான் நிம்மதியாக இருப்பேன் என்று ஜார்ஜ் அலுத்துக் கொள்வதும், லென்னி ஏதாவது தவறு செய்தால் உன்னை முயல்களிடம் அண்டவிடமாட்டேன் என்று மிரட்டுவதும் poignant ஆக இருக்கிறது.

புதிதாக வேலைக்குச் சேரும் இடத்தில் லென்னியிடம் நீ வாயைத் திறக்காதே, வம்பில் மாட்டிக் கொண்டால் நம் கனவு நிறைவேறாது என்று ஜார்ஜ் எச்சரிக்கிறான். ஆனால் முதலாளியின் மகன் கர்லி – சமீபத்தில் திருமணமானவன் – தன் “ஆண்மையை” நிறுவ லென்னியை சண்டைக்கு இழுக்கிறான். லென்னி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க ஜார்ஜ் அவனை கட்டுப்படுத்துகிறான். இவர்கள் கனவைப் பற்றி தெரிந்து கொள்ளும் காண்டி என்ற பண்ணை ஆள் – ஒரு கையை இழந்தவன் – என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது, நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன், என்னால் கடுமையாக உழைக்க முடியாது, ஆனால் உதவியாக இருப்பேன் என்று சொல்கிறான். சிறிது தயக்கத்திற்குப் பிறகு இருவர் மூவராகிறார்கள். ஒரு மாதத்தில் தேவையான பணத்தைப் புரட்டிவிடலாம் என்று எண்ணுகிறார்கள்

கர்லியின் மனைவி தனிமையில் இருக்கிறாள். கணவனோடு அவளுக்கு செட்டாகவில்லை. அவ்வப்போது பண்ணை ஆட்களிடம் பேசுகிறாள். அது கர்லிக்கு இன்னும் ஆங்காரத்தை கிளப்புகிறது.

பண்ணையில் ஒரே ஒரு கறுப்பன்; கூனன். க்ரூக்ஸ் என்ற பெயர். அவனை எல்லாரும் தள்ளியே வைக்கிறார்கள். பண்ணை ஆட்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு அவன் வரக்கூடாது, யாரும் அவன் இருக்கும் அறைக்குப் போகமாட்டார்கள். ஒரு நாள் பண்ணையில் வேலை செய்யும் எல்லாரும் – லென்னியையும் காண்டியையும் தவிர மற்றவர்கள் – டவுனுக்குப் போகிறார்கள். அப்போது கறுப்பு-வெள்ளை எல்லாம் புரியாத லென்னி அந்தக் கறுப்பனின் அறைக்குப் போகிறான். நிறம் ஒன்றாலேயே தனிமைப்பட்டிருக்கும் க்ரூக்ஸ் லென்னி மீது இங்கே வராதே என்று எரிந்து விழுகிறான். லென்னிக்குப் புரியவே இல்லை. பிறகு லென்னி தன் கனவுப் பண்ணையைப் பற்றி சொல்கிறான். இதெல்லாம் நடக்காத விஷயம், இப்படித்தான் எல்லாரும் சொல்வார்கள், ஆனால் யாரும் செய்ததில்லை என்று அஸ்து பாடிவிட்டு, நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன் என்று வேண்டுகிறான். மனதைத் தொட்ட இடங்களில் இது ஒன்று. நடக்க வாய்ப்பில்லைதான், ஆனால் நடந்தால்? தானும் தனியனாக வாழாமல் நண்பர்களோடு வாழ முடிந்தால்?

அவர்கள் பேசும்போது கர்லியின் மனைவி அங்கு வருகிறாள், தான் நடிகை ஆகி இருக்கலாம், இங்கே தனிமை, இந்த மாதிரி ஒரு அரைப் பைத்தியத்தோடும், கறுப்பனோடும் மனம் விட்டுப் பேசுவதே பெரிய விடுதலையாக இருக்கிறதே என்று அலுத்துக் கொள்கிறாள். அதுவும் poignant ஆன ஒரு காட்சி.

லென்னிக்கு மிருதுவான பொருட்களைத் தடவிக் கொடுப்பதில் ஆசை என்று தெரிந்ததும் என் தலை முடியைத் தடவிப் பார் என்கிறாள். லென்னி தடவ ஆரம்பிக்கிறான், அவள் நிறுத்தச் சொன்னால் லென்னிக்கு எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. அழுத்துகிறான், அவள் இறந்து போகிறாள்.

லென்னி என்ன செய்வான்? ஜார்ஜ் எப்படி சமாளிக்கிறான்? இதுதான் கடைசிக் காட்சி.

ஸ்டைன்பெக் இந்த நாவலில் முக்கியப் பாத்திரங்கள் போல பண்ணை ஆளாக வேலை பார்த்தாராம். அதனால்தானோ என்னவோ அவர் காட்டுவது மெய்நிகர் உலகமாக இருக்கிறது. இன்றும் இருக்கும் உலகம்தான் என்று தோன்றுகிறது.

ஸ்டைன்பெக் இந்த சிறு நாவலை மிகத் திறமையாக எழுதி இருக்கிறார். பாத்திரப் படைப்பு, தனிமை, பந்தம், நட்பு, கனவு, உறவு எல்லாவற்றையும் மிக அருமையாக கொண்டு வந்திருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜான் ஸ்டைன்பெக் பக்கம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.