Daphne du Maurier: Birds

இன்று டு மாரியர் நினைவு கூரப்படுவதே Birds (1952) சிறுகதை மூலம்தான். அவரது Rebecca நாவலைக் கூட இன்று யாரும் படிப்பதில்லை என்றுதான் நினைக்கிறேன். இதுவும் திரைப்படமாக வந்திருக்காவிட்டால் பொதுப் பிரக்ஞையில் இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான்..

சிறந்த சிறுகதை. சிறுகதை ஏற்படுத்தும் பயங்கர உணர்வு அருமை.

கதையை ஒற்றை வரியில் சுருக்கிவிடலாம். திடீரென்று பறவைகள் – ஆயிரக்கணக்கானவை மனிதர்களைத் தாக்குகின்றன, கொல்கின்றன. அவ்வளவுதான் கதை. யோசித்துப் பாருங்கள், உங்கள் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள், ஏதோ ஒரு திறப்பு வழியாக நூறு குருவிகளும் காக்கைகளும் புறாக்களும் கழுகுகளும் உங்களை, உங்கள் குழந்தைகளைத் தாக்குகின்றன. அந்தக் காட்சி தரும் பயங்கர உணர்வை டு மாரியர் வெற்றிகரமாக சித்தரிக்கிறார்.

கதை திறமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

On December the third, the wind changed overnight, and it was winter

என்ற முதல் வரியிலேயே ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. மெதுமெதுவாக ஒரு கடல்புற விவசாய கிராமம், ஒரு பறவை இரவில் தாக்குவது, குழந்தைகள் அறையில் பல பறவைகள் தாக்குவது, பிரச்சினை விவரிக்கப்படும்போது யாரும் நம்பாதது, பிறகு நாடு முழுதும் இந்தப் பிரச்சினை என்று வானொலி மூலம் தெரிய வருவது என்று கதையை அருமையாகக் கட்டமைத்திருக்கிறார்.

டு மாரியர் ஒரு கடற்பறவை (sea gull) யோரோ ஒருவரைத் தாக்குவதைத் தானே பார்த்தாராம். அந்தக் கருதான் இந்தக் கதையானதாம். திரைப்படம் வெளியாவதற்கு முன் கலிஃபோர்னியாவில் பறவைகள் 1961-இல் மனிதர்களைத் தாக்கினவாம். (பிற்காலத்தில் கடற்பாசி விஷமாகிவிட்டதுதான் இதற்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டதாம்.)

ஏற்கனவே சொன்ன மாதிரி இந்தக் கதை நினைவு கூரப்படுவதற்கு திரைப்படம் (1963) முக்கியமான காரணம். திரைப்படம் ஒரு கிளாசிக். ஹிட்ச்காக் இயக்கியது. இத்தனைக்கும் முதல் ஒரு மணி நேரம் தேவை இல்லாத பில்டப் கொடுத்து நம் பொறுமையை சோதிப்பார். அழகான Bodega Bay, அழகான டிப்பி ஹெட்ரன்தான் அந்த முதல் ஒரு மணி நேரத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றுகிறார். (இன்றும் Bodega Bay-யில் இங்குதான் Birds திரைப்படம் படமாக்கப்பட்டது என்று சில இடங்களைக் காட்டுகிறார்கள்.) ஆனால் பறவைகள் தாக்குவதை என்னதான் வார்த்தைகளில் விவரித்தாலும் காட்சிப்படுத்துவதில்தான் அந்த பயங்கரம் இன்னும் நன்றாக மனதில் பதியும்.

சிறுகதையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். கொஞ்சம் தம் கட்டி திரைப்படத்தையும் பாருங்கள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டிகள்:
Birds சிறுகதை – மின்பிரதி
டாஃப்னே டு மாரியர் விக்கி குறிப்பு

1 thoughts on “Daphne du Maurier: Birds

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.