துப்பறியும் கதைகளில் அறம் – டிக் ஃப்ரான்சிசின் சிட் ஹேலி

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு)
துப்பறியும் சாகசக் கதைகளில் என் எதிர்பார்ப்புகள் குறைவு. முதல் தேவை கதை விறுவிறுவென்று போக வேண்டும் அல்லது நல்ல முடிச்சு இருக்க வேண்டும். இரண்டுமே இருந்தால் இன்னும் உத்தமம். இரண்டாவது தேவை தர்க்க ரீதியான ஓட்டைகள் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் அவற்றை கவனிக்கக் கூட நேரம் இருக்கக் கூடாது, அவ்வளவு விறுவிறுவென்று போக வேண்டும். இவற்றைத் தாண்டி மேலும் பலங்கள் தென்படும் கதைகள் எனக்குப் பொதுவாகப் பிடித்துப் போகின்றன.

சிட் ஹேலி வலிமையான அற உணர்வு (honor code), தன்புரிதல் உள்ள நாயகன். அறம் உள்ள துப்பறிபவர்களில் ஷெர்லாக ஹோம்ஸ் பற்றி புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. டாஷியல் ஹாம்மெட் மற்றும் ரேமண்ட் சாண்ட்லரின் நாயகர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஹேலி இந்த நாயகர்கள் வரிசையில் வைக்கக் கூடியவன்.

Dick_Francisஎனக்குப் பிடித்த துப்பறியும்/சாகசக் கதை எழுத்தாளர்களில் டிக் ஃப்ரான்சிசுக்கு ஒரு இடம் உண்டு. 30, 35 நாவல்கள், சில சிறுகதைகள் எழுதி இருக்கிறார், அதில் எனக்கு ஒரு பத்து நாவலாவது தேறும்.

டிக் ஃப்ரான்சிஸ் எனக்குப் பிடித்துப் போக முக்கியக் காரணம் ஃப்ரான்சிசின் நாயகர்களிடம் இருக்கும் வலுவான அற உணர்வு (honor code), மற்றும் உணர்வுகளுக்கு உரிய இடம் கொடுத்து தர்க்க ரீதியாக சிந்தித்து – சரியாக கணக்குப் போட்டு – வெல்லுதல். ஃப்ரான்சிசின் நாயகர்கள் யாரும் ஒரு செயல் தன்னுடைய அறத்தை மீறுவது என்று உணர்ந்தால் என்ன விலை கொடுத்தாலும் அந்தச் செயலைச் செய்ய மாட்டார்கள். எந்த பிரச்சினை வந்தாலும் கலங்காமல் தீர்வு காண முயற்சிப்பார்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாக மாட்டார்கள், ஆனால் உணர்ச்சிகளுக்கு உரிய இடம் தரப்பட வேண்டும் என்று புரிதல் உள்ளவர்கள். அவர்களுடைய அற உணர்வில் கருணை போலவும் ஒன்று தெரியும். தண்டனை தருவதை விட, பழி வாங்குவதை விட பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். உண்மையில் அது கருணை அல்ல, கணக்கு. இந்த வில்லனுக்கு முழு தண்டனை பெற்றுத் தந்தால் அதற்கு தானும் தன்னவர்களும் இப்போதும் எதிர்காலத்திலும் என்ன விலை தர வேண்டி இருக்கும், அந்த விலையைத் தருவது சுலபமாக கஷ்டமா, கஷ்டம் என்றால் ஏதாவது சமரசத்துக்கு வருவது உத்தமம் என்ற கணக்கு. சுருக்கமாகச் சொன்னால் தன்னை, தன் honor code-ஐ நன்றாகப் புரிந்து கொண்ட செயல் வீரர்கள். இத்தனைக்கும் அவரது நாயகர்கள் – எல்லாரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள்தான். ஆனால் எனக்கு அந்த அச்சு அலுக்கவே இல்லை.

அவரது நாவல்களில் எனக்கு முதல் வரிசையில் இருப்பவை சிட் ஹேலி நாவல்கள். சிட் ஹேலியும் வலுவான அற உணர்வு, honor code கொண்டவன்தான். ஆனால் மற்றவர்களை விட honor code-க்கு இன்னும் அதிகமான விலை கொடுக்க வேண்டிய சூழல். சிட் ஹேலி ஒரு முதல் வரிசை, சாம்பியன் ஜாக்கி. ஒரு குதிரைப் பந்தய விபத்தில் – முதல் நாவலின் பின்கதையிலேயே – ஒரு கை செயலிழந்து விடுகிறது. இழப்பு, கை போனதால் தான் வாழ்விற்கு அர்த்தம் தந்த ஜாக்கி தொழிலை கைவிட வேண்டிய நிலை, மணமுறிவு ஆகியவற்றால் தன் செயலூக்கத்தை முற்றிலும் இழக்கிறான். அந்த விரக்தியிலிருந்து மீள வருஷங்கள் ஆகின்றன. ஆனால் இப்போது இன்னொரு கையையும் இழக்கக் கூடாது என்ற அச்சம் சில சமயம் அவனை அறம் பிறழ வைக்கிறது. வில்லன்கள் சில சமயம் இன்னொரு கையையும் வெட்டிவிடுவேன் என்று பயமுறுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த அச்சத்தை வென்று தன் செயலூக்கத்தை மீண்டும் அடைகிறான். தன் சுயமதிப்பை இழப்பது கையை இழப்பதை விட சகித்துக் கொள்ள முடியாத நிலை என்ற புரிதல் அவன் சித்திரத்தை உணர்த்துகிறது. எந்த நேரத்திலும் வழி தவறாத பிற நாயகர்களை விட தோல்வி என்றால் என்ன, தன் அறத்தை மீறுவது என்றால் என்ன என்ற புரிதல் உள்ள சிட் ஹேலியின் பாத்திரப் படைப்பு இன்னும் ஒரு மாற்று உயர்வாக இருக்கிறது. மீண்டு வரும் redemption சித்திரம் அவனது பாத்திரப் படைப்பை இன்னும் நம்பகத்தன்மை உடையதாக ஆக்குகிறது. இத்தனைக்கும் மீட்சி இந்தக் கதைகளின் முக்கியக் கரு இல்லைதான், இருந்தாலும் அது அடிநாதமாக அது இருப்பது ஹேலி நாவல்களை மேலும் உயர்த்துகிறது. ஹேலி தேரின் சக்கரங்கள் பூமிக்கு அரை அடி மேலேயே இருக்கும் யுதிஷ்டிரன் இல்லை, அவன் தன் பலவீனங்களையும் வெல்லும் வீரன். அந்தச் சித்திரம் ஹேலியை இன்னும் கவர்ச்சிகரமான நாயகனாக ஆக்குகிறது.

பொதுவாக ஃப்ரான்சிசின் நாயகர்கள் ஒரே ஒரு நாவலில்தான் வருவார்கள். ஹேலி விதிவிலக்கு. நான்கு நாவல்களை டிக் ஃப்ரான்சிசும் (Odds Against, Whiphand, Come to Grief, Under Orders) எழுதினார். டிக் ஃப்ரான்சிஸ் இறந்து சில வருஷங்கள் ஆகிவிட்டன. அவரது மகனான ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிஸ் அதே பாணியில், பின்புலத்தில் நாவல் எழுத முயற்சிக்கிறார். ஃபீலிக்ஸால் அப்பாவின் தரத்தை எட்ட முடியவில்லை. அவரால் ஓரளவு விறுவிறுப்பான கதைகளை எழுத முடிகிறது, ஆனால் அப்பாவின் நாயகர்களிடம் இருக்கும் நாயகத் தன்மையை அவரால் தன் நாவல்களில் கொண்டு வரமுடியவில்லை. பின்புலம் அதே குதிரைப் பந்தய பின்புலம்தான். அப்பாவின் கரு (plot) ஒன்றை வைத்து Refusal என்று ஹேலி நாவலையும், அவரே சொந்தமாக Hands Down என்ற நாவலையும் எழுதி இருக்கிறார்.

ஹேலிக்கு என் மனதில் இருக்கும் இடம் முதல் இரு புத்தகங்களால் (Odds Against, Whiphand) மட்டுமே உருவானது. மூன்றாவது புத்தகமான Come to Grief-இல் ஹேலியின் மனப் போராட்டங்கள் குறைவாகச் சித்தரிக்கப்படுகின்றன. நான்காவது புத்தகமான Under Orders-இல் இன்னும் குறைவு. பிற புத்தகங்களில் சாகசம் இருக்கும் ஆனால் மனப் போராட்டங்கள், அறத் தடுமாற்றங்கள் எதுவும் இருக்காது. சுவாரசியமாக இருக்கும், படிக்கலாம், ஆனால் சாகச நாவல்கள் மட்டுமே.

ஃப்ரான்சிசைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். யாருக்கும் நினைவிருக்கப் போவதில்லை என்பதால் மீண்டும் ஒரு முறை. குதிரைப் பந்தயம் பல மேலை நாடுகளில் பெரிய தொழில். ஃபிரான்சிஸ் ஒரு முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி – அதுவும் steeplechase ஜாக்கி. இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் குதிரைகளை எல்லாம் ரேசில் ஓட்டி இருக்கிறார். ஜாக்கி தொழிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எழுத ஆரம்பித்தார். எல்லாமே குதிரைப் பந்தய பின்புலம் உள்ள த்ரில்லர்கள். பலதரப்பட்ட தொழில் செய்பவர்கள் நாயகனாக வருவார்கள். ஆனால் எல்லாருக்கும் குதிரை பந்தய பின்புலம், அதுவும் steeplechase பின்புலம் இருக்கும். குதிரை வாங்க கடன் கொடுத்த வங்கி அதிகாரி, குதிரைப் பந்தயம் பற்றி எழுதும் பத்திரிகையாளர், குதிரை ரேஸ் உலகத்தில் துப்பறிபவர், ஜாக்கிகளை ஒரு ரேஸ் கோர்சிலிருந்து இன்னொன்றுக்கு commuter plane ஒன்றில் அழைத்துச் செல்லும் விமான ஓட்டி, குதிரைத் தரகர், ரேஸ்கோர்ஸ் நிறுவன பங்குதாரர் இத்யாதியினர். சில சமயம் ஹீரோ ஃப்ரான்சிசைப் போலவே ஒரு ஜாக்கியாகவும் இருப்பார். அப்படி ஜாக்கியாக இருந்தால் அவர்களது வாழ்வின் அர்த்தமே குதிரைகளை பந்தயத்தில் ஓட்டுவதாகத்தான் இருக்கும்.

ஃப்ரான்சிஸ் சூத்திரத்தில் நாயகன் வில்லன்களிடம் பயங்கர அடி வாங்கும் காட்சி ஒன்று இருக்கும். பல நாவல்களில் அதுவே புத்தகத்தின் உச்சக்கட்டம். அடி என்றால் உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை. Nerve நாவலில் heating இல்லாத குதிரை லாயத்தில் கைகளை மேலே தூக்கி கட்டிவிட்டு கூரையிலிருந்து தொங்கவிட்டுவிட்டு வில்லன் போய்விடுவான். ஹீரோ நாலைந்து மணி நேரம் அப்படி தொங்க வேண்டி இருக்கும். Forfeit-இல் ஹீரோ விஸ்கியை raw ஆக இரண்டு முழு டம்ளர் குடித்துவிட்டு கார் ஓட்ட வேண்டி இருக்கும்.

ஹேலிக்குப் பெரிய பின்கதை உண்டு. ஹேலி ஒரு காலத்தில் நம்பர் ஒன் ஜாக்கி. பரம ஏழைப் பின்புலத்திலிருந்து துவங்கி பணம், புகழ், அழகான மேல்குடி குடும்ப மனைவி ஜென்னி என்று எல்லா விதத்திலும் வெற்றி. ஜாக்கிகளின் வாழ்வில் கீழே விழுவது, அடிபடுவது, எலும்புகள் உடைவது எல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள். ஜென்னியால் அந்த டென்ஷனைத் தாங்க முடியவில்லை. குதிரைப் பந்தயத்தில் பங்கேற்பதை நிறுத்தும்படி மன்றாடுகிறாள். கடைசியில் விவாகரத்தே ஆகிவிடுகிறது. விவாகரத்து ஆன ஆறாவது மாதத்தில் ஒரு குதிரைப் பந்தய விபத்தில் ஹேலியின் ஒரு கை நரம்புகள் துண்டிக்கப்படுகின்றன. பேருக்குத்தான் கை, அதை பயன்படுத்த முடியாது. ஜாக்கி வாழ்க்கை முடிவடைந்துவிடுகிறது. (பிற்காலத்தில் கை துண்டிக்கவே படுக்கிறது, செயற்கைக் கை (prosthesis) பயன்படுத்த வேண்டி இருக்கிறது.) ஹேலியின் ஒரே நண்பன், மற்றும் mentor ஜென்னியின் அப்பா, அவனது முன்னாள் மாமனார், அட்மிரலாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ். தன் இரண்டாவது வாழ்க்கையில் ஹேலி துப்பறிபவனாக – அதுவும் குதிரைப் பந்தய உலகத்தில் தலையாயத் துப்பறிபவனாக – பரிணமிக்கிறான்.

எல்லா ஹேலி கதைகளிலும் அங்கஹீனம் அதிலும் கை இழப்பு ஒரு முக்கியமான கரு (motif). கை இழப்பும், தீப்புண் படிந்த முகமும் ஒரு கதையில். இன்னொரு கையையும் இழந்து விட நேருமோ என்ற அச்சம் சில கதைகளில், வில்லனே கையை இழப்பது ஒரு கதையில், குதிரைகளின் கால்கள் துண்டிக்கப்படுவது ஒரு கதையில், மாற்றுக்கை வைக்கப்பட்டு அது வேறு ஒருவனால் தொடப்படுவதைப் போன்ற உணர்ச்சியை மனைவியிடம் உண்டாக்குவது ஒரு கதையில்…

dick_francis_whiphandஎனக்கு மிகவும் பிடித்த ஹேலி நாவல் Whiphand (1979).

ஹேலி இப்போது துப்பறியும் துறையில் புகழ் பெற்றுவிட்டான். அவன் நம்மை மோப்பம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான் என்றால் வில்லன்களுக்கு கொஞ்சம் கலக்கம் ஏற்படும் அளவுக்கு முன்னேறி இருக்கிறான். ஜார்ஜ் என்ற ஒரு முக்கிய ட்ரெய்னரின் குதிரைகள் – ரேஸ்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் சில குதிரைகள் எதிர்பாராத விதமாகத் தோற்கின்றன. சில சமயம் நடப்பதுதான், அதனால் ஜார்ஜ் உட்பட யாருக்கும் பெரிய சந்தேகம் ஏற்படவில்லை. ஜார்ஜின் மனைவி ரோஸ்மேரி ஹேலியை ஜார்ஜுக்குத் தெரியாமல் துப்பறியச் சொல்கிறாள். முக்கியமாக அடுத்த குதிரையைக் காக்கும்படி கேட்டுக் கொள்கிறாள். ஹேலிக்கே இங்கே ஏதோ வில்லத்தனம் நடக்கிறது என்று பெரிதாக சந்தேகம் இல்லை. இருந்தாலும் அங்கும் இங்கும் விசாரிக்கிறான். வில்லன் ட்ரெவர் பெட்டிங் ப்ரோக்கர், பயப்படுகிறான். ஹேலியை நீ இதைத் தொடர்ந்தால் உன் இன்னொரு கையையும் வெட்டிவிடுவேன் என்று பயமுறுத்துகிறான்.

ஒரு கை இல்லை என்ற நிலையை சமாளித்து மீண்டும் வாழ ஆரம்பிக்க ஹேலிக்கு சில வருஷங்கள் ஆனது. இரண்டு கையும் இல்லை என்ற நிலையை எதிர் கொள்ள முடியாத ஹேலி இங்கிலாந்தை விட்டே ஓடிவிடுகிறான். ஹேலி காக்க வேண்டிய குதிரை தோற்கிறது.

ஆனால் ஓடி ஒளிந்து கொண்டு தன்னால் வாழ முடியாது, அப்படி வாழ்வது தன்னைப் பொறுத்த வரையில் வாழ்க்கையே இல்லை என்பதை ஹேலி ஓரிரு வாரத்தில் புரிந்து கொள்கிறான். மீண்டும் வருகிறான். ட்ரெவர் மட்டுமில்லை, வேறு சில வில்லன்களும் அவன் பின்னால். வழக்கம் போல அடி விழுகிறது. நாயகர்கள் எப்போதும் வெல்லத்தானே வேண்டும்? வில்லன்கள் தோற்கிறார்கள், ட்ரெவர் ஜெயிலுக்குப் போக வேண்டியதில்லை என்றாலும் அவன் தொழில், பணம் எல்லாம் அழிகிறது.

புத்தகத்தின் கடைசி காட்சியில் ட்ரெவர் ஹேலியின் இன்னொரு கையை வெட்ட அவன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறான். ஹேலியால் தப்பிக்க முடியாது. என்ன முடிவு என்பதை வெள்ளித்திரையில் காண்க. 🙂

ஹேலி கதைகளில் ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

dick_francis_odds_againstஇதற்கு முந்தைய கதையான Odds Against (1965) ஹேலியின் குதிரைப் பந்தய விபத்துடன் ஆரம்பிக்கிறது. குதிரை ஓட்டுவதே வாழ்வின் அர்த்தம், அதற்காக மனைவியையும் விவாகரத்து செய்யலாம் என்று வாழ்ந்த ஹேலி பெரும் விரக்தி அடைகிறான். ஒரு துப்பறியும் நிறுவனத்தில் பேருக்கு வேலை செய்கிறான். அதீத மனச்சோர்வு (Depression). இரண்டு வருஷம் இப்படியே சாரமில்லாத வாழ்வு. கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது. முதல் காட்சியில் அவன் சுடப்படுகிறான். உயிருக்கு ஆபத்தில்லை. (நாயகன் இல்லையா?) அந்த நிகழ்ச்சி அவனுக்கு மீண்டும் வாழ இச்சை தருகிறது. சார்லஸ் வாழ்வில் மீண்டும் சுவாரசியம் வர அவனுக்கு ஒரு வில்லனைக் காட்டுகிறார். அந்த வில்லன் ஒரு ரேஸ்கோர்ஸை இடித்து அங்கே ரியல் எஸ்டேட் தொழில் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அவனைத் தடுக்கும் முயற்சியில் மெதுமெதுவாக ஹேலி வாழ்வுக்குத் திரும்புகிறான். நாவலின் முடிவில் வில்லன் அந்த உபயோகமற்ற கையை போட்டு அடிக்கும் அடியில் கையை வெட்டிவிடுகிறார்கள். கதையின் சிறந்த இடம் தன் கையைப் பற்றிய இழிவுணர்ச்சியை ஹேலி எதிர்கொள்ளும் விதம்தான். அவன் சந்திக்கும் ஒரு பெண்ணின் முகத்தின் ஒரு பாதியில் பெரும் தீக்காயம். அவர்கள் இருவரும் தங்கள் பயங்களை மற்றொருவர் உதவியுடன் எதிர்கொள்கிறார்கள்.

இரண்டு கதைகள் படிக்க வேண்டுமென்றால் இதையும் பரிந்துரைப்பேன்.

Come to Grief (1995) படிக்கக் கூடிய சாகச நாவல். சில சமயம் பரஸ்பரம் முழுமையாகப் புரிந்து கொள்ளும் நண்பர்கள் அமைகிறார்கள். அப்படி ஒரு நண்பன் குரூரமான செயல்களைப் புரிபவனாக மாறினால்? சிட் ஹேலியின் நண்பன், முன்னாள் சக ஜாக்கி எல்லிஸ் க்விண்ட் இன்று தொலைக்காட்சி பிரபலம். திடீரென்று பல குதிரைகளின் முன்கால்கள் துண்டிக்கப்படுகின்றன. மக்களிடம் பெரும் அருவருப்பை (aversion) ஏற்படுத்துகிறது. க்விண்ட்தான் இதைச் செய்கிறான் என்று ஹேலிக்கு சீக்கிரமே புரிந்துவிடுகிறது. ஆனால் நிரூபிக்க முடியவில்லை. ஒருவர் பற்றி மற்றவருக்கு இருக்கும் புரிதல், ஆழத்தில் இருக்கும் நட்புணர்வு முடிவுக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. க்விண்ட் ஹேலியின் இன்னொரு கையையும் ஏறக்குறைய செயலிழக்கச் செய்யப்போகும்போது ஹேலி இன்னும் மனம் தளராததைக் கண்டு, கொஞ்சம் பழைய நிலைக்கு மீண்டு அவனுக்கு தப்ப ஒரு சின்ன வாய்ப்பு கொடுப்பது நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

Under Orders (2006) நாவலில் ஒரு ஜாக்கி குதிரைப் பந்தய மைதானத்தில் பந்தயம் நடக்கும்போதே சுட்டுக் கொல்லப்படுகிறான். சில நாட்களில் அவன் ஓட்டிய குதிரையின் பயிற்சியாளரும். ஹேலி துப்பறிய ஆரம்பித்தத்தும் அவனுடைய girlfriend தாக்கப்படுகிறாள். தான் எவ்வளவு தாக்கப்பட்டாலும் தயங்காத ஹேலி தோழிக்கு ஆபத்து என்றதும் கொஞ்சம் தயங்குகிறான். பிறகு தோழியே ஊக்குவிக்க வில்லன்களை கண்டுபிடிக்கிறான்.

ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிஸ் எழுதிய Refusal (2013) நாவலில் ஹேலி துப்பறியும் தொழிலை விட்டாயிற்று. ஆனால் ஒரு வில்லன் ஹேலியைத் தனக்குப் பணிந்து நடக்க வேண்டுமென்று மிரட்டுகிறான். ஹேலி எதிர்க்க வில்லன் மேலும் மேலும் ஹேலி மீது அழுத்தம் தரும் காட்சிகள்தான் கதையின் சுவாரசியம். ஹேலியின் ஆறு வயதுப் பெண்ணை சில மணி நேரம் கடத்திக் கொண்டு போய் திரும்பிக் கொடுக்கிறான். ஹேலி அப்படியும் ஒத்துழைக்காததால் ஹேலி தன் தனது பெண்ணையும் அவளது இன்னொரு தோழியையும் பாலியல் ரீதியாக சீண்டுகிறான் என்று பொய் வழக்கு ஒன்றைப் போட வைக்கிறான். ஹேலி இன்னும் முரண்டு பிடித்தால் அவன் குடும்பத்தையே எரிக்க முயற்சிக்கிறான்.

ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிஸ் எழுதிய Hands Down (2022) நாவலில் ஒரு சுவாரசியமான கரு; ஹேலிக்கு இப்போது கைமாற்று சிகிச்சை நடந்து ரத்தமும் சதையும் உள்ள மாற்றுக் கை இருக்கிறது. மனைவி நீ தொட்டால் வேறு யாரோ ஒருவன் தொடுவது போல இருக்கிறது என்கிறாள். ஆனால் இந்தக் கருவை பெரிதாக எடுத்துக் கொண்டு போகவில்லை. முக்கியச் சரடில் ஹேலி துப்பறியும் தொழிலையே விட்டாயிற்று; ஆனால் ஒரு பழைய நண்பன் பெரிய அளவில் ஏமாற்றுவேலை நடக்கிறது, உதவி செய், கண்டுபிடி என்கிறான். சொன்ன இரண்டு மூன்று நாளில் அவன் இறக்கிறான். காவல் துறை தற்கொலை என்று நினைக்கிறது. ஹேலி வழக்கம் போல வில்லன்களை கண்டுபிடிக்கிறான்.

ஹேலி நாவல்களைப் பரிந்துரைப்பேன் என்றாலும் ஒரே ஒரு ஃப்ரான்சிஸ் நாவல் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Forfeitதான் (1968). Nerve (1964) இன்னொரு சிறந்த சாகச நாவல். Enquiryயையும் (1969) இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
Forfeit
Nerve
Enquiry
டிக் ஃப்ரான்சிஸ் நாவல்கள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.