டிக் ஃபிரான்சிஸின் மாஸ்டர்பீஸ் த்ரில்லர் – “Forfeit”

(மீள்பதிவு)

டிக் ஃபிரான்சிஸ் எனக்குப் பிடித்த திரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர். முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. எல்லா நாவல்களும் குதிரைப் பந்தய பின்புலம் உடையவை. அவருடைய நாயகர்கள் எல்லோரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள். strong ethical core உடையவர்கள். ப்ராக்டிகல் ஆனவர்கள். எதிரிகளைப் பழி வாங்குவதை விட பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். ஒரு ஆறேழு நாவல்களாவது எனக்குப் பிடித்தவை. (சொதப்பியும் இருக்கிறார்.)

அவருடைய வேறு சில நாவல்களைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். ஒரே ஒரு டிக் ஃபிரான்சிஸ் புத்தகம் படிக்க வேண்டுமென்றால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

கதையின் ஆரம்பக் காட்சியில் ஒரு பத்திரிகையாளர் – பெர்ட் செகாவ் – குடிபோதையில் இருக்கிறார், நாயகனும் பத்திரிகையாளனும் ஆன ஜேம்ஸ் டைரோனிடம் உன் எழுத்தை விற்காதே என்று அறிவுரை சொல்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு செகாவ் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்து போகிறார். டைரோன் ஒரு முக்கியமான ரேஸ் பற்றி ஒரு general interest கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த ரேசில் பங்கு பெறும் இரண்டாம் நிலை குதிரைகளைப் பற்றி எழுதுகிறார். அதற்காக பழைய ரேஸ் முடிவுகளைப் புரட்டும்போது செகாவ் பரிந்துரைக்கும் குதிரைகள் அடிக்கடி ரேசிலிருந்து விலகிவிடுகின்றன என்று டைரோன் புரிந்து கொள்கிறார். சதி நடக்கிறது என்று பத்திரிகையில் எழுதுகிறார், இந்த ரேசில் பங்கு பெறும் குதிரைகளைப் பாதுகாக்க முயற்சி எடுக்கிறார். என்ன சதி என்று கண்டுபிடிப்பதுதான் கதை.

டைரோனின் மனைவி போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். முகத்துக்குக் கீழே அவருக்கு எதுவும் சரியாக செயல்படுவதில்லை. iron lung என்று சொல்லப்படும் கருவி மூலம்தான் சுவாசமே. மனைவிக்கு எப்போதும் உள்ளூர பயம்; எப்போது தன் சுமையின் பாரம் தாங்காமல் டைரோன் தன்னைக் கை கழுவிவிடுவாரோ என்று. டைரோனோ மனைவியைப் பார்த்துக் கொள்வதை தான் வழுவ முடியாத கடமையாக நினைக்கிறார். வில்லன்களுக்கு blackmail செய்ய அருமையான வாய்ப்பு இல்லையா? செய்கிறார்கள். அந்தக் காட்சிதான் கதையின் உச்சக்கட்டம்.

டைரோன்-மனைவி உறவு, டைரோனின் “கள்ளக் காதல்”, டைரோனின் மன உறுதி ஆகியவைதான் இந்த நாவலை உயர்த்துகின்றன. ஒரே ஒரு டிக் ஃபிரான்சிஸ் நாவல் படிக்க வேண்டுமென்றால் இதைத்தான் சிபாரிசு செய்வேன்.

1968-ஆம் ஆண்டு வெளி வந்த நாவல். துப்பறியும் நாவல்களின் ஆஸ்கார் ஆன எட்கர் விருது பெற்றது.

தொடர்புடைய சுட்டிகள்:
டிக் ஃபிரான்சிசின் நாவல்களைப் பற்றிய முந்தைய பதிவுகள் – நெர்வ், என்கொயரி
டிக் ஃபிரான்சிசின் தளம்