ஐசக் பாஷவிஸ் சிங்கர்

1978-இல் நோபல் பரிசு வென்றவர் ஐசக் பாஷவிஸ் சிங்கர். சிங்கர் யூதர். போலந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். யிட்டிஷ் மொழியில் மட்டுமே எழுதினார்.

சில சிறுகதைகளே படித்திருக்கிறேன், என்றாலும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். Gimpel the Fool சிறுகதையைப் பற்றி கொஞ்சம் விவரமாக இங்கே.

Spinoza of the Market Street சிறுகதையை ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் படிக்கலாம்.சிம்பிளான காதல் கதையாக, ஆராய்ச்சியிலும் படிப்பிலும் வாழ்க்கையை கழித்துவிட்ட கிழத்துக்கு வாழ்க்கை புரியும் கதையாக, தான் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையைப் பார்த்த கோணம் திடீரென்று விரிவடையும் கதையாக, எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். படியுங்கள்! நல்ல சிறுகதை.

A Wedding in Brownsville சிறுகதையை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேனா என்பது சந்தேகமே. ஆனாலும் சுவாரசியமான, நல்ல சிறுகதை என்று தெளிவாகத் தெரிகிறது. நாஜிக்களிடமிருந்து தப்பித்த சில பல ஒரு கிராமத்து யூதர்கள். தப்பித்தவர்களில் அனேகர் இன்று நியூ யார்க்கில். ஒருவர் வெற்றி பெற்ற, வயதாகிக் கொண்டிருக்கும் மருத்துவர். அவர் மனைவியும் ஒரு முன்னாள் ஜெர்மானியர், ஆனால் பிறப்பால் யூதர் அல்லர். மனைவியின் ஒரு சகோதரர் நாஜி; இன்னொருவர் கம்யூனிஸ்ட். இருவருமே கொல்லப்பட்டார்கள். மருத்துவர் நியூ யார்க் நகரின் தூரப்பகுதி ஒன்றில் தன் கிராமத்து மனிதர் ஒருவர் குடும்பத் திருமணத்துக்குப் போகிறார். போகும் வழியில் ஒரு விபத்தைப் பார்க்கிறார். திருமணக் கொண்டாட்டத்திலும் பேச்சு எப்போதும் யார் தப்பித்தார், யார் இன்னும் உயிரோடிருக்கிறார், யார் இறந்தார் என்றுதான் சுழன்று சுழன்று வருகிறது. திடீரென்று மருத்துவர் தன் இறந்தபோய்விட்டதாய் சொல்லப்படும் தன் முன்னாள் காதலியைப் பார்க்கிறார். காதல் அப்படியேதான் இருக்கிறது, மணந்து கொள்ளலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால் காதலிக்கு வயதே ஆகவில்லை. விபத்தில் பார்த்தது தன்னைத்தானா என்று மருத்துவருக்கு ஒரு நொடி தோன்றுகிறது. தான் பார்க்க வந்த திருமணம் நடக்கிறது…

கதையின் மிகச் சிறந்த பகுதி யார் பிழைத்தார்கள், யார் இறந்தார்கள் என்று மீண்டும் மீண்டும் பேசிக் கொள்ளும் இடம்தான். அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

Yentl

Yentl இன்னொரு நல்ல சிறுகதை. சராசரி மனைவியாக வாழ விரும்பாத, கல்வி கற்க விரும்பும் பெண் ஆண் வேடம் பூண்டு மதக் கல்வி கற்கிறாள். அவளை ஆண் என்று நினைத்து பழகும் நண்பன் அவிக்டார். நண்பனின் முன்னாள் காதலி ஹடஸ் என்று ஒரு முக்கோணக் காதல். யெண்ட்ல்/அன்ஷெலின் பாத்திரப் படைப்பு சிறப்பாக இருக்கிறது. பார்பாரா ஸ்ட்ரெய்சாண்ட் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிங்கர் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: