மஹாஸ்வேதாதேவி

மஹாஸ்வேதாதேவி இறந்தபோது அவருக்கு அஞ்சலி எழுத வேண்டும் என்று நினைத்தேன். சாஹித்ய அகடமி, ஞானபீடம், பத்மவிபூஷன் விருதுகளைப் பெற்ற எழுத்தாளர். ஆனால் ஒரு வரி கூட படித்ததில்லை, என்னத்தை எழுதுவது? இத்தனை நாள் கழித்துத்தான் படித்தேன், அதனால் இது அவரது புகழ் பெற்ற ஹஜார் சௌராஷிர் மா பற்றிய பதிவாக மாறிவிட்டது.

படித்திருப்பது ஒரு குறுநாவலும் ஒரு சிறுகதையும்தான். ஆனால் மஹாஸ்வேதாதேவி போன தலைமுறை முற்போக்கு எழுத்தாளர்களின் பிரதிநிதி என்று தெளிவாகத் தெரிகிறது. அவரது எழுத்தில் அவரது இடதுசாரி அரசியல் செம்புலப்பெயல்நீர் போலக் கலந்திருக்கிறது. தன் அரசியல் நிலையை வெளிப்படுத்த எழுதுகிறாரா இல்லை தனக்குத் தெரிந்த அரசியல் பின்புலத்தை, அதனால் ஏற்பட்ட உணர்வுகளை எழுதுகிறாரா என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன். அறுபது-எழுபதுகளின் வங்காளத்தின் அறிவுஜீவி sensibilities-ஐ பிரதிபலிக்கிறார்.

அவரது பலம் அவரது எழுத்தில் இருக்கும் உண்மை. நமது சிஸ்டத்தில் – எல்லா அமைப்புகளிலும்தான் – ஏழைகளுக்கும், அதிகாரம் இல்லாதவர்களுக்கும், பழங்குடிகளுக்கும் இருக்கும் வழிகள் மிகக் குறைவுதான். சிஸ்டத்தின் பிடியிலிருந்து விடுபட்டு தன் பொருளாதார நிலையை, சமூக அந்தஸ்தை மாற்றுவது கஷ்டம்தான். நேரடியாக பாதிக்கப்படுபவர்களுக்கும், நேரடி பாதிப்பு இல்லாவிட்டாலும் அமைப்புகளில் இருக்கும் அநீதிகளை கண்டு கொந்தளிக்கும் இளைஞர்களுக்கும் இந்திய அரசு அமைப்பின் மீது ஏற்படும் கசப்பு, அந்தக் கசப்பு அதிகபட்சம் போஸ்டர் ஒட்டும் புரட்சியாகத்தான் இருக்கும். ஆனால் அறுபதுகளின் இறுதியில் அது ஆயுதம் ஏந்திய நக்சல்பாரி போராட்டமாகவும் பரிணமித்தது. மத்திய மாநில அரசுகள் இந்தப் போராட்டங்கல் கடுமையாக ஒடுக்கின. போஸ்டர் புரட்சியாளர்கள் கூட வேட்டையாடப்பட்டார்கள். அவர்களின் தரப்பு அவர் எழுத்தில் உண்மைத்தன்மையோடு வெளிப்படுகிறது.

அவரது பலவீனம் அவர் இலக்கியத்துக்கும் பிரச்சாரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணராதது. ஹஜார் சௌராஷி மாவில் 1084 உட்பட்ட சில இளைஞர்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் தரப்பை மிகவும் மெல்லிய குரலில் அங்கங்கே தொட்டுச் செல்கிறார். ஆனால் ‘வில்லன்கள்’ எல்லா விதத்திலும் குறை உள்ளவர்கள். அவனைப் புரிந்து கொள்ளாத பூர்ஷ்வா அப்பாவுக்கும் அண்ணனுக்கும் அண்ணிக்கும் அக்காவுக்கும் அவன் மீது துளி அளவு கூட பாசம் இல்லை. அப்பாவுக்கு வேறு பெண்களோடு உறவு. அக்காவுக்கு பணம், அந்தஸ்து மீதுதான் ஆசை. அண்ணனுக்கு அண்ணிக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை போலிருக்கிறது, அதனால் அவர்கள் இருவருக்கு காமத்தின் மீது அதிக நாட்டம் என்று குறை சொல்கிறார். என்ன சாமியாராக இருக்க வேண்டுமா? இல்லை நக்சல்பாரிகள் காந்தி வழியில் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தார்களா?

ஹஜார் சௌராஷி மா கோவிந்த் நிஹலானி இயக்கத்தில் ஜெயா பாதுரி (பச்சன்), அனுபம் கெர், நந்திதா தாஸ், சீமா பிஸ்வாஸ் நடித்து 1998-இல் திரைப்படமாகவும் வந்தது.

ஹஜார் சௌராஷி மாவை விட எனக்கு திரௌபதி என்ற சிறுகதை பிடித்திருந்தது. அரசு எந்திரத்தால் வேட்டையாடப்படும் சந்தால் போராளிப் பெண்ணின் கதை. கதையில் பிரச்சார நெடியும் செயற்கைத்தன்மையும் தூக்கலாக இருந்தாலும் உண்மை தெறிக்கிறது.

அர்ஜுன் என்ற இன்னொரு சிறுகதையும் கிடைத்தது. அங்கங்கே சில வரிகள் அருமையாக இருந்தன. உதாரணமாக பழங்குடியினன் கட்சித் தலைவரிடம் நாலு பிரச்சார போஸ்டர் கேட்கிறான். கீழே விரித்துப் படுத்துக் கொள்ள!

மஹாபாரதப் பின்புலம் உள்ள சில சிறுகதைகளையும் (After Kurukshetra) படித்தேன். பஞ்சகன்யா போருக்குப் பின் உத்தரைக்கும் அவள் சேடிகளுக்கும் உள்ள வித்தியாசங்களை, உத்தரை மட்டுமல்ல எல்லா அரசி/இளவரசிகளும் தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகள்தான் என்ற கருத்தை முன்வைக்கிறது. குந்தி ஓ நிஷாதி கடைசி காலத்தில் குந்திக்கு எதிரே அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்ட நிஷாதர்களின் பிரதிநிதிகளை முன் வைத்து கேட்கும் கேள்விகள். சௌவாலி ஆயிரம் இருந்தாலும் யுயுத்சு வேறுதான் என்கிறது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டியவை அல்ல. உண்மையைச் சொல்லப் போனால் என் மகாபாரதச் சிறுகதைகள் எனக்கு இவற்றை விட அதிகம் பிடித்திருக்கின்றன.

அவரைப் பற்றி அம்பையின் அருமையான அறிமுகம் இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்