நா.பா.வின் “குறிஞ்சி மலர்”

இன்று ஒரு நாற்பத்து சொச்சம் வயதுத் தமிழனுக்கு அரவிந்தன் என்று பேரிருந்தால் அவர்கள் அப்பா, அம்மா நா.பா.வின் குறிஞ்சி மலர் நாவலைப் படித்து நெகிழ்ந்தவர்கள் என்று யூகிக்கலாம். எனக்குத் தெரிந்து வேறு எந்த கதாபாத்திரத்தின் பேரும் இத்தனை தூரம் பிரபலம் அடையவில்லை.

குறிஞ்சி மலரை சிறு வயதில் படித்து நானும் உத்வேகம் அடைந்திருக்கிறேன். ஆனால் இன்று அவ்வப்போது கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான் என்று அலுப்பு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. வாசகர்கள் பத்து வயதுக்கு மேல் வளரவே மாட்டார்கள் என்று நா.பா. உறுதியாக நம்பி இருக்கிறார். அவருடைய வில்லன் முகத்தைப் பார்த்தால் புலி போல இருக்கும். இல்லாவிட்டால் கழுகு, வல்லூறு இப்படி ஏதாவது. நாயகி மான், மயில். பேசாமல் நெற்றியில் நான்தான் வில்லன், ஹீரோ, ஹீரோயின், செகண்ட் ஹீரோ என்று பச்சை குத்திக் கொள்ளலாம்.

குறிஞ்சி மலரை நிச்சயமாகப் படித்திருக்கும் தலைமுறைகளுக்கு அடுத்த தலைமுறைகள் வந்துவிட்டன. அதனால் சுருக்கமாக கதை: அப்பாவை இழந்த பூரணி, அரவிந்தன் இருவரும் உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடுகிறார்கள். சமூக அவலங்களைக் கண்டு பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வாசகர்களை சோகப்படுத்த அரவிந்தன் இறந்துவிடுகிறான். திருமணம் ஆகாமலே பூரணி வாழ்க்கையை சமூக முன்னேற்றத்துக்காக அர்ப்பணிக்கிறாள். என்னடா இப்படி ஒரு லைனில் முடித்துவிட்டேனே என்று பார்க்கிறீர்களா? இதுவே ஜாஸ்தி.

அம்புலி மாமாக் கதையின் பலவீனங்களைப் பற்றி என்ன விவரிப்பு வேண்டிக் கிடக்கிறது? பலத்தைப் பற்றிப் பேசுவோம். அரவிந்தன், பூரணி இருவரும் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதிகள். லட்சியவாதம் என்று அன்று உணரப்பட்டதை இந்தப் பாத்திரப் படைப்புகளின் மூலம் நா.பா. பிரதிபலித்திருக்கிறார். அது இன்று உலக மகா சிம்ப்ளிஸ்டிக்காக இருக்கிறது. அது நா.பா.வின் தவறு இல்லை. நா.பா.வே. அப்படிப்பட்ட ஒரு லட்சியவாதிதான் என்று நினைக்கிறேன். அரவிந்தன் அவரது idealized சுய விவரிப்பாகவே இருக்க வேண்டும். அப்புறம் அகிலனை விட நன்றாகவே எழுதுகிறார்! (எனக்கென்னவோ அகிலன் ஒரு pet peeve ஆகவே மாறிவிட்டார்)

கதையின் முக்கியத்துவும் ஒரு காலத்தில் அதற்கு இருந்த தாக்கத்தால்தான். ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் வணிக நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார். வணிக நாவல்கள் எப்படி எல்லாம் evolve ஆகி இருக்கின்றன என்று புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டும்.

பிற்சேர்க்கை: சந்தடி சாக்கில் இன்னொரு நா.பா. புத்தகத்தைப் பற்றிய சின்னக் குறிப்பையும் உள்ளே நுழைத்துவிடுகிறேன்.
மூலக்கனல்: நா.பா. ஒரு காலத்தில் காங்கிரசின் ஸ்டார் பேச்சாளரும் கூட. திராவிட இயக்கத்தின் மீது அவருக்குப் பெரிய கசப்பு உண்டு. அந்த கசப்பை ஒரு சம கால (contemporary) வரலாற்று நாவல் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
திருமலைராஜன் (திரு) ஜமீந்தாருக்கு தவறான வழியில் பிறந்த பிள்ளை. அவனை சின்ன ஜமீந்தார் அடித்துத் துரத்திவிடுகிறார். தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்பதற்காக கருப்புச்சட்டைக்காரர் பொன்னுசாமியுடன் சேர்கிறான். கருணாநிதி, கல்லக்குடி-டால்மியாநகர் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையில் அவனும் ஏதோ ஒரு ஊரை பெயர் மாற்றும் போராட்டத்தில் ஈடுபடுகிறான், சினிமாவுக்கு வசனம் எழுதப் போகிறான். குடி, பெண்கள் என்று ஆரம்பிக்கிறான். தன மனைவி, பிள்ளையை விட்டு விலகுகிறான். காலப்போக்கில் மந்திரி ஆகிறான். ஊழல். பிள்ளை பெரியவனாகி இவனை தாக்கி பத்திரிகையில் எழுத, தன பிள்ளைதான் என்று தெரியாமல் அவனைக் ஆட்கள் மூலம் கொன்றுவிடுகிறான்.
கதை சுமார்தான். ஆனால் அந்த சம கால நிகழ்ச்சிகளை – தி.மு.க. ராபின்சன் பூங்காவில் தோன்றியது, சென்னை மாநகராட்சித் தேர்தலில் வென்றது, ராஜாஜி திராவிட இயக்கத்துடன் கை கோர்த்தது – கோத்திருக்கும் விதம் எனக்குப் பிடித்திருந்தது.

பிற்சேர்க்கை: விமல் புண்ணியத்தில் “குறிஞ்சி மலர்” மின்னூலை தரவிறக்கிக் கொள்ளலாம்.

15 thoughts on “நா.பா.வின் “குறிஞ்சி மலர்”

  1. நா.பா. ! பள்ளி படிப்பு காலத்தில் அவருடைய தொடர்களை படிக்காவிட்டால் தலை வெடித்து விடும் என்று தோழிகளிடம் போட்டி போட்டு சர்ச்சை செய்தது நினைவுக்கு வருகிறது.

    காலம் மாறி , அவற்றை படித்தாவே அலுப்பு தட்டியது. நாவல் படிப்பதில் முன்னேறி விட்டற்போல , அந்த நாவல்களை நிராகரித்தாகி விட்டது. ஆனால் , அந்த வளரும் பருவத்தில் தாக்கம் ஏற்பட்டது உண்மை.

    அயான் ராண்டின் புத்தகங்கள், கல்லுரி பருவத்தில் கொடுத்த தாக்குதலை,தமிழில் நா.பா.வின் நாவல் அனுபவங்களோடு ஒப்பிடலாம்.

    அகிலன், … not impressive.

    Like

  2. சமீபத்தில் நடந்து முடிந்த புத்தகச் சந்தையின் போது வாசலில் உள்ள அரங்கில் ஒரு கூட்டம் நடத்தினர். அதில் தமிழருவி மணியன் பேசும் போது, “ என்னை, வைகோவை எல்லாம் ஒரு இலட்சியவாதியாக ஆக்கியது நா.பாவின் எழுத்து” என்று குறிப்பிட்டார். அவரது குறிஞ்சி மலரின் பாதிப்பினால் பல இளைஞர்கள் கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக மாறினர் என்று சொன்னவர், சிறந்த நூறு புத்தகங்களை லிஸ்ட் போட்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் லிஸ்டில் இந்த நூல் இல்லாதது மிகப் பெரிய குறை என்று சொன்னார்.

    ஒரு எழுத்து ஒருவனது சிந்தனையை உயர்த்துவதாக, இந்தச் சமூகத்தைத் திருத்துவதாக இருக்க வேண்டும். இன்று யார் யாரோ எதை எதையோ எழுதிக் கொண்டு எழுத்தாளர்கள் என்று பேர் வாங்கி விட்டார்கள் என்றார்.

    நா.பா. மு.வ.வின் எழுத்துக்கள் எல்லாம் ஒரு காலத்திய இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருந்திருக்கிறது.:-)

    கண்மணிகளின் எழுத்தை ரோல் மாடலாகக் கொண்டவர்கள் எல்லாம் தற்போது வியாபாரிகள் ஆகி விட்டார்கள் 😦

    எனக்கு குறிஞ்சி மலரை விட “பொன் விலங்கு” தான் பிடித்திருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை.

    Like

  3. என் அதிஷ்டம், நான் முதலில் படித்த நாவலே பாண்டிமாதேவியாக அமைந்துவிட்டது. எந்த புத்தகத்தையும் ஒரே மூச்சில் படிக்கும் நான் அதை நான்கு ஐந்து நாட்கள் கஷ்டப்பட்டு படித்தேன். அதுவும் பணம் குடுத்து புதிதாக வாங்கி படிக்காவிட்டால் அதைவிட பாவம் ஏதுமில்லை என்பதால். விடுமறையில் வாங்கி என் வீட்டில் பத்திரமாக வைத்துவிட்டு வந்துவிட்டேன். அவரின் மற்ற புத்தகங்கள் பக்கம் போகவே பயமாக் உள்ளது. ஓசியில் கிடைத்தால் படிக்கலாம்.

    Like

விமல் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.