உலக கன்னட மாநாட்டில் பைரப்பா

bhyrappa_at_akka_2இன்று எஸ்.எல். பைரப்பாவை சந்திக்கும், அவரது உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உலக கன்னட மாநாட்டுக்கு வந்திருந்தார். கன்னடத்தில்தான் பேசினார், ஆனால் முக்கால்வாசி புரிந்தது. அப்படிப்பட்ட எளிமையான கன்னடத்தில்தான் பேச வேண்டும் என்று முந்தைய நாள் ஒரு உரையில் சொன்னாராம். எங்கள் கூட்டத்தில் கன்னடம் தெரிந்த ஒரே மனிதர் நித்யவதி, முழுமையான மொழிபெயர்ப்பை எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது வரைக்கு இதை ட்ரெய்லர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

83 வயதுக்காரர், ஆனால் குரலில் எந்த வித நடுக்கமும் இல்லை. கேட்கும் சக்தி மட்டும் கொஞ்சம் குறைந்துவிட்டது. வயது ஆனதால் கொஞ்சம் மெதுவாக நடக்கிறார். உடலில் தொப்பை கிப்பை எதுவும் இல்லை. தலையில் முடி கொட்டிவிட்டாலும் எனக்கு இருப்பதை விட அதிகமாகவே இருக்கிறது.

அவருடன் கலந்துரையாட ஒரு நானூறு பேராவது வந்திருப்பார்கள். இது வரையில் ஜெயமோகன் போன்ற சிறந்த பேச்சாளரின் கூட்டத்திற்குக் கூட நூறு பேர் வந்திருந்தால் ஜாஸ்தி என்று நினைக்கும்போது கொஞ்சம் வயிற்றெரிச்சலாக இருந்தது.

எனக்கு புரிந்த வரையில் கீழே.

பைரப்பா சிறுவனாக இருக்கும்போது அவரது அண்ணா, மற்றும் அக்கா இருவரும் ஒரே நாளில் ப்ளேக் நோயால் இறந்திருக்கிறார்கள். அவருடைய அம்மாவும் ப்ளேகில் அடுத்த இரண்டு வருஷத்தில் இறந்துவிட்டார். அந்த பாதிப்பினால்தானோ என்னவோ பைரப்பாவை சிறு வயதிலேயே கடோபநிஷத் கவர்ந்திருக்கிறது. கடோபநிஷத்தில்தான் நசிகேதன் யமனிடம் சாவு என்றால் என்ன என்று கேட்கிறான். அவரது மனம் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

இண்டர்மீடியட்டில் நல்ல மதிப்பெண் பெற்று தத்துவக் கல்வியில் பி.ஏ. பயில விரும்பி இருக்கிறார். அவரது மதிப்பெண்களைப் பார்த்த கல்லூரி முதல்வர் “Philosophy bakes no bread, வேறு ஏதாவது படி” என்று அறிவுறுத்தி இருக்கிறார். இவர் விடாப்பிடியாக “If philosophy bakes no bread, I will open a bakery and earn my bread!” என்று பிடிவாதமாக தத்துவம் படித்திருக்கிறார். பிறகு எம்.ஏ., பிஹெச்.டி என்று போயிருக்கிறார். வேதங்களே அடிப்படை, அவற்றின் சாரமாக உபநிஷதங்கள், அவற்றின் சாரமாக போதாயணரின் பிரம்ம சூத்திரம், அவற்றுக்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற பல ஆசார்யர்களின் வியாக்கியானங்கள் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் தத்துவங்களில் மூழ்கி எழுந்திருக்கிறார். ஆனால் அந்தத் தத்துவங்கள் இலக்கியம் மூலமாக ராமாயணமும் மகாபாரதமும் விளக்குவதே மனதில் படிகிறது, தன் வழியும் இலக்கியத்தின் மூலம், கதைகளின் மூலம் தத்துவ சாரத்தை காட்டுவதே என்று உணர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

aavaranaaவம்சவிருக்‌ஷாவை (1965) தன் முதல் முக்கிய நாவலாகக் குறிப்பிட்டார். க்ருஹபங்கா, பர்வா, அன்வேஷனே, தப்பலியு நீனடே மகனே போன்ற நாவல்களைக் குறிப்பிட்டார். ஆவரணா குறித்து நீண்ட நேரம் பேசினார். ஹிந்து மதத்தில் எந்தக் கடவுளையும் கும்பிடும் சுதந்திரம் இருக்கிறது, “அன்னிய” மதங்களில் – குறிப்பாக இஸ்லாமில் கடவுளை முஹம்மது காட்டும் வழியில் மட்டுமே வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு fanaticism-த்துக்கு கொண்டு செல்கிறது/செல்லக் கூடியது என்றார். ஆவரணாவில் எந்தத் தவறான தகவலும் இருப்பதாக இது வரை எந்த விமர்சகரும் குறிப்பிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். தான் ஹிந்து மதத்தில் உள்ள பிரச்சினைகளைப் பல நாவல்களில் பேசி இருப்பதாகவும் அப்போதெல்லாம் அவரை மத விரோதி என்று எவரும் சொன்னதில்லை என்பதை உணர்த்தினார். தனக்கு சரி என்று பட்டதை எழுத குண்டுகள் தாக்கி சாகவும் தயார் என்று குறிப்பிட்டார். தான் பா.ஜ.க.காரன் இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.

பிறகு கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார். பல இடங்களில் சிரிக்க வைத்தார். சரித்திரம் என்பது உண்மையைச் சொல்ல வேண்டும், ஔரங்கசீப் கோவிலை இடித்தான் என்றால் அதை மறைக்கக் கூடாது, இதை இந்திரா காந்தி அரசில் ஒரு பாடப் புத்தகக் கமிட்டியில் தான் வற்புறுத்தியதற்காக தன்னை கமிட்டியிலிருந்தே தூக்கிவிட்டார்கள் என்று சொன்னபோது கூட்டம் கை தட்டியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்

6 thoughts on “உலக கன்னட மாநாட்டில் பைரப்பா

  1. முழுமையான மொழிபெயர்ப்பை எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது வரைக்கு இதை ட்ரெய்லர் என்று வைத்துக் கொள்ளுங்கள்//.

    முழு மொழி பெயர்ப்புக்கு ஆவலுடன் உள்ளேன்.
    ந. பரமசிவம்

    Like

  2. பிங்குபாக்: எஸ்.எல்.பைரப்பா

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.