முதல் தமிழ் நாவல் “பிரதாப முதலியார் சரித்திரம்” இல்லை!

aadhiyur_avadhani_sarithamமுதல் தமிழ் நாவல் எது என்று கேட்டால் நாம் எல்லாரும் “பிரதாப முதலியார் சரித்திரம்” என்றுதான் சொல்வோம். ஆனால் சிட்டி-சிவபாதசுந்தரம்ஆதியூர் அவதானி சரிதம்” என்ற நாவலை முதல் தமிழ் நாவல் என்று குறிப்பிடுகிறார்கள்.

பிரதாப முதலியார் சரித்திரம் 1879-இல் வெளியானது. ஆதியூர் அவதானி சரிதம் 1875-இலேயே வெளியாகிவிட்டதாம். முதல் பதிப்பிற்கு ஒரே ஒரு xerox எடுக்கப்பட்ட பிரதிதான் இருக்கிறதாம் – அதுவும் லண்டனின் பிரிட்டிஷ் ம்யூசியத்தில். அதை சிவபாதசுந்தரம் பார்த்து நகல் எடுத்திருக்கிறார். பிறகு சிட்டியும் அவரும் சேர்ந்து 1994-இல் மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இது வித்வான் சேஷையங்கார் என்பவர் எழுதியது. இவர் பேராசிரியராக இருந்தாராம்.

சிட்டி-சிவபாதசுந்தரம் இதைப் பற்றி எழுதிய விளக்கம் மற்றும் கதைச் சுருக்கத்தை இங்கே படிக்கலாம். வசதிக்காக சிட்டி எழுதிய கதைச் சுருக்கத்தின் சுருக்கத்தை இங்கே பதித்திருக்கிறேன்.

பாண்டிச்சேரி அருகில் ஆதியூர் என்னும் கிராமத்தில் உத்தமன் என்ற பிராமணக் குடும்பத் தலைவன் இறந்துவிட மனைவி காந்தாரியும் மகன் வினையாளனும் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் மகன் பச்சையப்பன் பள்ளியில் அடிப்படைக் கல்வியும் பிறகு மருத்துவக் கல்வியும் கற்றுத் தேர்கிறான். படித்து முடித்த பிறகு வினையாளன் அவதானி என்று அழைக்கப்படுகிறான். பிணங்களை அறுக்கும் பணியை செய்வதை உறவினர்கள் எதிர்க்கிறார்கள். அம்மாவும் ஜாதிப்பிரஷ்டம் ஆகிவிடுமோ என்று பயப்படுகிறாள். நடுவில் திருமண ஏற்பாடு. மணமகளின் பெற்றோர்கள் பேராசையுடன் அதிகத் தொகை கேட்கிறார்கள். இதன் விளைவாக அவதானி பெரிதும் கடன்படுகிறான். உறவினர் தொல்லையால் அவதானி அவதிப்படுகிறான். சென்னையில் தேவதத்தை என்ற க்ஷத்திரிய குல கைம்பெண் ஒருத்தியோடு நட்பு, அது காதலாக மாறுகிறது. எல்லாரும் எதிர்ப்பையும் மீறி தேவதத்தை எல்லார் மனதையும் கவர்கிறாள், விதவையை இரண்டாம் தாரமாக மணப்பதுடன் கதை முடிகிறது.

1875-இல் விதவை விவாகம். புரட்சிதான்.

சிட்டி-சிவபாதசுந்தரத்துக்கு முன்னரே இதுதான் முதல் தமிழ் நாவல் என்று ஜெ. பார்த்தசாரதி என்பவர் 1976-இல் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறாராம்.

நூல் உரைநடையாக எழுதப்படவில்லை, பாடல் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இதை நாவல் என்றே சிட்டி-சிவபாதசுந்தரம் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் சிலப்பதிகாரத்தைக் கூட நாவல் என்றே சொல்லிவிடலாம் என்று ஒரு எண்ணம் எழுகிறது. ஆனால் சிட்டி-சிவபாதசுந்தரமே வாதிடுவது போல verse வடிவத்தில் எழுதப்பட்ட Golden Gate புத்தகத்தை நாவல் என்று அனைவரும் ஏற்கிறோம். இன்னொரு உதாரணம் வேண்டுமென்றால் மனோன்மணீயம் பாடல் வடிவில் இருப்பதால் அது நாடகம் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. சேஷையங்காரே இது நாவல் என்று சொல்லி இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்.

நீங்களே இது நாவலா இல்லையா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், References

தொடர்புடைய சுட்டிகள்: ஹிந்து பத்திரிகையில் ஆதியூர் அவதானி சரிதம் பற்றி பெருமாள் முருகன்

1 thoughts on “முதல் தமிழ் நாவல் “பிரதாப முதலியார் சரித்திரம்” இல்லை!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.