ராஜாஜி vs காமராஜ்

ஒரு மாறுதலுக்காக இன்றைய பதிவு புத்தகங்கள் பற்றி இல்லை.

rajajiமோனிகா ஃபெல்டனின் புத்தத்தைப் படிக்கும்போது ஏன் இத்தனை திறமை, தகுதி எல்லாம் இருந்தும் ராஜாஜியின் சாதனை என்று எதையும் குறிப்பாக சொல்ல முடியவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இன்றைய தமிழகத்தின் சிற்பி என்று காமராஜைத்தான் கை காட்டுகிறோம். பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்து கணிசமான தமிழர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியவர் என்று எம்ஜிஆரைத்தான் அடுத்தபடியாக கை காட்ட முடிகிறது.

kamarajகூர்மையான அறிவுடையவர், காந்திக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவர்களில் ஒருவர். ஆனால் சுதந்திர இந்தியாவிற்கு அவரது பங்களிப்பு என்பது லைசன்ஸ்-கோட்டா-பெர்மிட்-ராஜின் மோசமான விளைவுகளைக் கணித்து நேருவுக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்பது மட்டுமே. அவரல்லவா தமிழகத்தைக் கட்டி எழுப்பி இருக்க வேண்டும்?

அவருக்கு கிடைத்த நேரம் மிகக் குறைவு என்பது உண்மைதான். 4 வருஷம் முதல்வராக இருந்தாலும் இரண்டு வருஷத்துக்கு மேல் ஒரு முறையும் நீடிக்க முடிந்ததில்லை. ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

எனக்குத் தெரியும் காரணம் அவர் மக்களின் தலைவரல்ல என்பதுதான். காந்தியும் நேருவும் சுபாஷும் மக்கள் தலைவர்கள். படேல் கட்சியின் தலைவர். ஆசாத் தேசியவாத முஸ்லிம்களின் பிரதிநிதி. காமராஜ் போன்ற பலரும் பிராந்தியத் தலைவர்கள். ராஜாஜி யாரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மக்களின் மன ஓட்டம் என்ன, பொதுவான எண்ணத்திலிருந்து தான் வேறுபடும்போது மக்களின் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்பது அவருக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். அப்படி விடாமல் மாற்ற முயற்சித்ததுதான் காந்தியை என்றும் உதாரணமாக நிற்கும் தலைவராக்குகிறது.

Infamous ‘குலக்கல்வி’ திட்டத்தை எடுத்துக் கொள்வோம். அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோள் அரசியல் சட்டத்திலேயே எழுதப்பட்டுவிட்டது. தேவையான அளவு பள்ளிகளை நடத்த பணம் இல்லை. என்ன செய்வது? இருக்கும் பணத்தில் பள்ளிகளை இன்னும் திறமையாக நடத்த பகுதி நேரப் பள்ளிகள் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறார். இது ஒரு bean-counting accountant-இன் தீர்வு. மேலோட்டமாகப் பார்த்தால் பள்ளிகளின் efficiency, capacity-ஐ கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கிறது. ஆனால் பிரச்சினை இருக்கும் பள்ளிகளின் capacity மட்டும்தானா? அன்று பள்ளிகளில் இடம் இல்லை என்று மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனரா? எனக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் அப்படி இருக்காது என்றுதான் தோன்றுகிறது. என் அப்பா அறுபதுகளிலிருந்து கிராமங்களில் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தவர். ராஜாஜி காலத்தில் முடியுமோ என்னவோ, என் அப்பா தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் பள்ளியில் இடம் இல்லை என்று யாரையும் திருப்பி அனுப்ப முடியாது.

காமராஜ் அதே பிரச்சினையை எப்படி அணுகுகிறார்? முதலில் சிறுவர்கள் பள்ளிக்கு வந்தால் வேலை செய்ய முடியாது, வேலை செய்யாவிட்டால் சோறு கிடையாது என்ற நிலையை மாற்றுகிறார். கிராமங்களில் அது எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது அந்த வயதில் எனக்கு புரியவில்லை, ஆனால் நேரில் பார்த்திருக்கிறேன். மதிய உணவுக்காக மட்டுமே பள்ளிக்கு வந்து, மற்ற நேரங்களில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த, கால்பந்து விளையாட்டில் சூரனான, மாட்டைப் பிடிக்கப் ரோடைத் தாண்டும்போது பஸ்ஸில் அடிபட்டு இறந்து போன நல்ல நண்பனான தனுசை (தனுஷ் அல்ல) நினைவு கூர்கிறேன். சனி ஞாயிறுகளில் மதிய உணவு இல்லாமல் அவன் சோர்ந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்.

இரண்டாவதாக கிராமம் கிராமமாக பள்ளிகளைத் திறக்கிறார். பள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க பள்ளி ஆசிரியர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. ஒரு தலைமுறையே பள்ளி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டதை நானே பார்த்திருக்கிறேன்.

காமராஜ் ஆட்சியில் மட்டும் பள்ளிகளை உருவாக்க, பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்க ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணம் எங்கிருந்து வருகிறது? முதலில் அவர் பட்ஜெட்டை மட்டும் பார்க்கவில்லை. எதிர்காலத்தைப் பார்க்கிறார். இதுதான் முக்கியம் என்று உறுதியாக இருக்கிறார். கிராமம் கிராமமாகச் சென்று ஊர்ப் பணக்காரர்களிடம் உதவி பெற்று பள்ளிகளை நிறுவுகிறார். நெ.து. சுந்தரவடிவேலு கிட்டத்தட்ட பிச்சையே எடுத்தார் என்று ஜெயமோகன் சொல்வதுண்டு.

ராஜாஜிக்கு இருந்த படிப்பு, அறிவு, நெட்வொர்க் எதுவும் காமராஜிடம் இல்லை. ஆனால் அவரால்தான் தமிழகத்தை மாற்ற முடிந்திருக்கிறது. ஏன்? ரொம்ப சிம்பிள். காமராஜ் தலைவர். ராஜாஜி நிர்வாகி.


பின்குறிப்பு 1: ‘குலக்கல்வி திட்டம்’ என்று இன்று பரவலாக அறியப்படும் திட்டத்துக்கும் குலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது குலக்கல்வி திட்டமே அல்ல. பகுதி நேரப் பள்ளித் திட்டம். ஆனால் அது அபிராமணர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்க ராஜாஜி எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை. மாறாக மிச்ச நேரத்தில் அப்பாவுக்கு தொழிலில் உதவியாக இருக்கலாம் என்று சொன்னது சந்தேகத்தை அதிகப்படுத்தத்தான் செய்யும்.

பின்குறிப்பு 2: 42-இல் காங்கிரஸிலிருந்து விலகி நின்றது ராஜாஜியை தமிழகத்தில் மிகவும் பலவீனப்படுத்திவிட்டது, அவர் டெல்லிக்கு மட்டுமே தமிழகத்தின் தலைவராகத் தெரிந்தார், தமிழகத்தில் காங்கிரஸ் காமராஜ் பின்னால்தான் நின்றது. இன்று சோனியா காந்தி டெல்லியிலிருந்து கொண்டு இளங்கோவனை காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்வதைப் போலத்தான் ராஜாஜி 52-இல் நேருவின் மூலம் முதல்வராக வந்தார். ஏன், 37-இல் கூட சத்தியமூர்த்திதான் முதல்வராக வர வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பினார்கள், காந்திதான் இவரைத் திணித்தார் என்று சாண்டில்யன் சொல்லி இருக்கிறார்.

பின்குறிப்பு 3: காங்கிரசில் செல்வாக்காக இருந்த காலத்தில் கூட ராஜாஜி காங்கிரஸ் தலைவரானதில்லை. அவரைத் தலைவராக்க வேண்டும் என்று காந்தி கூட முயன்றதில்லை. அவருடைய support base எப்போதுமே கொஞ்சம் பலவீனமானதுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ராஜாஜி – ஒரு மதிப்பீடு: விடுதலைக்கு முன், விடுதலைக்குப் பின்
காமராஜ் – ஒரு மதிப்பீடு
மோனிகா ஃபெல்டனின் புத்தகம் – I Meet Rajaji

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.