சந்தத்துக்கு அருணகிரி

சில கவிதைகளின் பலமே சந்தம்தான், அவற்றை வாய்விட்டுப் படிக்கும்போதுதான் மேலும் ரசிக்க முடிகிறது, முழுமையான திருப்தி கிடைக்கிறது. ஒரு வேளை அவற்றை கவிதை என்பதை விட பாடல்கள் என்று சொல்வது மேலும் பொருத்தமாக இருக்கலாம். தமிழின் ஆசிரியப்பா சந்தத்தை அருமையாக வெளிக்கொணரும் வடிவம் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

சின்ன வயதில் எனக்கும் இந்தக் கவிதைகளை, பாடல்களை வாய்விட்டுப் படிக்கும் பழக்கம் இருந்தது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள், ஆனால் என் அம்மாவே என் குரலைப் பற்றி தகர சிலேட்டில் ஆணியால் எழுதுவது போல இருக்கிறது என்று அடிக்கடி வர்ணித்ததால் வெகு சீக்கிரத்தில் அந்தப் பழக்கம் விட்டுப் போய்விட்டது. 🙂

என்ன தூண்டுதல் என்றே தெரியவில்லை, நாலைந்து நாட்களாக அருணகிரிநாதரின் சில பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒரு லூப் மாதிரி மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தனையும் சந்தத்துகாகவே மனதில் குடியேறி இருக்கின்றன என்று நினைக்கிறேன். சின்ன வயதில் தொக்குத் தொகுதொகு தொகு, குக்குகு குகுகுகு என்ன சொல்லும் இடத்தில் தடங்கல் வந்தே தீரும்!

கந்தர் அனுபூதியில் வரும் பாடல்கள் ஆசிரியப்பா என்று நினைக்கிறேன். திருப்புகழ் என்ன வடிவம் என்றே தெரியவில்லை. தமிழ் இல்லகணம் அறிந்த யாராவது சொல்லுங்களேன்!

கந்தர் அனுபூதியிலிருந்து இரண்டு பாடல்கள்:
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவானிறவான்
சும்மா இரு சொல்லறவென்றலுமே
அம்மா பொருளொன்றுமறிந்திலனே
(இது என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த கந்தர் அனுபூதி பாடல்)

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர என ஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமுவர்க்கத்தமரரும் அடி பேண

பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக

பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத்தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒரு நாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப் பதம் வைத்துப் பைரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பைரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக என ஓத

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப்பிடி என முதுகூகை

கொட்புற்றெழ நட்பற்றவுணரை
வெட்டிப் பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

7 thoughts on “சந்தத்துக்கு அருணகிரி

  1. //நாலைந்து நாட்களாக அருணகிரிநாதரின் சில பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒரு லூப் மாதிரி மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. // சமீபத்திய ஹிட்டான ராசாளி என்னும் திரைப்படப்பாடலைக் கேட்டிருப்பீர்கள்!

    சிவா கிருஷ்ணமூர்த்தி

    Like

  2. வேண்டும் அனுக்கிரஹம்

    துர்காதேவி
    வேண்டும் உன் அனுக்கிரஹம்

    தாயே சக்தியே பராசக்தியே
    துர்கா பரமேஸ்வரியே
    ஆசிகள் பல வேண்டும் அம்மா

    என் தவறுகளையெல்லாம் மன்னித்து விடம்மா
    உன் ஆதரவு எனக்குத்தேவை அம்மா

    நோய் நொடியற்ற வாழ்க்கை வாழ
    வேண்டும் அனுக்கிரஹம்

    வாழ்வில் முன்னேற
    வேண்டும் அனுக்கிரஹம்

    நான் கற்ற கல்வி பயன் தர
    வேண்டும் அனுக்கிரஹம்

    மற்றவர்களுக்கு நன்மைகள் செய்ய
    வேண்டும் அனுக்கிரஹம்

    நான் வாழ்க்கையில் முன்னேற
    வேண்டும் அனுக்கிரஹம்

    நித்தியம் உன்னை நினைக்க
    வேண்டும் அனுக்கிரஹம்

    தாயே ராஜராஜேஸ்வரியே
    கற்பூர நாயகியே புவனேஸ்வரித்தாயே

    உன் அருள் இன்றி
    நான் வாழ இயலுமா?
    கண் திறந்து பார் அம்மா

    உன் சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபட
    சிகப்பு நிற குங்குமத்தால் அர்ச்சனை செய்ய
    வேண்டும் அனுக்கிரஹம்

    வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க
    வேண்டும் அனுக்கிரஹம்

    மற்றவர்களின் தவற்றை மன்னிக்க
    வேண்டும் அனுக்கிரஹம்

    இன்ப துன்பங்களை சரி சமமாக
    பார்க்க பாவிக்க
    வேண்டும் அனுக்கிரஹம்

    என்றென்றும் இன்பமாக, ஆரோக்யமாக வாழ்ந்திட
    வேண்டும் அனுக்கிரஹம்

    என் கண்ணீரைத் துடைத்து
    என் குறைகளை புறக்கணிக்க வேண்டும்
    கவுரி கல்யாணியே!

    உனக்கு சேவை புரிய
    சக்தி குடம்மா
    உன் புகழ் பாட
    வேண்டும் தகுதி
    வேண்டும் அனுக்கிரஹம்

    Like

  3. சந்திரபிரபா, இந்தப் பாட்டை இது வரை கேட்டதில்லை.
    சிவா, ராஜாளி பாட்டையும் கேட்டதில்லை.
    ரெங்கா, எனக்கு டிஎம்எஸ் குரலில் இல்லை என்றாலும் திருப்புகழ் எப்போதும் ஆண் குரலில்தான் கேட்கும்.

    Like

சிவா கிருஷ்ணமூர்த்தி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.