நீல. பத்மநாபனின் “தலைமுறைகள்” – மீள்பதிவு

ஒரிஜினல் பதிவு இங்கே. இது வ. கௌதமன் இயக்கத்தில் மகிழ்ச்சி என்ற திரைப்படமாகவும் வந்திருக்கிறதாம், ஜெயமோகனே சொன்னார்.

தலைமுறைகளை நான் சிறு வயதில் படித்திருக்கிறேன். அப்போது என்னை இம்ப்ரஸ் செய்தது. ஆனால் காலம் போக போக கதை மறந்துவிட்டது. ஏதோ ஒரு நீல. பத்மநாபன் புத்தகம் படித்திருக்கிறோம், அது தலைமுறைகளா, இல்லை பள்ளிகொண்டபுரமா என்று குழப்பமாக இருந்தது. மீண்டும் படிக்கும்போது கதை தெளிவாக நினைவு வந்தது. குறிப்பாக திரவியம் இந்த இழவெடுத்த முள்ளை எல்லாம் எடுத்துவிட்டு எனக்கு மீன் சாப்பிடத் தெரியாது என்று சொல்லும் இடம். நெருஞ்சி முள் தெரியும், வேலிக்காத்தான் முள் தெரியும், சப்பாத்திக் கள்ளி முள் தெரியும், ரோஜா முள் தெரியும், இதென்னடா மீனில் கூட முள் என்று சிறு வயதில் சைவ உணவுக்காரனான நான் குழம்பி இருக்கிறேன்!

தலைமுறைகளை ஜெயமோகன் தமிழ் நாவல்கள் வரிசையில் எட்டாவது இடத்தில் வைக்கிறார். அவர் வார்த்தைகளில்:

கதை சொல்லியே வட்டார வழக்கில் நேரடியாக பேசியதனால் கவனம் பெற்று பரபரப்பூட்டிய நாவல். இன்று இதன் முக்கியத்துவம் உறவுகளின் வலையில் ஒரு கண்ணியாக மட்டுமே இருத்தல் சாத்தியமான அன்றைய வாழ்வின் முழுச்சித்தரிப்பையும் இது தருகிறது என்பதுதான். தெரிந்ததை மட்டும் எழுதுவது நீல.பத்மநாபனின் பலம். தெரியாத இடங்களுக்குப் போக கற்பனையால் முயலாதது பலவீனம்.
1968ல் பிரசுரமாயிற்று.

ஜெயமோகன் இந்த நாவலை திண்ணை தளத்தில் விலாவாரியாக அலசி இருக்கிறார்.

எஸ்.ரா.வும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார்.

என் கண்ணில் இது நல்ல புத்தகம். சிறந்த தமிழ் நாவல். அருமையான வட்டார வழக்கு நாவல். ஆனால் இது உலகத் தரம் வாய்ந்த நாவல் இல்லை.

கதை செட்டியார் வீடு திரவியம் சிறுவனாக இருந்து வளர்வதுதான். செட்டியார் ஜாதி பின்புலம். அக்கா நாகுவை அவள் பெண்ணே இல்லை என்று குற்றம் சாட்டி புருஷன் தள்ளி வைத்துவிட்டு வேறு ஒருத்தியை மணந்து கொண்டிருக்கிறான். வீட்டில் பெரும் சோகம். திரவியம் புரட்சிக்காரன் இல்லை. ஆனால் அநியாயத்தை சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. அக்காவுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க முனைகிறான். அந்தக் காலத்தில், கட்டுக்கோப்பான ஜாதி, ஊரில். அக்காவின் முன்னாள் புருஷனுக்கு அது பெருத்த அவமானம். என்ன செய்யப் போகிறான்?

இப்படி சுருக்கமாக கதை சொன்னால் கதையின் சுவாரசியமே போய்விடுகிறது. கதையின் சுவாரசியம் பாட்டி சொல்லும் ஏழூர் செட்டி கதைகளிலும், சடங்குகளிலும் தொக்கி நிற்கிறது. கூனாங்கண்ணி பாட்டா கதைக்கு தேவையே இல்லை, ஆனால் அவர் குடும்பம் மேலும் நுன்விவரங்களை சொல்ல பயன்படுகிறது. எப்படி சொல்வது, மெதுவாக கண் முன்னே விரியும் ஒரு உலகம் – ஒரு சினிமா காமிரா விவரம் விவரமாக நமக்கு காட்டிக் கொண்டே போகிறது, கதையும் மெதுவாக நகர்கிறது மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார். செட்டியார் பின்புலம் அபாரமாக வந்திருக்கிறது. கதையின் அத்தனை பேரும் நிஜ மனிதர்கள், எந்த விதமான மிகைப்படுத்துதலும் இல்லாதவர்கள்.

அந்த கடைசி க்ளைமாக்ஸ் சீன் – கொலை மிகவும் powerful ஆன ஒன்று. சிறு வயதிலேயே அதன் சக்தியை உணர்ந்தேன். இன்று ஜெயமோகனின் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியைப் பார்த்தேன். அவர் இந்த க்ளைமாக்ஸ்தான் கதையின் பலவீனமான பகுதி என்று கருதுகிறார். 🙂 அவர் பத்து வயதில் இதைப் படித்திருந்தால், இல்லை நான் நாற்பது வயதில் இதைப் படித்திருந்தால் எங்கள் நிலை மாறி இருக்குமோ என்னவோ. 🙂 என்னைப் பொறுத்த வரை அந்த அத்தான் வலுவான பாத்திரப் படைப்பு. ஆனால் அவர் பெரிதாகப் விவரிக்கப்படமாட்டார், ஒரு செகண்டரி காரக்டர். சிறு வயதிலேயே அந்த அத்தானால் இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொண்டிருக்க முடியும் என்று யோசனை ஓடியது. நான் கொஞ்சமும் எதிர்பாராத அந்த முடிவு என்னைக் கலக்கிவிட்டது. இந்த வயதில் மீண்டும் படித்தபோதும் அந்தக் கட்டம் என்னைத் தாக்கியது.

கதையின் பலமே பின்புலம்தான். ஆனால் கதை கொஞ்சம் ramble ஆகிறது. முன்னால் சொன்ன மாதிரி கூனாங்கண்ணி பாட்டா கதை தேவையே இல்லை. அதுதான் கதையின் பலவீனம்.

கட்டாயமாக தமிழர்கள் படிக்க வேண்டிய புத்தகம். மொழிபெயர்க்கப்பட வேண்டிய புத்தகம்.

பிற்சேர்க்கை: ஜெயமோகன் தரும் தகவல் – வ.கௌதமன் இயக்கத்தில் தலைமுறைகள் சில சினிமாத்தனமான மாற்றங்களுடன் ’மகிழ்ச்சி’ என்ற பேரில் வெளிவருகிறது. நவம்பர் 19 வெளிவரும் என்கிறார்கள். திரவியாக வ. கௌதமன் நடித்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நீல. பத்மநாபன் பக்கம்

தொடர்புடைய பக்கம்: ஜெயமோகனின் கட்டுரை

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.