பழைய திரைப்படம்: Good Will Hunting

Good Will Hunting

Good Will Hunting (1997) நல்ல திரைப்படம். . சிறந்த நடிப்பு. ஆனால் என்னவோ குறைகிறது.

லட்சத்தில் ஒருவர்தான் ஏதாவது துறையில் மேதையாக இருக்கிறார்கள். கோடியில் ஒருவர்தான் மேதையாகவே பிறக்கிறார்கள். ஜெயமோகனும் விஸ்வநாதன் ஆனந்தும் மேதைகள், ஆனால் என் போன்ற சாதாரணர்களுக்கும் விடாமுயற்சியோடு உழைத்தால் அவர்கள் நிலையை அடைய 0.0001% வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நான் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ராமானுஜனாகவோ பாபி ஃபிஷராகவோ மாற முடியாது. ராமானுஜனின் மூளை வேறு விதமாகதான் செயல்பட்டிருக்க வேண்டும். பாபி ஃபிஷரின் மேதமையும் கிறுக்குத்தனமும் தொடர்புள்ளவை.

மேதமை, மேதமையின் பிரச்சினகள் என்ற கருக்கள் என்னை எப்போதும் கவர்வன. அதிலும் இந்தத் திரைப்படம் கணிதப் பின்புலம் கொண்டது. திரைப்படம் வெளியானபோதும் சரி, 25 வருஷம் கழித்து மீண்டும் பார்த்தபோதும் சரி, இந்தத் திரைப்படம் எனக்கு ஏன் சுவாரசியமாக இருக்கிறது என்று புரிகிறது. திரைப்படத்தின் பல இடங்கள் எனக்கு பிடித்தமானவை. ஆனால் இந்தத் திரைப்படத்தில் விவரிக்கப்படும் பிரச்சினைகள் எனக்கு கொஞ்சம் எளிமையாக இருக்கின்றன. அதனால் என்னவோ குறைகிறது என்று தோன்றுகிறதோ என்னவோ.

Will Hunting and Friends

இளைஞன் வில் ஹண்டிங் எம்ஐடியில் சுத்திகரிப்பு பணியாளன். அநாதை. பிறவி மேதை. தானாகவே கணிதம் உட்பட பல துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவன் நண்பர்கள் பெரிதாகப் படிக்காதவர்கள். உடல் உழைப்பால் வாழ்ப்வர்கள். ஆனால் அவர்கள்தான் அவன் உலகம். மேலும் படிக்கப் போனால், தன் நண்பர்களின் உலகத்திலிருந்து தான் விலக நேரிடும் என்று உணர்ந்திருக்கிறான். அதனால் தன் மேதமையை மறைக்கிறான், அவர்களோடு சுற்றுகிறான், குடிக்கிறான், சண்டை போடுகிறான், அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிறான்.

Will Hunting Solving a Problem

புகழ் பெற்ற கணிதப் பேராசிரியர் லாம்பா கடினமான ஒரு கேள்வியை கரும்பலகையில் எழுதி மாணவர்களை அதற்கு விடை தரும்படி சவால் விடுகிறார். வில் யாரும் இல்லாதபோது அதன் விடையை வில் எழுதி வைக்கிறான். யார் விடையை கண்டுபிடித்தது, யார் அந்த சிறந்த மாணவன் என்று எல்லாரும் தேடுகிறார்கள். லாம்பா இன்னும் கடினமான கேள்வியை – கரும்பலகையில் எழுதி வைக்கிறார். வில் அதற்கும் விடை எழுதும்போது அவனைப் பார்க்கிறார். வில் ஓடிவிடுகிறான். லாம்பா அவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். வில்லுக்கு சண்டை ஒன்றில் மாட்டிக் கொண்டு சிறைக்கு செல்லும் நிலை. சிறையைத் தவிர்க்க லாம்பாவிடம் பாடம் கற்கவும், ஒரு மனநிலை மருத்துவரை சந்திக்கவும் வில் ஒத்துக் கொள்கிறான்.

மனநிலை மருத்துவர்களோடு வில் ஒத்துழைக்க மறுக்கிறான். லாம்பாவை விடவும் அவனுக்கு கணிதம் சுலபமாக இருக்கிறது. அதனால் லாம்பாவிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறான். லாம்பா வில்லை எப்படியாவது கணிதத்தில் மும்முரமாக ஈடுபட வைக்க வேண்டும் என்று முனைகிறார். தன் பழைய நண்பன் ஷானை அவனுக்கு மனநிலை மருத்துவராக ஏற்பாடு செய்கிறார்.

ஷான் தன் மனைவி இறந்த துக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறான். முதலில் கொஞ்சம் சிரமப்பட்டாலும் வில்லோடு ஷானுக்கு நல்ல உறவு ஏற்படுகிறது. வில் ஸ்கைலர் என்ற பணக்கார, ஹார்வர்ட் கல்லூரி மாணவியால் ஈர்க்கப்படுகிறான். வில்லின் நெருங்கிய நண்பன் சக்கி வில் மேலே படிக்காமல் தங்களோடு சுற்றிக் கொண்டிருப்பது அவனுக்கு வருத்தம்தான் என்பதை வில்லிடம் சொல்கிறான். வில் தன் நண்பர்களின் உலகத்தை விட்டு தான் போக வேண்டிய அறிவுலகத்துக்கு செல்கிறான்.

திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் பேராசிரியர் லாம்பா. அவர் கணிதத்தில் பல சாதனைகள் புரிந்திருக்கிறார், பல பரிசுகளை வென்றிருக்கிறார். ஆனால் வில் ஹண்டிங் வேற லெவல் என்பதை உணர்கிறார். வில் ஒரு தேற்றம் உள்ள காகிதத்தை எரிக்கும்போது அவர் பேசுவது என் உள்ளத்தைத் தொட்ட காட்சி.

மாட் டேமன், பென் ஆஃப்லெக், ராபின் வில்லியம்ஸ், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கர்ட் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராபின் வில்லியம்ஸ் தன் நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றார். திரைக்கதைக்காக மாட் டேமன்+பென் ஆஃப்லெக் இருவரும் ஆஸ்கர் விருது பெற்றனர்.

எனக்கு என்னவோ குறைந்தாலும் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: ஐஎம்டிபி குறிப்பு