அ. முத்துலிங்கம்

முத்துலிங்கம் என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். தமிழின் சிறந்த எழுத்தாளர்களின் முதல் பட்டியலில் வைப்பேன். சிறுகதை வடிவின் கலையும் தொழிலும் (art and craft) இவருக்கு கை வந்த கலையாக இருக்கிறது. அசோகமித்ரனைப் போலவே மெல்லிய நகைச்சுவை, நுணுக்கமான பார்வை கொண்டவர். ஆனால் அசோகமித்ரனின் எழுத்தில் தெரியும் மெல்லிய கசப்பு இவரது எழுத்தில் தெரிவதில்லை, மாற்றாக வாழ்வை அதன் நிறைகுறைகளுடன் முழுமையாக ஏற்றுக் கொண்டு அதை அனுபவிக்கும், நம்மையும் அனுபவிக்க வைக்கும் அணுகுமுறை கொண்டவர்.

முத்துலிங்கத்தின் பெரும்பலம் நிகழ்ச்சிகளை தத்ரூபமாக சித்தரிப்பது. குறைந்தபட்சம் அவை தத்ரூபமான சித்தரிப்பு என்று வாசகனை உணரச் செய்வது. எந்த சித்தரிப்பும் நூற்றுக்கு நூறு தத்ரூபமானது அல்ல என்று வாசிக்கும் எல்லாருக்கும் தெரியும்தான். எழுத்தாளனின் திறமை குறைந்த பட்சமாக காட்டியும் – நூற்றுக்கு பத்து காட்டினால் கூட – அது நூற்றுக்கு நூறு உண்மையான சித்தரிப்பு என்ற உணர வைப்பதில்தான் இருக்கிறது அசோகமித்ரன், முத்துலிங்கம் இருவருமே இதில் மாஸ்டர்களாக இருக்கிறார்கள்.

பல நாடுகள் சுற்றியவர், அவற்றைத் தளமாக வைத்து நிறைய எழுதி இருக்கிறார். எந்த ஊரானாலும் எந்த நாடானாலும் மனிதன் அடிப்படையில் ஒன்றுதான் என்பதை மீண்டும் மீண்டும் நுட்பமாகச் சொல்கிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி இவரது கதைகளைப் படிக்கும்போது எனது மனதில் அவ்வப்போது ஓடும். சோமாலியா நாட்டு வறட்சிப் பின்புலத்தில் எழுதப்பட்ட ஒட்டகம், கீன்யா நாட்டுப் பின்புலத்தில் எழுதப்பட்ட ராகுகாலம், நாஜிகள் காலத்தில் சாப்பாட்டுக்குத் தவித்த சிறு பெண்ணுக்கு சமையலில் உள்ள ஈடுபாடு என்று போகும் புளிக்க வைத்த அப்பம், கனடாவுக்கு புலம் பெயர்ந்த, வியட்நாமியனை மணக்கும் இலங்கைக்காரியின் கதையான அமெரிக்காக்காரி, ஆஃப்கானிஸ்தானின் பெண்கள் மீதான அடக்குமுறையை விவரிக்கும் யதேச்சை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ராகுகாலத்தை எல்லாம் புன்முறுவல் இல்லாமல் படிக்கவே முடியாது! பல சிறுகதைகள், கட்டுரைகள் அப்படித்தான், புன்முறுவல் இல்லாமல் படிக்கவே முடியாது. அந்த நகைச்சுவை ஆர்ப்பாட்டமாக எல்லாம் இருக்காது, மிக மெலிதாக, வாழ்வின் சிறு சிறு சிக்கல்களைத் தேர்ந்த எழுத்தாளர் காட்டும் விதத்தின் நகைச்சுவை அது. மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள், பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும், சட்டவிரோதமான காரியம் ஆகியவை இப்போது நினைவு வருகின்றன. இவற்றுக்கு ஒரு மாற்று குறைவுதான் என்றாலும் ஆட்டுப்பால் புட்டு, சில்லறை விஷயம் போன்ற சிறுகதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சில சமயம் நெகிழ வைத்துவிடுவார். பூமாதேவி சிறுகதையால் மனம் நிறையாத அப்பனே இருக்க முடியாது. நாளையைப் படித்து நெகிழாத தம்பி இருக்க முடியாது. கடவுச்சொல் மனம் நிறையாத பாட்டியும் இருக்க முடியாது. புளிக்க வைத்த அப்பம் சிறுகதையும் அப்படித்தான். ஸ்டைல் சிவகாமசுந்தரி என்ற சுமாரான கதையில் கூட என்னையும் என் பெண்களையும் பார்த்தேன். இலையுதிர்காலம் சிறுகதையில் என் அத்தை ஒருவரை

கறுப்பு அணில், ரி, கொழுத்தாடு பிடிப்பேன், ஒட்டகம், ராகுகாலம், பூமாதேவி ஆகியவற்றை ஜெயமோகன் தனது சிறந்த சிறுகதைகள் பட்டியலில் பரிந்துரைக்கிறார். கறுப்பு அணில் நல்ல சிறுகதை – சட்டவிரோதமாக புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழனின் கடுமையான வாழ்க்கை என்று சுருக்கலாம், ஆனால் அந்தச் கதைச்சுருக்கம் கதையின் தாக்கத்தை விவரிக்கவில்லை. ரி சிறுகதை நல்ல சித்தரிப்பு, ஆனால் தலைப்புக்காக வலிந்து புகுத்தப்பட்ட முடிவு என்று தோன்றியது. கொழுத்தாடு பிடிப்பேன் மிகத் திறமையாக எழுதப்பட்ட சிறுகதை. குடும்பத்தினரிடமிருந்து பிரிவு, காம இச்சை, இளம் சிறுமியரை பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளும் குடும்பப் பெரியவர்கள் என்று பல தளங்களில் படிக்கலாம். ஆனால் இந்த மூன்றும் என் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறாது.

மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதையை எஸ்ரா தனது சிறந்த சிறுகதைகள் பட்டியலில் பரிந்துரைக்கிறார். அவருடைய இந்தத் திறமை மிகச் சிறப்பாக வெளிப்படும் சிறுகதை. முதன்முதலாக பெண்ணின் கவர்ச்சியை உணரும் பதின்ம வயதுச் சிறுவனின் உள்ளத்தில் அது எப்படி பதிந்துவிடுகிறது என்பதை மிக நுட்பமாக சொல்லி இருக்கிறார். அதை நினைவுபடுத்திய இன்னொரு சிறுகதை தீர்வு. எத்தனை திறமையான எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டேன். ஆஃப்ரிக்க நாடு ஒன்றின் பின்புலம், நன்றாகப் படிக்கும் மாணவன், இளம் பெண் மீது ஏற்படும் ஈர்ப்பு – அருமையாக எழுதி இருக்கிறார்.

கடவுள் தொடங்கிய இடம் விகடனில் தொடர்கதையாக வந்தது. போர்க்கால இலங்கையிலிருந்து தப்ப நினைக்கும் தமிழர்கள் பிற நாடுகளில் அகதி என்ற நிலையை அடையப் படும் பாடுகளை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட நாவல். பாத்திரப் படைப்பு நன்றாகத்தான் இருக்கிறது. விவரிப்புகள் உண்மையாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் என்னவோ குறைகிறது.

அக்கா (1964), வடக்குவீதி (1998), மகாராஜாவின் ரயில் வண்டி (20051), அங்கே இப்போ என்ன நேரம் (2005) என்று சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கிறன. அக்கா சிறுகதைத் தொகுப்பு ஏமாற்றம் அளித்தது. அதில் எந்தக் கதையும் எனக்குத் தேறவில்லை.

முத்துலிங்கத்தைப் பற்றி ஒரு இசை காணொளி தயாரித்திருக்கிறார்கள். தகவல் தந்த வாசனுக்கு நன்றி!

மீண்டும் சொல்கிறேன், தமிழின் உலகின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம்

தொடர்புடைய சுட்டி: முத்துலிங்கத்தின் தளம்

2 thoughts on “அ. முத்துலிங்கம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.