படுகளம்: ஜெயமோகனின் சமீபத்திய தொடர்

கடந்த 15-20 நாட்களாக ஜெயமோகன் தன் தளத்தில் படுகளம் என்ற தொடரை எழுதி வருகிறார். தினமும் எப்போது அடுத்த அத்தியாயம் வரும் என்று காத்திருக்க வைத்த தொடர். நேற்றுதான் (மே 19, 2024) முடிவு பெற்றது.

சுவாரசியமான, விறுவிறுப்பான தொடர். உண்மைக்கு அருகிலாவது இருக்கும் என்றும் நினைக்கிறேன்.

ஆனால் என் கண்ணில் இது ஜெயமோகனின் முதல் வரிசைப் படைப்புகளில் ஒன்றல்ல. விறுவிறுப்பும் வேகமும் மட்டுமே இதன் முக்கிய பலங்கள். உண்மைக்கு அருகிலாவது இருக்கும் என்று நினைக்கிறேன்தான், ஆனால் நம்பகத்தன்மை அவருக்கே முக்கியமாக இருந்திருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். நாயகன் தன் போராட்டத்தை ஒரு சீரான திரைக்கதை போல உருவமைத்து அதை இம்மி பிறழாமல் நடத்துவது கொஞ்சம் சினிமாத்தனம் தெரிகிறது. முக்கிய எதிரி கொஞ்சம் மொக்கை, மிகச் சுலபமாக வெல்லப்படுகிறார், அவரது ஒவ்வொரு செயலும் முன்னாலேயே கணிக்கப்பட்டு அதன் எதிர்வினை நாயகனால் வடிவமைக்கப்பட்டிருப்பது உண்மையில் நடந்தால் அதிசயம்தான்.  நாயகனுக்கு  திரும்பும்  இடத்தில்  எல்லாம்  கிடைக்கும்  உதவியும்  கொஞ்சம்  அதீதம்தான். கடைசி முத்தாய்ப்பும் – நாயகனின் திருமணம் – கொஞ்சம் சினிமாத்தனமாகத்தான் இருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் நல்ல திரைக்கதை, நல்ல திரைப்படமாக எடுக்கலாம். தனுஷ், விஜய் சேதுபதி மாதிரி யாராவது நாயகனாக நடிக்கலாம்.

ஆயிரம் நொட்டை சொல்லலாம். எப்போதுமே நொட்டை சொல்வது சுலபம் – ஜெயமோகன் எழுத்தில் கூட. வட்டார வழக்கை குழப்பி அடித்துவிட்டார் என்று கூட எங்கோ படித்தேன். நான் சென்னைக்காரன், அவர் எதைக் குழப்பினார் என்று கூட புரிந்து  கொள்ள முடியாது. ஆனால் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டதும் (சிறு)வணிகம் என்ற உலகத்தைக் காட்டுவதும் பிரமாதமாக வந்திருக்கிறது.  பாத்திரப்  படைப்பும்  நன்றாக  இருந்தது. குறிப்பாக நாயகனின்  அம்மா  பாத்திரம்  அருமை.

கதையின்  உச்சக்கட்டக்  காட்சியாக  நான்  நினைப்பது  தன்  கடையை  மறைக்கும்  விளம்பரப்  பலகையை  நாயகன்  தகர்க்கும்  காட்சிதான்.  திரைப்படமாக்கினால்  மிக  நன்றாக  வரும்.

நான் கதையை விவரிக்கப் போவதில்லை. இந்த மாதிரி விறுவிறுப்பான கதைகளுக்கு சுருக்கம் எழுதுவது சில சமயம் அதன் சுவாரசியத்தைக் கெடுத்துவிடுகிறது. ஒரு வரி சுருக்கம் – சிறு வணிக உலகில் நுழையும் இளைஞன் கந்துவட்டி, தொழில் போட்டி, பெரிய வணிகர்கள் அலட்சியமாக சிறு வணிகர்களை அழிப்பது ஆகியவற்றை திறமையாக திட்டம் போட்டு சமாளிக்கிறான், அதற்கு மேல் படித்துக் கொள்ளுங்கள்!

கதைக்கு வரையப்பட்ட படங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அருமை!

பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: படுகளம் தொடர்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.