பிடித்த அறிவியல் சிறுகதை: Surface Tension

(மீள்பதிவு)

james_blishஜேம்ஸ் ப்ளிஷ் எழுதிய (James Blish) Surface Tension எனக்குப் பிடித்த அறிவியல் சிறுகதைகளில் ஒன்று.

விறுவிறுப்பான, கச்சிதமான கதை. எழுப்பும் கேள்விகளோ முடிவற்றன. அறிவியல் சிறுகதைக்கு வேறென்ன வேண்டும்?

எளிமையான, நேரான கதை. ஏதோ ஒரு கிரகத்தில் தண்ணீரில் வாழும் மிகச் சிறிதாக்கப்பட்ட, மனித இனம். அவர்களின் தலைவன் தண்ணீரின் எல்லைகளைத் தாண்டி ‘வெளியே’ செல்ல விரும்புகிறான். எதிரிகளை வென்று, நட்பு உயிரினங்களின் நம்பிக்கையைப் பெற்று, சூரியனை நேரடியாகப் பார்த்து ‘விண்வெளிப் பயணத்தை’ வெற்றிகரமாக நடத்துகிறான். ஆனால் அவன் வாழும் தண்ணீரின் எல்லைகளோ ஒரு ஆழமற்ற குட்டையின் (puddle) நீர்க்குமிழியின் எல்லைகள்தான். அந்தக் குமிழியின் ‘Surface Tension’-ஐ உடைத்து வெளியேறுவதுதான் அவன் சாதனை.

நமக்கு பிரமாண்டமான பிரபஞ்சமாகத் தெரிவது வேறு ஒரு உயிரினத்துக்கு வெறும் நீர்க்குமிழியாகத் தெரியலாம். நமக்கு புவியீர்ப்பு விசையாகத் தெரிவது அந்த உயிரினத்துக்கு ‘Surface Tension’ ஆகத் தெரியலாம். நமது எல்லைகள் பிற உயிரினங்களுக்கு எப்படித் தெரிகின்றன, பிற உயிரினங்களின் எல்லைகளைப் பற்றிய நமது புரிதல் முழுமையானதுதானா என்ற முடிவற்ற கேள்விகளைக் கேட்கிறது இந்தச் சிறுகதை. எறும்புகளின் வாழ்க்கையைக் கூட நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

1952-இல் வெளியான சிறுகதை. இணையத்தில் பத்திரிகை பக்கங்களையே பிரதி எடுத்திருக்கிறார்கள், அப்போது வரையப்பட்ட படங்களோடு படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அறிவியல் புனைவுகள்

தொடர்புடைய சுட்டி: Surface Tension சிறுகதை