பி.ஜி. உட்ஹவுஸ்: Psmith நாவல்கள்

உட்ஹவுசுக்கு ஒரு cult following இருக்கிறது. அந்த cult following-இலும் Psmith-க்கு ஒரு சின்ன subcult following உண்டு.

ஸ்மித் வாய்ச்சவடால் மன்னன். பள்ளி-கல்லூரி நாட்களில் இந்த மாதிரி பேசுபவர்களை ரசித்திருப்போம். பேச ஆரம்பித்தால் கிளம்பிட்டாய்யா என்று அலுத்துக் கொள்வோம், ஆனால் உட்கார்ந்து பேசுவோம். அறுவை ஜோக்குகளை ரசிக்கும் மனநிலைதான். என் பள்ளி நாட்களில் நான் நாலு லத்தீன் சொற்றொடர்களை மனனம் செய்து வைத்திருந்தேன், வாய்ப்பு கிடைத்தால் எடுத்துவிடுவேன். இன்றும் லத்தீனில் அறுப்பவன் என்றுதான் சில நண்பர்களுக்கு என்னை நினைவிருக்கிறது. விதண்டாவாதம் செய்யும் ஒரு கல்லூரி நண்பன் – இன்றும் அப்படித்தான் – அதனாலேயே நெருங்கிய நண்பனானான். இப்படி ஏதாவது இருந்தால் சுலபமாக நண்பர் கூட்டம் சேர்கிறது. ஆனால் பள்ளி/கல்லூரி நாட்களுக்குப் பிறகு இந்த மாதிரி பேச்சுகளை ரசிக்கும் juvenile மனநிலை குறைந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன். உட்ஹவுஸின் எல்லா எழுத்துக்களுமே அப்படிப்பட்ட மனநிலையைத்தான் பிரதிபலிக்கின்றன, இவை அவற்றிலும் மிக அதிகமாகப் பிரதிபலிக்கின்றன.

உட்ஹவுஸின் பாத்திரங்கள் பொதுவாக அவரது கற்பனைதான், ஆனால் ஸ்மித் ஒரு நிஜ மனிதரின் குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்டதாம்.

Version 1.0.0

1909-இல் Mike என்ற பள்ளிக் கதையை வுட்ஹவுஸ் எழுதினார். அந்த நாவலில் இரண்டு பகுதிகள் உண்டு. இரண்டாம் பகுதியில்தான் ஸ்மித் அறிமுகம் ஆகிறான். ஆரம்பக் காட்சியில் விடுதியில் வேறு ஒருவனுக்கு உரிமை உள்ள அறையை ஸ்மித்தும் மைக்கும் கைப்பற்றிக் கொள்ளும் காட்சியில் புன்னகைக்க ஆரம்பிக்கிறோம், அப்புறம் புன்னகை நிற்பதே இல்லை. அதுவும் ஸ்மித் ஒரு பூட்ஸை வைத்து டௌனிங் என்ற ஆசிரியருக்கு தண்ணி காட்டும் காட்சி பிரமாதம். (டௌனிங் பள்ளி தீயணைப்பு படையின் நிறுவனர், தீயணைப்பு படையின் ஒரு கூட்ட நிகழ்ச்சிகளும் பிரமாதம்…)

பிற்காலத்தில் இரண்டாம் பகுதியை மட்டும் தனியாக Mike and Psmith என்ற புத்தகமாக வெளியிட்டார்கள்.

Psmith in the City

இரண்டாம் நாவலான Psmith in the City (1910) எனக்கு இந்தத் தொடரில் மிகவும் பிடித்தமானது. பதின்ம வயதில் படித்தால் இன்னும் ரசிக்கலாம். மனதளவில் நான் 17 வயதுக்கு மேல் வளரவே இல்லை என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு, அதனால்தானோ என்னவோ நான் இன்னும் ரசிக்கிறேன். பணப் பிரச்சினையால் மைக், அப்பாவின் க்ஷணச்சித்தம் க்ஷணப்பித்தம் மனநிலையால் ஸ்மித் இருவரும் ஒரு வங்கியில் வேலையில் சேர்கிறார்கள். வங்கியின் மேலாளர் பிக்க்ர்ஸ்டைக்குக்கும் இவர்கள் இருவருக்கு ஒத்து வராது. பிக்கர்ஸ்டைக்கை ஸ்மித் துரத்தி துரத்தி வெறுப்பேற்றுவது பிரமாதமாக வந்திருக்கும். இந்தப் பதிவுக்காக மறுபடியும் படித்ததில் அர்த்தமற்ற அலுவலக வாழ்க்கையையும் நன்றாக விவரித்திருக்கிறார் என்பது தெரிந்தது. 17 வயதில் வேலைக்குப் போகவில்லையே, அதெல்லாம் சரியாகப் புரியவில்லை…

இந்த நாவல் வுட்ஹவுஸின் வாழ்க்கையை கொஞ்சம் பிரதிபலிக்கிறது. பணப் பிரச்சினையால் வுட்ஹவுஸும் பள்ளிக்குப் பிறகு ஒரு வங்கியில் வேலை பார்த்தார், அந்த வாழ்க்கை கொஞ்சமும் பிடிக்காமல் எழுத முயற்சி செய்தார்…

1909-இல் பத்திரிகையில் தொடராக வந்தது 1910-இல் புத்தகமாக பிரசுரிக்கப்பட்டது.

Psmith Journalist

மூன்றாம் நாவலான Psmith Journalist கொஞ்சம் சுமார்தான். இல்லை நமக்குத்தான் திகட்டிவிடுகிறதோ என்னவோ. சில சமயம் ஸ்மித் வாயை மூடமாட்டானா என்றே தோன்றியது. மேலும் இந்த ஒரு நாவலில் மட்டுமே வுட்ஹவுஸ் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி கொஞ்சமாவது பிரக்ஞையோடு எழுதி இருக்கிறார். அது வுட்ஹவுஸ் பற்றிய பிம்பத்தோடு ஒட்டவில்லை. இந்த முறை ஸ்மித் நியூ யார்க்கில் ஒரு பத்திரிகையில் வேலைக்கு சேர்கிறான். அது மங்கையர் மலர் மாதிரி ஒரு பத்திரிகை; அதை நக்கீரன் மாதிரி மாற்றுகிறான். நியூ யார்க்கின் குற்ற உலகைப் பற்றி அவர் எழுதி இருப்பது கொஞ்சம் உண்மையாகத் தெரிகிறது. 1910-இல் பத்திரிகையில் தொடராக வந்தது 1915-இல் புத்தகமாக பிரசுரிக்கப்பட்டது.

இந்தத் தொடரின் கடைசி நாவல் Leave It to Psmith (1923). நான் படித்த முதல் உட்ஹவுஸ் நாவல் இதுதான். 15-16 வயதில் படித்தேன், மனதைக் கவரவில்லை. இனி மேல் உட்ஹவுஸ் பக்கம் திரும்பமாட்டேன் என்றுதான் நினைத்தேன், ஆனால் என் அதிருஷ்டம் அப்பாவின் நண்பர் ஒருவரைப் பார்க்க அவர் என்னையும் இழுத்துக் கொண்டு போனார், நான் வழக்கம் போல அங்கே கையில் கிடைத்த ஒரு புத்தகத்தை – Right Ho, Jeeves (1934) – புரட்ட ஆரம்பித்தேன், கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் கெக்கேபிக்கே என்று வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தேன். கிளம்பும்போது அப்பாவின் நண்பர் அந்தப் புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் படிக்கும்படி கொடுத்துவிட்டார். அதற்கப்புறம் ஒரு பத்து வருஷமாவது உட்ஹவுஸின் பரம பக்தனாக இருந்தேன்.

Leave It to Psmith

இந்த நாவலுக்கு வருகிறேன். இந்த நாவலின் உட்ஹவுஸின் எல்லா பலங்களும் தெரிகின்றனதான். ஆள் மாறாட்டம், என்னுடைய மனம் கவர்ந்த பாத்திரங்களான எம்ஸ்வொர்த் பிரபு எல்லாம் இருக்கிறார்கள்தான். ஆனால் ஸ்மித் கொஞ்சம் அதீதமான பாத்திரம், அது முதன்முதலாகப் படிக்கும்போது எனக்கு கொஞ்சம் ஓவராக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்று படிக்கும்போது வழக்கமான பாணி நாவல்தான் என்று தெரிகிறது.

நொடித்துப் போயிருக்கும் ஸ்மித் எந்த வேலையும் செய்வேன், குற்றங்களும் விலக்கல்ல என்று ஒரு விளம்பரம் கொடுக்கிறான். எம்ஸ்வொர்த் பிரபுவின் சகோதரி கான்னியின் ஹாரத்தை திருடும்படி அவனுக்கு ஒரு பணி கிடைக்கிறது. எதற்காக? அந்த ஹாரத்தைத் திருடி அதில் வரும் பணத்தை கான்னியின் கணவரின் முதல் தாரத்தின் பெண்ணிற்கு கொடுக்க; அதை நேரடியாகவே கொடுக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் உட்ஹவுஸைப் படித்தவர் அல்லர். இதற்கு நடுவில் ஸ்மித் ஒரு பெண்ணைக் கண்டதும் காதலில் விழுகிறான், அந்தப் பெண் எம்ஸ்வொர்த் பிரபுவிடம் வேலைக்கு சேர்கிறாள், ஸ்மித் தான் பிரபல கவிஞன் என்று ஆள் மாறாட்டம் செய்து ப்ளாண்டிங்ஸ் மாளிகைக்கு செல்கிறான், எம்ஸ்வொர்த் பிரபுவின் செயலாளர் பாக்ஸ்டருக்கு சந்தேகம்… கடைசியில் எல்லாம் சுபமாக முடிகிறது.

இந்தப் பதிவுக்காக எல்லா ஸ்மித் நாவல்களையும் மீண்டும் ஒரு முறை படித்தேன். பதின்ம வயதில் ஸ்மித் நாவல்கள் – குறிப்பாக Psmith in the City மனதைக் கவர நிறையவே வாய்ப்பிருக்கிறது. எல்லா நாவல்களுமே ஏறக்குறைய சமமான தரம்தான். ஆனால் 50 வயதுக்கு மேல் முதன்முறையாகப் படித்தீர்கள் என்றால் அலுப்புத் தட்ட வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கு உள்ள cult following-இல் அனேகமாக பதின்ம வயதில் படித்தவர்கள்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உட்ஹவுஸ் பக்கம்