க.நா.சு. சிறுகதைகள்

க.நா.சு.வுக்கு என் மனதில் ஒரு தனி இடம் உண்டு. அவரைப் பற்றி எப்போது நினைத்தாலும் புன்னகைக்காமல், மனதில் சிறு மகிழ்ச்சி எழாமல் இருந்ததே இல்லை. என்று படித்திருக்கிறீர்களா? புத்தகத்தைப் படித்தேனோ அன்றிலிருந்தே அவரை சஹிருதயராக, நண்பராகத்தான் உணர்ந்திருக்கிறேன். என் மனதில் அவர் எழுத்தாளர் அல்லர்;  இலக்கிய ஆர்வலர், விமர்சகர், இலக்கியத்தை அறிமுகப்படுத்தி வைப்பவர்தான். நண்பேண்டா!

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. க.நா.சு.வை நான் சிறந்த எழுத்தாளராகக் கருதவில்லை. விடாமல் இலக்கியம் படைக்க முயற்சி செய்தவர்தான்; பல பரிசோதனைகளைச் செய்தவர்தான். ஆனால் அவரது எழுத்தில் கொஞ்சம் விலகி நின்று இப்படி எழுதித்தான் பார்ப்போமே என்ற அணுகுமுறை தெரிகிறது. மெத்தப் படித்தவர், பல விதமான எழுத்துக்களை அனுபவித்தவர், இந்த உத்தியைப் பயன்படுத்திப் பார்ப்போம், அப்படி எழுதிப் பார்ப்போம் என்று கொஞ்சம் விட்டேத்தித்தனமாக, முழு ஈடுபாடு இல்லாமல் எழுதியதாகத் தோன்றியது. சரியாக வரவில்லையா, பரவாயில்லை விடு கழுதையை என்று போய்விடுவார் என்று தோன்றுகிறது. அதுவும் சிறுகதைகளில் இந்த பலவீனம்  எனக்கு உறுத்திக் கொண்டு தெரிகிறது.

இத்தனைக்கும் அவர் பொய்த்தேவு என்ற உலகத்தரமான நாவலை எழுதி இருக்கிறார். சில நல்ல குறுநாவல்களை எழுதி இருக்கிறார்.  ஆனால் என்னவோ குறைகிறது. அவரது சிறுகதைகளில் இது கட்டாயம் படிக்க வேண்டிய சிறுகதை, மொழிபெயர்க்கப்பட வேண்டிய சிறுகதை இது என்று தோன்றவே இல்லை.

என்னைப் பொறுத்த வரையில் எழுத்தாளராக, குறிப்பாக சிறுகதை எழுத்தாளராக, க.நா.சு.வின் பலம் என்பது ஒரு உச்சத் தருணத்தை சித்தரிப்பதுதான். அது சரியாக வந்துவிட்டால் கதை நன்றாக இருக்கிறது – குறைந்தபட்சம் எனக்குப் பிடித்திருக்கிறது. இல்லாவிட்டால் எனக்கு அது தண்டமாகத் தெரிகிறது. வாழ்ந்தவர் கெட்டால், நளினி குறுநாவல்களிலும் தேள் போன்ற சிறுகதைகளிலும் அந்த உச்சக்கட்டம் அருமையாக வந்திருக்கிறது. அவரும் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் அந்த உச்சக்கட்டத்துக்காகத்தான் முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது. ஆட்கொல்லி, தர்மம் போன்ற படைப்புகளிலும் அவர் எண்ணிய உச்சக்கட்டம் எது என்று தெளிவாகத் தெரிகிறது.

பல சிறுகதைகள் ஒரு தருணத்தை – சம்பவத்தை விவரிக்கின்றன. அங்கே நாமே பக்கத்தில் நின்று பார்ப்பது போல இருக்கிறது. கதை என்று ஒன்று இல்லாமலே போய்விட்டாலும் அந்த உணர்வு சில கதைகளுக்கு விசேஷ charm-ஐத் தருகிறது. ஆடரங்கு, கொலைபாதகன், சிட்டுக்குருவி போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். அதிலும் பல கதைகளில் அவர் காட்டுகிற உலகம் இன்று இல்லை. இல்லாத உலகத்தை பக்கத்தில் நின்று பார்ப்பது நிறைவாக இருக்கிறது.

க.நா.சு.வின் பல சிறுகதைகள் archive.org தளத்தில் கிடைக்கின்றன. விடாமல் எல்லாவற்றையும் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை தேள். தருமு மணக்கோலத்தில் பந்தலை விட்டு இறங்கி வந்து சித்தப்பாவை கேள்வி கேட்கும் இடம் ஒரு காவியத் தருணம்.

பிடித்த இன்னொரு சிறுகதை தர்மம். தர்மக் கணக்கில் எழுதிய ஆறணா திரும்பி வருவது ஒரு நல்ல தருணம், ஆனாலும் என்னவோ குறைகிறது.

கொலைபாதகன் சிறுகதையில் மனைவியிடம் சிரித்துப் பேசியவனைக் கொன்றுவிட்டு (மனைவிக்கும் நல்ல அடி) சிறைக்குள் நுழையும் கைதியைப் பார்த்து அவன் மனைவி கதறிக் கதறி அழுகிறாள் என்பதில் என்ன கதை இருக்கிறது? ஆனால் அதுதான் கொலைபாதகனின் ஒற்றை வரிச்சுருக்கம். அந்த நிகழ்வைப் படிக்கும்போது இது உண்மையாக நடந்திருக்க வேண்டும், என்ன அப்படி சந்தேகப்பிராணியா, மனைவி ஏன் அழுகிறாள் என்றெல்லாம் யோசிக்க வைத்துவிடுகிறார்.

ஆடரங்கு சிறுகதையில் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆடும் சிறுமியின் கண்ணில் சிறப்பாக விவரிக்கப்படுகிறது. கதை என்று ஒன்று இல்லாவிட்டாலும் உண்மையாக இருக்கிறது.

ஒரு கடிதம் நல்ல சிறுகதை. கணவனின் முன்னாள் காதலை மனைவி எதிர்கொள்ளும் விதம் நன்றாக வந்திருக்கிறது. இரண்டாவது கல்யாணம் படிக்கக் கூடிய சிறுகதை. ஒரு காலகட்டத்தில் இளையாள், இரண்டாவது மனைவி என்பது எப்படிப்பட்ட உணர்வு என்பதை அழகாகச் சித்தரிக்கிறது.

புழுதித்தேர் சிறுகதையில் ஒரு நிமிஷம் க.நா.சு.வின் வாழ்க்கையே இப்படி இருந்திருக்குமோ என்று யோசிக்க வைத்துவிட்டார். பேரன்பு எளிய சிறுகதை; விவரிப்பது கஷ்டம், ஆனால் எனக்குப் பிடித்திருந்தது. சீதாராமன் போன்ற சிறுகதைகள் எல்லாம் டைம் பாஸ்தான். ஆனால் அன்று கல்லூரி வரை சென்ற பெண்களுக்கு இயல்பாக ஈர்ப்பு ஏற்படுவதை சித்தரிக்க முயற்சித்திருக்கிறார். தூக்கம் நல்ல கரு உள்ள கதை, ஆனால் சுமாராகத்தான் வந்திருக்கிறது. படித்த பெண் எளிய கதைதான், அந்தக் காலத்து வாரப் பத்திரிகை கதைதான், ஆனாலும் புன்னகைக்க வைக்கிறது. முதல் கதை சிறுகதையின் முத்தாய்ப்பும் புன்னகைக்க வைத்தது. இலக்கிய ஆசிரியனின் மனைவி சிறுகதையும் அப்படித்தான், புன்னகைக்க வைக்கிறது. கிறுக்கெழுத்து சிறுகதையை ஒரு வரியாக நினைத்து எழுதி இருக்கிறார் – பிச்சைக்காரர்களிடம் பிச்சை கேட்கும் ஏழை. படிக்கலாம். நாரீதிலகம் இந்தியா மீது படையெடுத்து வந்த முதல் முஸ்லிம் படைத்தலைவன் முகமது பின் காசிமைப் பற்றிய கதை. படிக்கலாம்.

 பிரம்மாவுக்கு உதவி போன்றவை எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. காந்தியும் அணுகுண்டும் சிறுகதையில் அவருக்கு – பொதுவாக அந்தக் காலத்தில் – காந்தி மீது இருந்த பிரமிப்பு வெளிப்படுகிறது, அவ்வளவுதான். பேசாமடந்தை, நீங்க தூங்கறச்சேதான், மனமாற்றம், மஹாதியாகம், சோதனை, சரோஜாவின் சவுரி, கிரகப்பிரவேசம் பற்றி எல்லாம் சொல்ல ஒன்றுமே இல்லை.

ஆடரங்கு என்று ஒரு சிறுகதைத் தொகுதி கிடைத்தது. எதுவும் படித்தே ஆக வேண்டிய சிறுகதை இல்லைதான். இருந்தாலும் படிக்கலாம்.

ஜெயமோகன் தெய்வஜனனம் என்ற சிறுகதையை தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். அந்தக் கதை கிடைக்கவில்லை. எஸ்ரா பட்டியலில் க.நா.சு.வின் எந்தச் சிறுகதையும் இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் அவரது எந்தச் சிறுகதையும் எனக்கு முக்கியமானதாகப் படவில்லை. சிறந்ததாக நான் கருதுவது தேள் சிறுகதையை. ஆனால் என் மனதில் அவருக்கு ஒரு விசேஷ இடம் இருக்கிறது, என் கண்ணில் அவரது எழுத்துக்களில் ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறது. அதனால் நான் படிப்பேன்…

அவரை சந்தித்திருந்தால் பெரிதும் மகிழ்ந்திருப்பேன், ஆனால் சந்திக்கவில்லையே என்று எந்த வருத்தமும் இல்லை. புத்தகங்கள் மூலமே – அதுவும் படித்திருக்கிறீர்களா? மூலமே அவர் நண்பராகிவிட்டார், பார்க்கவில்லையே என்பது இரண்டாம்பட்சம்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: