தமிழின் முதல் செய்திப் பத்திரிகை

சீனி. வேங்கடசாமியின் சொற்களில்:

1855, தினவர்த்தமானி: பெயரைக் கண்டு தினசரி பத்திரிகை எனக் கருத வேண்டாம். இது வாரப் பத்திரிகை. வியாழக்கிழமைதோறும் வெளிவந்தது. பெர்சிவல் பாதிரியார் (Rev P. Percival) இதைத் தொடங்கி இதன் ஆசிரியராக இருந்தார். தினசரி பத்திரிகையின் பெரிய அளவில் அச்சிடப்பட்டது. செய்திகளுடன் இலக்கியம், விஞ்ஞானம் முதலிய கட்டுரைகளும் வெளிவந்தன. அரசாங்கத்தார் மாதம் 200 ரூபாய் இப்பத்திரிகைக்கு நன்கொடை அளித்தனர். பெர்சிவல் ஐயர் விலகிக் கொண்ட பிறகு இந்நன்கொடை நிறுத்தப்பட்டது. அவருக்குப் பிறகு ஏட்டுச் சுவடியிலிருந்து பல நூல்களைப் பதிப்பித்தவரான சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இதன் ஆசிரியராக சில காலம் இருந்தார். பிறகு விசுவநாத பிள்ளை இதன் ஆசிரியராக இருந்தார். தமிழில் செய்திகளை வெளியிட்ட முதல் பத்திரிகை இதுவே.

தினவர்த்தமானி தெலுங்கிலும் 1856-இலிருந்து வரத் தொடங்கி இருக்கிறது. தெலுங்குப் பத்திரிகை 700 பிரதிகள் விற்றதாம். தமிழ் எத்தனை பிரதிகள் விற்றது என்று தகவல் இல்லை, எத்தனை காலம் பத்திரிகை வெளிவந்தது என்றும் தெரியவில்லை.

முதல் செய்திப் பத்திரிகை தினவர்த்தமானி; முதல் பத்திரிகை? சீனி. வே. சொற்களில்:

1831, தமிழ்ப் பத்திரிகை: திங்கள் இதழ். கிறிஸ்துவ சமயப் பத்திரிகை. ‘Madras Religious Tract Society’-ஆல் சென்னையில் அச்சிடப்பட்டது. கிறிஸ்துவ மத சம்பந்தமான கட்டுரைகள் இதில் எழுதப்பட்டன. தமிழில் முதன்முதல் வெளிவந்த பத்திரிகை இதுவே. அடிக்கடி ஆசிரியர்கள் மாறியபடியால் வெளிவருவதில் தவக்கம் ஏற்பட்டது.

முதல் சிறுவர் பத்திரிகை? சீனி. வே. சொற்களில்:

1840, பாலதீபிகை: சிறுவர்களுக்கான பத்திரிகை. ‘மூன்று மாதத்துக்கு ஒரு முறை நாகர்கோவிலிலிருந்து வெளிவந்தது. 1852 வரையில் நடந்தது.

ஆதாரம்: சீனி. வேங்கடசாமி எழுதிய 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் பத்திரிகைகள்