நாராய் நாராய் செங்கால் நாராய்

(மீள்பதிவு) – பாடலுக்கு யூட்யூப் சுட்டி கிடைத்ததால் மீள்பதித்திருக்கிறேன்.

எனக்கு கவிதை அலர்ஜி உண்டு என்றாலும் சில கவிதைகள் பிடிக்கும். எனக்குப் பிடித்த தமிழ் கவிதைகள் என்று ஒரு லிஸ்ட் கூட போட்டிருந்தேன். அதில் விட்டுப் போன ஒரு கவிதை.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

சிறு வயதிலேயே பிடித்துப்போன ஒரு கவிதை இது. பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் என்ற வரிகளில் இருக்கும் அழகான படிமம், நனை சுவர் கூரை கனைபடு பல்லி, கையது கொண்டு மெய்யது பொத்தி ஆகியவை கொண்டு வரும் வறுமையின் காட்சிகள், பாட்டு பூராவும் இழைந்திருக்கும் சோகம், சந்தத்தை மொழி பெயர்க்க முடியாவிட்டாலும் மொழி பெயர்க்கக் கூடிய கருத்து எல்லாமே மிக அற்புதமாக இருக்கிறது.

கவிதையை எழுதியவர் பெயர் தெரியவில்லை. கவிதையில் சத்திமுத்த வாவி என்று ஒரு இடத்தில் வருகிறது, அதனால் எழுதியவரையும் சத்திமுத்தப் புலவர் என்றே குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் கோனார் நோட்ஸ் இல்லாமல் பாட்டு புரிகிறது. நான் மொழியை கருத்துகளை பரிமாறக் கொள்ள உதவும் ஒரு கருவி என்ற அளவில் மட்டுமே பார்ப்பவன். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் முழங்குப்பா, காது ரொய்ங் என்கிறது என்று சொல்லக் கூடியவன். ஆனால் இதைப் படிக்கும்போது நான் தமிழன், இது என் மொழி, பல நூறு வருஷங்களுக்கு முன்னால் சாரமுள்ள இந்த கவிதையை இன்றும் புரியும் வார்த்தைகளில் எழுதியவன் என் பாட்டன் என்று ஒரு பெருமிதம் ஏற்படுகிறது என்று பீற்றிக்கொண்டேன். உடனே இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்ஸ் (பகவதி பெருமாள்) “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” என்று பாட ஆரம்பித்துவிட்டான். அவன் போன்றவர்களுக்காக எழுதிய நோட்ஸ் கீழே.

வரி பொருள்
நாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே
நீயும் நின் பேடையும் தென் திசைக் குமரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின்
வட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட
பாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம்
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய்
கையது கொண்டு மெய்யது பொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும்
ஏழையாளனை கண்டனம் எனமே உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!

இது சங்கக் கவிதையா தனிப் பாட்டா எதுவும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

ஒரு மங்கலான நினைவு -“எங்கள் வாத்தியார்ஏதோ ஒரு திரைப்படத்தில் நாகேஷ் ரிடையர் ஆன ஏழை வாத்தியார்; ஏதோ பெரிய செலவுக்காக பழைய மாணவர்களிடம் பண உதவி கேட்கப் போவார். அப்போது நாராய் நாராய் செங்கால் நாராய் என்று தொடங்கும் ஒரு பாட்டை பாடுவார்.

தகவல் தந்த சாரதாவுக்கு நன்றி! பாடலில் டைப்போவை திருத்திய ஜடாயுவுக்கும் நன்றி! பாடலுக்கு யூட்யூப் சுட்டி தந்த சந்திரனுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்