கிருத்திகாவின் “வாசவேஸ்வரம்”

வெகு நாளாகப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம். சான் ஹோசே நூலகத்தில் கிடைத்தது.

கதை நாற்பதுகளில் நடப்பது போலத் தெரிகிறது. சின்ன கிராமம். கதையின் தளம் பிராமணக் குடியிருப்பு. முறை, சம்பிரதாயம் என்று வார்த்தைக்கு வார்த்தை பேசுகிறார்கள். ஆனால் முறை தவறிய காமம்தான் மனிதர்களை செலுத்தும் முக்கியமான சக்தியாக இருக்கிறது. காலட்சேபம் செய்பவருக்கு தொடுப்பு. டாக்டர் சுந்தாவுக்கு சுப்பையா மனைவி விச்சுவோடு உறவு. சுப்பையாவுக்கு சந்திரசேகரய்யர்தான் போட்டியாளர், விச்சு அவரை விரும்புகிறாள் என்று சுப்பையா நினைக்கிறான். சந்திரசேகரய்யரோ மனைவி ரோகிணியோடு ஒரு ஈகோ போராட்டத்தில். ரோகிணிக்கு பிச்சாண்டி மேல் ஈர்ப்பு. சுந்தாவின் வீட்டில் தங்கி இருக்கும் ஏழை கோமு மீது ஊர்ப் பெரிய மனிதர் பெரிய பாட்டாவின் மகன் ரங்கனுக்கு ஒரு கண். காமம்தான் கிராமத்தின் முக்கிய சக்தியாக இருக்கிறது.

அடுத்தபடி சின்னச் சின்ன ஈகோ மோதல்கள். பிச்சாண்டிதான் ஊரின் rebel. கம்யூனிசம் அது இது என்று பேசிக் கொண்டிருக்கிறான். தேர்தலுக்கு வேறு நிற்கப் போகிறான். நடுவில் விருந்துக்கு முறைப்படி அழைக்கவில்லை என்று சண்டைகள் வேறு. அப்படியே கதை நீண்டு ஒரு கொலை வழியாக முடிகிறது.

ஒரு சின்ன வட்டத்துக்குள் தேங்கிக் கிடக்கும் கிராமத்தை மிக அருமையாக சித்தரிக்கிறார். எனக்கு என் தாத்தா வீடு இருந்த நீண்ட அக்ரஹாரத் தெரு நினைவு வந்தது. சமையல், சாப்பாடு, சீட்டாட்டம் தவிர வேறு எதுவும் எனக்கு என் சிறு வயதில் தெரியவில்லை. காமம் நிச்சயமாக இருந்திருக்கும் என்று இப்போது தெரிகிறது.

காமம் எப்படி எல்லாம் அலைக்கழிக்கிறது என்பதும் அருமையாக வந்திருக்கிறது. ரோகிணிக்கும் சந்திரசேகரய்யருக்கும் நடுவில் நடக்கும் மோதல், சுப்பையா வீட்டில் விருந்துக்கு முறைப்படி அழைக்கவில்லை என்று டாக்டர் சுந்தா போடும் சண்டை எல்லாம் பிரமாதம்.

கம்யூனிசமே எட்டிப் பார்க்கும் கிராமத்தில் யாரும் காந்தியைப் பற்றி மூச்சு விடாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காந்தி பேரை வைத்து ஜல்லி அடிக்கும் ஒரு பாத்திரத்தையாவது உருவாக்கி இருந்தால் நாவலின் நம்பகத்தன்மை இன்னும் அதிகரித்திரிருக்கும். (இப்போது ஒன்றும் குறைவாக இல்லை)

ஜெயமோகன்

ஆன்மா தேங்கிப்போய் தீனி காமம் என புலன் சுவைகளில் மூழ்கிப்போன ஒரு கிராமத்தின் சித்திரம் இது. அவ்வகையில் முக்கியமானது. ஆனால் சித்தரித்து என்ன நிகழ்த்துகிறார் என்றால் ஏமாற்றமே

என்று இந்த நாவலைப் பற்றி எழுதி இருந்தார். அவர் கருத்து எனக்கு இசைவானதல்ல. சித்தரிப்பு மட்டுமே போதுமானது என்ற ஸ்கூலைச் சேர்ந்தவன் நான். இந்த நாவல் சித்தரிப்போடு நின்றுவிடுகிறது என்பதைக் கூட நான் ஏற்கமாட்டேன். அப்படி புலன் சுவைகளில் ஒரு கூட்டமே முழுகிப் போவது சாத்தியம் என்பதே இந்த நாவலின் தரிசனம். அதற்கு மேலும் வாழ்க்கை உண்டு, வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு என்பதை மறந்துவிடுவது சாத்தியமே என்பதே இந்த நாவல் காட்டும் தரிசனம். அந்த சூழலைத் தாண்டும் கோட்டிகள் நம் கண்ணுக்கு கோட்டிகளாகத் தெரிகிறார்கள் என்பதே நம் பலவீனம்.

1966-இல் வெளிவந்த புத்தகம். வாசகர் வட்டம் பதிப்பா? 2007-இல் காலச்சுவடு மீண்டும் வெளியிட்டிருக்கிறது. விலை 140 ரூபாய். கிடைத்தால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குங்கள். ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டிலும் எஸ்.ரா.வின் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டிலும் இடம் பெறுகிறது.

தமிழ் இலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கிருத்திகா பக்கம்

தொடர்புடைய சுட்டி: கிருத்திகா மறைந்தபோது ஜெயமோகன் எழுதிய அஞ்சலி

12 thoughts on “கிருத்திகாவின் “வாசவேஸ்வரம்”

  1. ஆர். வி – இப்பொழுது தான் படித்தேன். நான் மஞ்சக்குடியில் என் பெரியம்மா வீட்டில் நிறைய கோடை விடுமுறைகளை கழித்து இருக்கிறேன். அந்த கிராமத்தை, அதன் மக்களை ஞாபகப்படுத்தியது. சாப்பாடு, வம்புப்பேச்சு, சீட்டாட்டம், கோவில் சார்ந்த நடவடிக்கைகள் இது தான் தினமும்.

    சந்திரசேகரைய்யரின் அக்கா போல வீட்டு ஆணை தலையில் இருந்து ஒரு நிமிடம் கூட இரக்காத அக்காக்கள், கோமு போல அப்பாவி போல் இருந்து கொண்டு தன் காரியத்தை சாமர்த்தியமாக, தான் நினைப்பதை ஆணின் சொந்த அபிப்ராயாமாக எண்ண வைத்து காரியம் சாதிக்கும் பெண்கள், இதில் மாட்டிக்கொண்டு passive aggressive ஆக செயல் படும் ரோகிணிகள் என நான் நிஜத்தில் பார்த்த பெண்களை அப்படியே சித்தரித்திருக்கிறார். கிராம வாழ்க்கையின் போலித்தனைத்தை நான் மிக நெருக்கமாக உணர்ந்த ஒரு சம்பவம் என் நினைவில் என்றும் ஒன்று உண்டு. வீட்டில் செய்த சர்க்கரை பொங்கலை அடுத்த வீட்டிற்கு கொடுக்கும் பொழுது அதில் ஒரு கரண்டி நெய் ஊற்றி கொடுப்பார்கள். ஏன் மொத்தமாக விடலாமே என்று கேட்ட பொழுது, இல்லை இப்படி விட்டாதான் நம்மாத்து சர்க்கரை பொங்கலில் நிறைய நெய் இருக்குன்னு எல்லாரும் நினைச்சுப்பா என்று சொன்னார்கள். மற்றவர்கள் வீட்டிலிருந்து வரும் சர்க்கரை பொங்கலும் நெய் ஓட ஓட தான் வரும். நகரம் சார்ந்தே வளர்ந்த எனக்கு இந்த திறந்த ரகசியத்தின் லாஜிக் ஓட்டைகள் வேறு பயங்கரமாக படுத்தும்.

    கம்யூனிசம் பேசும் பிச்சாண்டி ரோகிணியை கோவிலில் சந்திக்கும் போழுது சொல்கிறான், நீ ஒரு வார்த்தை சொன்னால் இதை எல்லாம் விட்டு விடுகிறேன் என்று. காமத்திற்கு முன் கொள்கை எல்லாம் எம்மாத்திரம் இவர்களுக்கு.

    இன் நாவலையும் பசித்த மானிடத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக படித்தேன். எல்லோரும் பேசும் கிராமம் சார்ந்த innocence, ஒழுக்கம் எல்லாம் எவ்வளவு கற்பனை அல்லது wishful thinking என்று தோன்றுகிறது.

    எனக்கு மிகவும் பிடித்தது.

    கடைசியில் நிகழும் கொலை எனக்கு நாகம்மாளை நினைவூட்டியது.

    Like

    1. அருணா, நான் வளர்ந்த ஒரு கிராமம் முதலியார்கள் நிறைந்தது. முதலியார்கள் சாப்பிட்ட வாழை இலையைத் தூக்கிப்போடும்போது அதில் விளக்கெண்ணெய்யைத் தடவி வெளியில் போடுவார்களாம், பார்ப்பவர்கள் அப்பா எவ்வளவு நெய் போட்டு சாப்பிட்டிருக்கிறார்கள் என்று வயிறு எரியட்டும் என்று. ஒரு பழமொழி வேறு சொல்வார்கள் – “முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்கு கேடு” என்று. 🙂 நல்ல வேளையாக அதை சொல்பவர்கள் எல்லாரும் முதலியார்கள்தான் 🙂

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.