டீனேஜ் ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட் பள்ளி மாணவனாக இருந்தபோது என்னவெல்லாம் நடந்திருக்கும்? இதை வைத்து இப்போது ஒரு சீரிஸ் வருகிறது. சார்லி ஹிக்சன் என்பவர் எழுதுகிறார். பாண்டுக்கு 13 வயது இருக்கும்போது சீரிஸ் ஆரம்பிக்கிறது. இது வரை ஐந்து கதைகள் வந்திருக்கின்றன. பாண்டின் “இன்றைய” திறமைகள், பிரச்சினைகளுக்கு சில கதைகளில் ஒரு மூல காரணம் சொல்லப்படுகிறது. உதாரணமாக ஏதோ ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதையில் பாண்ட் ஈடன் (Eton) பள்ளியிலிருந்து ஒரு வேலைக்காரியுடன் ஓடிவிட்டதாக ஒரு குறிப்பு வரும். அதுதான் By Royal Command கதை. பாண்ட் ஜூடோ மாதிரி ஏதோ ஒரு கலையில் நிபுணர். அதை அவருக்கு ஒரு ஜப்பானியர் Hurricane Gold கதையில் கற்றுத் தருகிறார். ஒரு பதினைந்து பதினாறு வயதில் படிக்க ஏற்றவை. எனக்கும் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

Silverfin, 2005: பாண்ட் ஈடன் பள்ளியில் 13 வயதில் சேருகிறான். அங்கே ஹெல்லபோர் என்ற மாணவனுடன் போட்டி ஏற்படுகிறது. ஹெல்லபோர் ஒரு விளையாட்டுப் போட்டியில் ஏமாற்றி வெல்ல முயற்சிப்பதை பாண்ட் தடுக்கிறான். பிறகு ஸ்காட்லாந்துக்கு விடுமுறைக்கு போகிறான். பக்கத்தில் ஹெல்லபோரின் கோட்டை இருக்கிறது. அங்கே உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கிறான். ஹெல்லபோர்-பாண்ட் விளையாட்டுப் போட்டி சுவாரசியமாக இருக்கும். சில பாண்ட் கதைகளில் – கோல்ட்ஃபிங்கர், மூன்ரேகர் நினைவு வருகிறது – மெயின் கதையை விட அதில் நடக்கும் விளையாட்டுப் போட்டி சுவாரசியமாக இருக்கும். கோல்ட்ஃபிங்கரில் கோல்ஃப், மூன்ரேகரில் பிரிட்ஜ். அந்த மாதிரி இருந்தது.

Blood Fever, 2006: பாண்ட் விடுமுறைக்கு சக மாணவர்கள், ஆசிரியர்களுடன் இத்தாலியை சேர்ந்த சார்டினியா என்ற தீவுக்கு செல்கிறான். அங்கே ஒரு ரகசிய திருட்டு கும்பல்.

Double or Die, 2007: முப்பதுகளில் ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதை திருட கம்யூனிஸ்ட் ரஷியா முயற்சி செய்கிறது. பாண்ட் தடுக்கிறான். பாண்டுக்கு சீட்டு விளையாடுவதில் அனுபவம் ஏற்படுகிறது.

Hurricane Gold, 2007: மெக்சிகோவுக்கு செல்லும் பாண்ட். அங்கே திருடர்கள், புயல், கடைசியாக ஒரு வில்லனின் தீவு. அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பல அபாயங்கள் நிறைந்த ஒரு பாதையில் செல்ல வேண்டும் என்று வில்லன் நிபந்தனை விதிக்கிறான். முதலை, பிரான்ஹா, சூடான தகடு மேல் நடக்க வேண்டியது, தேள் என்று பல அபாயம் இருக்கிறது. டாக்டர் நோ கதையை நினைவுபடுத்துகிறது.

By Royal Command, 2008: ஈடனுக்கு வரும் இங்கிலாந்து அரசனை கொல்ல கம்யூனிஸ்ட் சதி. உண்மையிலேயே கம்யூனிஸ்ட் சதிதானா? பாண்ட் காதலிலும் முதல் தடவையாக விழுகிறான்.

உங்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் கதைகள் பிடிக்கும் என்றால் நிச்சயமாக படிக்கலாம். த்ரில்லர், ஆக்ஷன் கதைகள் என்ற வகையில் C+ grade-தான் கொடுப்பேன்.

தொடர்புடைய பக்கம்:
யங் பாண்ட் சீரிஸ் – விக்கி குறிப்பு

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்