வெங்கட் சாமிநாதன் – மீண்டும்

jeyamohanகிட்டத்தட்ட ஐந்து வருஷங்களுக்கு முன் எழுதிய பதிவு. இப்போது பதிக்கக் காரணம் சமீபத்தில் ஜெயமோகன் “வயதான காலத்தில் சாமிநாதன் அதுவரை பேணிய அனைத்துச் சமநிலைகளையும், நவீன இலக்கிய மதிப்பீடுகளையும் இழந்து சாதியுணர்டனும் மதவெறியுடனும் எழுதிய பல பதிவுகள் இணையத்தில் சிதறிக் கிடக்கின்றன” என்று எழுதி இருப்பதுதான். இணையத்தில் அப்படி எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை. ஐந்து வருஷங்களுக்கு முன்னால் என் ஒரிஜினல் பதிவை ஜெயமோகனும் படித்து ஒரு பின்னூட்டமும் எழுதி இருந்தார். அப்போது அவரும் என் கருத்தை மறுத்து வெ.சா. தன் விழுமியங்களை இழந்து ஜாதி மதவெறியுடன் நிறைய எழுதி இருக்கிறார் என்று எதுவும் சொல்லவில்லை.

பதிவிலிருந்து relevant பகுதி.

வெ.சா. தற்போதெல்லாம் பிராமண சார்பு நிலை எடுக்கிறார் என்ற விமர்சனத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். இதற்கு ஆதாரமாக சுட்டப்படுவது அவர் சோ. தர்மனின் கூகை என்ற நாவலுக்கு எழுதிய விமர்சனமும் தமிழ் ஹிந்து தளத்தில் வெட்டுப்புலி நாவலுக்கு எழுதிய விமர்சனமும்தான். கூகையை நான் படித்ததில்லை, அதனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கூகை, வெட்டுப்புலி பற்றிய அவர் கருத்துகளைப் பற்றி எனக்கு விமர்சனம் உண்டு. அவர் திராவிட இயக்கத்தின் போலித்தனம், பிராமண எதிர்ப்பு நிலை ஆகியவற்றைப் பற்றி சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார் என்றும் அந்த முடிவுகளுக்கு பலம் சேர்க்கக் கூடிய கருத்துகள் படைப்புகளில் இருந்தால் அவற்றை emphasize செய்கிறார் என்றும் நான் நினைக்கிறேன். இதில் நான் தவறு காணவில்லை, ஆனால் இந்த நிலைப்பாடு அவரது விமர்சன எல்லைகளைக் குறுக்கிவிடுகிறது என்று நினைக்கிறேன்.

இதைத்தான் ஜெயமோகனும் இன்று மனதில் வைத்து எழுதுகிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இந்தக் கட்டுரைகள் எந்த விதத்திலும் ஜாதி மதவெறியை காட்டவில்லை என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். ஜெயமோகனின் இந்தக் கருத்து தவறு என்று ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஹிந்துத்துவர்கள் சொன்னால் அவர்களுடைய அரசியல் நிலை காரணமாக பெரியவரின் மத வெறிக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் என்று அவர்கள் கருத்துக்களை ஜெயமோகனும் மற்றவர்களும் புறம் தள்ளிவிடக் கூடும். ஆனால் அவர்களுக்கு நேர் எதிர் அரசியல் நிலை உள்ள, ஹிந்துத்துவ அரசியலை முற்றிலும் நிராகரிப்பவ்ர்களிலும் இந்தக் கருத்து தவறானது என்று ஆணித்தரமாக பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யத்தான் இதை மீள்பதித்திருக்கிறேன்.

கூகையை பிறகு படித்தேன். நாவலின் ஒரு சிறு பகுதியைப் (ஒரு அய்யர் நிலங்களை நாயக்கர்-தேவர் போன்ற ஆதிக்க ஜாதியினரைத் தவிர்த்து பள்ளருக்கு குத்தகைக்கு கொடுப்பது, பிறகு விற்பது இத்யாதி) பற்றித்தான் வெ.சா. தன் விமர்சனத்தில் நிறையப் பேசுகிறார். அவரது விமர்சனத்தை மட்டும் படிப்பவர்களுக்கு இதுதான் நாவலின் முக்கியப் பகுதியோ என்று தோன்றும். கூகை பள்ளர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது, அதில் சம்பந்தப்படும் அளவுக்குத்தான் பிற ஜாதியினர் விவரிக்கப்படுகிறார்கள். வெ.சா. தனக்கு ஒரு அய்யர் இப்படி செய்தார் என்று வருவது தனக்கிருந்த பிம்பங்களை கட்டுடைத்தது, சோ. தர்மனே இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது என்று எழுதுகிறார். நாவலில் அவருடைய takeaway இதுதான் என்று தெளிவாகத் தெரிகிறது. (எண்பத்து சொச்சம் வயதில் மறைந்த வெ.சா.வுக்கே இது கண்திறப்பு என்றால் என் தலைமுறை எத்தனை வியப்படையும்?) கண்திறப்பு அவருக்கு takeaway ஆக இருப்பதில் ஆச்சரியம் என்ன? ஆனால் அந்தக் கண்திறப்பு அவரது நோக்கைக் குறுக்கிவிட்டது, அதனால் அவரது விமர்சனம் முழுமையாக இல்லை. அதற்காக அவரது நேர்மையைப் பற்றியோ, அவர் இதை ஜாதீய, மதக் கண்ணோட்டங்களில் இந்த விமர்சனங்களை எழுதவில்லை என்பதைப் பற்றியோ சந்தேகிக்க எந்த முகாந்தரமும் இல்லை.

படிப்பவர்கள் யாருக்காவது வெ.சா. அப்படி ஜாதி மத வெறியோடு எழுதிய கட்டுரைகள் தெரிந்தால் சுட்டி கொடுங்கள்! அதை விட முக்கியமாக ‘பாலையும் வாழையும்‘ யாரிடமாவது இருந்தால் இரவல் கொடுங்கள்! மின்பிரதி இருந்தால் இன்னும் உத்தமம்…

வசதிக்காக பழைய பதிவை இங்கே சில திருத்தங்களோடு மீள்பதித்திருக்கிறேன்.


இலக்கிய விமர்சனம் ஒரு கலை. அது தமிழ்நாட்டில் குறைவு.

விமர்சனத்துக்கு அடிப்படை நேர்மைதான். படைப்புகள்தான் விமர்சிக்கப்பட வேண்டும். நீங்கள் மதிப்பவர், உங்களுக்குப் பிடித்தவர், உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர் எழுதினார் என்பதற்காக ஒரு படைப்பை உயர்த்திப் பிடிக்கக் கூடாது. உங்களுக்குப் பிடிக்காதவர் எழுதினார் என்பதற்காக தாழ்த்துதலும் கூடாது. உங்களுடைய framework என்ன என்று தெளிவாக இருக்க வேண்டும். ஒரு புத்தகம் ஏன் பிடித்திருக்கிறது, ஏன் பிடிக்கவில்லை என்று தெளிவாக விளக்க வேண்டும்.

அப்படி நேர்மை, தெளிவு இரண்டும் நிறைந்த ஒரு அபூர்வ மனிதர் வெங்கட் சாமிநாதன். வெ.சா.வின் கருத்துகளோடு எனக்கு எப்போதும் ஒத்துப் போவதில்லை. ஆனால் அவரது integrity சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. தான் நினைப்பதைத்தான் அவர் எழுதுகிறார், சும்மா முகஸ்துதிக்காகவோ, தனக்கு வேலை நடக்க வேண்டுமென்றோ அவர் எழுதுவதில்லை. ஐம்பது ஆண்டுகளாக அவர் ஒரு சின்ன வட்டத்துக்குள் இருந்துகொண்டே பெரிய விஷயங்களைச் செய்திருக்கிறார்.

வ.ந. கிரிதரன் அவரைப் பற்றி சிறப்பான ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். வெ.சா.வை அவ்வளவாகப் படிக்காத என் போன்றவர்களுக்கும் அவரது ஆளுமையை ஓரளவு புரியவைக்கிறார். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

நண்பர் ஜடாயு இன்னும் இரண்டு சுட்டிகளைக் கொடுத்திருக்கிறார். அவரே எழுதிய “வெ.சா என்னும் சத்தியதரிசி” என்று ஒன்று, அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “நமக்கு எதற்கு வெ.சா.?” என்று ஒன்று. இரண்டு கட்டுரைகளும் வெ.சா.வின் ஆளுமையை இன்னும் புட்டுப் புட்டு வைக்கின்றன.

வெ.சா. தற்போதெல்லாம் பிராமண சார்பு நிலை எடுக்கிறார் என்ற விமர்சனத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். இதற்கு ஆதாரமாக சுட்டப்படுவது அவர் சோ. தர்மனின் கூகை என்ற நாவலுக்கு எழுதிய விமர்சனமும் தமிழ் ஹிந்து தளத்தில் வெட்டுப்புலி நாவலுக்கு எழுதிய விமர்சனமும்தான். கூகையை நான் படித்ததில்லை, அதனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கூகை, வெட்டுப்புலி பற்றிய அவர் கருத்துகளைப் பற்றி எனக்கு விமர்சனம் உண்டு. அவர் திராவிட இயக்கத்தின் போலித்தனம், பிராமண எதிர்ப்பு நிலை ஆகியவற்றைப் பற்றி சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார் என்றும் அந்த முடிவுகளுக்கு பலம் சேர்க்கக் கூடிய கருத்துகள் படைப்புகளில் இருந்தால் அவற்றை emphasize செய்கிறார் என்றும் நான் நினைக்கிறேன். இதில் நான் தவறு காணவில்லை, ஆனால் இந்த நிலைப்பாடு அவரது விமர்சன எல்லைகளைக் குறுக்கிவிடுகிறது என்று நினைக்கிறேன்.

நான் வெ.சா.வை அதிகம் படித்ததில்லை. படித்த வரையில் உலகைப் புரட்டிப் போடும் எதையும் அவர் சொல்லிவிடவும் இல்லை. ஆனால் அவருடைய தாக்கம் முக்கியமானது என்று எனக்கே புரிகிறது. அவர் படைப்பாளி இல்லை, அதனால் இன்னும் ஒரு இருபது வருஷங்களில் மறக்கப்பட்டுவிடுவார் என்று நினைக்கிறேன். இது அவருக்கு மட்டுமல்ல, டி.கே.சி., கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, ம.பொ.சி., கோமல் சுவாமிநாதன் போன்ற தாக்கம் நிறைந்த பல ஆளுமைகளுக்கு நடப்பதுதான். இந்த மாதிரி ஆளுமைகளின் தாக்கம் அவர்களோடு பழகுபவர்கள் மீதுதான் நிறைய இருக்கிறது.

அவரது சிறந்த விமர்சன எழுத்துக்களை தொகுத்துப் போட்டால் இன்னும் கொஞ்ச நாள் தாக்குப் பிடிக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகனின் சர்ச்சைக்குரிய கருத்து
கூகை நாவல் பற்றி வெ.சா., கூகை பற்றி ஆர்வி
வெட்டுப்புலி பற்றி வெ.சா., வெட்டுப்புலி பற்றி ஆர்வி

வ.ந. கிரிதரனின் கட்டுரை
வ.ந. கிரிதரனின் தளம்
வெ.சா. பற்றி ஜெயமோகன் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4)
வெ.சா. பற்றி நண்பர் ஜடாயு – “வெ.சா என்னும் சத்தியதரிசி
வெ.சா. பற்றி அரவிந்தன் நீலகண்டன் – “நமக்கு எதற்கு வெ.சா.?
திண்ணை இணைய இதழில் வெ.சா. கட்டுரைகள்
தமிழ் ஹிந்து தளத்தில் வெ.சா. கட்டுரைகள்
வெ.சா.வின் தளம் (கடைசி பதிவு 2012-இல்)