ராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”

(மீள்பதிவு)

சிறு வயதிலேயே படித்த தரமான படைப்பு. இன்று படிக்கும்போது குறைகள் தெரியத்தான் செய்கின்றன, ஆனால் குறைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ஒரு “தாயின்” தலைமையில் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த “ஆரியக்” குழுக்கள் மெதுமெதுவாக விவசாயம், கிராமம், “அசுரர்களோடு” போர்கள், தெய்வங்கள், இந்தியா வருதல், வேதங்கள், ஜாதி, சிறு அரசுகள், மன்னர்கள், சாம்ராஜ்யங்கள், முஸ்லிம்களின் வருகை, ஆங்கிலேய ஆட்சி, சுதந்திரப் போர் என்று பரிணாமிப்பதை சிறுகதைகள் மூலம் சித்தரிக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால் ஒரு சிறுகதை கூட தனியாகப் படித்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. பிரச்சார நெடி – சாங்க்ரித்யாயன் கம்யூனிஸ்ட் சார்பு உடையவர், ஒரு டிபிகல் அந்தக் கால “முற்போக்கு” நோக்கோடு எழுதுபவர் – கொஞ்சம் அடிக்கத்தான் செய்கிறது. பந்துலமல்லன் போன்ற கதைகள் பழைய ஐதீகக் கதைகளை அப்படியே திருப்பிச் சொல்கிறன. பேசிக் கொண்டே இருப்பார்கள். அவருக்கும் (என்னைப் போலவே) உரையாடல்கள் மூலம்தான் கதையை முன் நகர்த்த முடிந்திருக்கிறது. Subtlety, சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. தட்டையான பாத்திரப் படைப்புதான். இங்கே சொல்லப்படும் சரித்திரமான வந்தேறிய ஆரியர்கள் இந்தியாவில் இருந்த திராவிடர்களை ஆக்கிரமித்தார்கள் என்ற தியரி உண்மையில்லை என்று இன்று பலரும் கருதுகிறார்கள். (அவர் எழுதியபோது இந்த தியரி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நினைக்கிறேன்.)

சில அவசரமாக வரையப்பட்ட ஓவியங்கள் போன்று தோன்றும் கதைகள். ஆனால் அவற்றின் sweep, அவற்றுக்குள்ளே இருக்கும் தொடர்பு அருமை. இத்தனை குறைகள் இருந்தாலும் அது பெரிதாகத் தெரிவதில்லை. மொத்தமாகப் படிக்கும்போது இந்தியாவின் சரித்திரத்தையே காண்பித்துவிடுகிறார். அதுதான் இந்தப் புத்தகத்தை உயர்த்துகிறது.

எனக்கு மிகவும் பிடித்த கதை பிரவாஹன். பிரம்மம் என்ற தியரி எப்படி உண்டானது என்பதை தன் கோணத்தில் கற்பனை செய்திருக்கிறார்.

நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

1944-இல் (ஹிந்தியில்) எழுதப்பட்ட புத்தகம். நான் படித்தது தமிழில். கண. முத்தையா மொழிபெயர்ப்பு. தமிழ் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.

பின்குறிப்பு: சாங்க்ரித்யாயன் இந்திய குறிப்பாக பவுத்த தத்துவங்களில் ஸ்காலராம். இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறாராம். நான் படித்த இன்னொரு புத்தகம் சிந்து முதல் கங்கை வரை. லிச்சாவி குடியரசு மீது மகதப் பேரரசு (பிம்பிசாரன்-அஜாதசத்ரு காலம்) போர் தொடுத்து தோற்றத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட சாண்டில்யன் ஸ்டைல் நாவல். ஆரிய-அனாரிய ரத்தக் கலப்பினால்தான் மன்னர்கள் தலை தூக்குகிறார்கள், குடியரசு முறை அழிகிறது, ஜாதி ஒரு ஏமாற்று, பவுத்த மதத்தின் பெருமை என்று அவருடைய பல தியரிகளை முன் வைத்திருக்கிறார். நயம் இல்லாத புனைவு, புதிதாக ஒன்றுமில்லை. தவிர்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ராகுல் சாங்க்ரித்யாயன் பற்றி விக்கியில்
பிரவாஹன்

9 thoughts on “ராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”

  1. ராகுல சாங்கிருத்யாயனுக்கு மூன்று வாழ்க்கைக்கட்டங்கள். சமிப்ரதாய பிராமண வைதிக குடும்பத்தில் பிறந்தார். புத்த பிட்சுவானார். மார்க்ஸியத்தை கடைசியில் எற்றுக்கொண்டார். அவர் எழுதிய நூல்களெல்லாம் கடைசிக்காலகட்டத்தைச்சேர்ந்தவை

    அவரது தத்துவ அறிவு நுட்பமானது. வரலாற்றறிவு ஐம்பதுகளின் சோவியத் நூல்களால் உருவாக்கப்பட்டது. கோட்பாட்டறிவு அக்கால ஸ்டாலினியத்தால் கட்டமைக்கப்பட்டது

    ராகுல்ஜியின் புனைகதைகளுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை. தவறான சித்திரங்களை கொடுத்து சிந்தனையை தேங்கவும் வைக்கக்கூடும்

    ராகுல்ஜியின் காலக்ட்டத்திலேயே டி டி கோஸாம்பியின் மார்க்ஸிய நோக்கிலான வரலாற்று ஆய்வுகள் வெளிவந்து அவரை காலாவதியாக்கிவிட்டன.

    அவரது தத்துவ நூலான தர்சன்-திக் தர்சன் முக்கியமானது. அது தனித்தனி நூல்களாக ‘இந்து தத்துவ இயல் ‘ பௌத்த தத்துவ இயல்’ என நியூ செஞ்சுரி புக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூல் இந்திய ஞானமரபை தகவல்களின் பிழை இல்லாமல் சாராம்சமாக புரிந்துகொள்ள உதவுவது. ராகுல்ஜின் மார்க்ஸிய நோக்கிலான விமர்சனங்களை ஏற்பவர் ஏற்கலாம்.

    Like

  2. நீங்கள் ஒரு பிற்போக்கான மனிதர்கள் நீங்கள் எப்படி ராகுல்ஜீயை ஏற்பிர்கள்.அவரை விட சிறந்த படைப்பாளி நான் என்கிற சுயநல கருத்துக்களைவிட்டு என்றைக்கு பொதுநல சிந்தனையுடன் ஒன்று பட்டுயுள்ளீர்கள்.

    Like

  3. நந்தன்

    ஜெயமோகன் அவருடைய கருத்துக்களை சொல்கிறார். சமகாலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக கருதப்படும் ஒருவர் வேறு ஒரு புனைவை பற்றிய தன் எண்ணத்தை பதிக்கிறார். தன் கருத்தில் எது ராகுல்ஜியின் சிறந்த படைப்பு என்றும், ஏன் அவர் அப்படி என்ணுகிறார் என்றும் சொல்லி பின்னர் அவருடைய கோட்பாட்டை ஏற்பவர்கள் ஏற்கல்லாம் என்கிறார்.

    இது எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போகிற போக்கில் பிற்போக்குவாதி, சுயநலக்காரர் என சொல்வது நல்ல வாதமாகாது. நீங்கள் அப்படி ஏன் நினைக்கிறீர்கள், எப்படி அவர் கருதில் இருந்து மாறுபடுகிறீர்கள் போன்றவற்றை தகுந்த ஆதாரங்களுடன் உங்களால் முன் வைக்க முடிந்தால் படிக்கும் எல்லோருக்கும் பயனுடையதாக இருக்கும்.

    Like

    1. அன்புள்ள ஜெயமோகன், // ராகுல்ஜியின் புனைகதைகளுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை. // நீங்கள் “வோல்காவிலிருந்து கங்கை வரை”யை ரசிக்கவில்லையா?
      அருணா, // ஜெயமோகன் அவருடைய கருத்துக்களை சொல்கிறார். // நந்தன் என்னைத்தான் சொல்கிறார் என்று நினைத்தேன், நான் தப்பிவிட்டேன் போலிருக்கிறதே! 🙂

      Like

  4. ஜெமோ சொல்வதைப் போல் அவரது தத்துவ நூல்களே அவரின் முக்கிய ஆக்கங்கள்.எல்லாமே தமிழில் வந்துள்ளன.கூடவே அவரது வாழ்க்கை வரலாறு ,ஊர் சுற்றிப் புராணம் போன்றவையும் படிக்க வேண்டியவை/மொழி பெயர்ப்பும் நன்றாகவே இருக்கும்.இவற்றை படிக்காவிட்டால் நீங்கள் நிச்சயம் நிறைய இழக்கிறீர்கள்.அவரது புனைவுகள் அப்படி ஒன்றும் சிலாகிக்கத் தக்கதாய் எனக்கும் தோன்றவில்லை.

    Like

  5. வரலாற்றுப்பொருள் முதல்வாதம் என்கிற கம்யூனிசத்தின் அடிப்படைப் பார்வையின் வழியாக, ஒரு கலர்க்கண்ணாடி வழியாகப் பார்க்கிற மாதிரித்தான், இந்திய வரலாற்றைப் பார்த்திருக்கிறார் இப்படி கலர்க் கண்ணாடி வழியாகப்பார்ப்பதில் ஆதாரங்கள் , உண்மைகள், பகுத்து ஆராய்ந்து எழுதுவது எல்லாமே இரண்டாம்பட்சம்தான் என்பதை விட தேவையில்லாத எக்ஸ்டரா லக்கேஜ் மாதிரி கழற்றிவிடப்படுகிற ஒன்றாக இருப்பதை மீள்பதிவு செய்கிற இந்தத் தருணத்திலாவது யோசித்தீர்களா?

    ஆனால் பள்ளிப் பருவத்தில் ராகுல சங்கிருத்யாயன் விரும்பி வாசித்த ஆசிரியராகத் தான் இருந்தார். கம்யூனிசம் ஒரு இளம்பருவக்கோளாறு என்பதை அறியாத காலம் இன்றைய இளைஞர்கள் எவராவது இதை விரும்பி வாசித்து, தங்கள் கருத்து என்னவென்று சொல்லியிருக்கிறார்களா என்று தேடிப் பார்க்கலாமே ஆர்வி!

    Like

    1. கிருஷ்ணமூர்த்தி,

      // வரலாற்றுப்பொருள் முதல்வாதம் என்கிற கம்யூனிசத்தின் அடிப்படைப் பார்வையின் வழியாக, ஒரு கலர்க்கண்ணாடி வழியாகப் பார்க்கிற மாதிரித்தான், இந்திய வரலாற்றைப் பார்த்திருக்கிறார் // அதில் என்ன தவறு? எழுத்தாளன் விருப்பம். மைசூர் ரசமாக இருந்தால் என்ன, பூண்டு ரசமாக இருந்தால் என்ன, அன்னாசிப்பழ ரசமாக இருந்தால் என்ன, ரசம் ருசியாக இருந்தால் போதாதா?

      Like

  6. Hello RV. I’ve been reading your silicon shelf off & on.

    Thanks .

    This is Vassan Pillai residing here in the state of NM. Are you a US resident..? I would like to mail a 2019 calendar, a collector’s one of sorts, to you. Do send a mailing address to vaasus at gmail dot com.
    Best Regards.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.