கிருஷ்ணன் நம்பி – மீள்பதிவு

நான் முதல் முதலாக படித்த கிருஷ்ணன் நம்பி சிறுகதை மருமகள் வாக்கு. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுப்பில் படித்தேன். அசந்துபோனேன். கதையின் வடிவம், கரு, நடை எல்லாமே கனகச்சிதமாக இருந்தன. என்றும் இந்தக் கதையின் தாக்கம் குறையாது, உலக இலக்கியத்தில் இடம் பெற வேண்டிய கதை.

அப்புறம் நம்பி சுந்தர ராமசாமியின் நண்பர் என்று தெரிந்துகொண்டேன். சுரா என்ற பெரிய ஆகிருதியின் முன் நம்பி மங்கிப் போய்விட்டார், சுரா டெண்டுல்கர் என்றால் இவர் காம்ப்ளி என்று நினைத்துக் கொண்டேன். சுரா நம்பியைப் பற்றி எழுதி இருந்த ஒரு புத்தகத்தைப் படித்தேன். நெகிழ்வாக இருந்தது, ஆனால் அதில் சுரா இவரது ஆக்கங்களைப் பற்றி பெரிதாக எழுதவில்லை. நம்பியின் வாழ்க்கை பொருளாதார ரீதியில் எப்போதுமே போராட்டம்தான். நாற்பது நாற்பத்தைந்து வயதில் கான்சரில் இறந்துபோனார் என்று தெரிந்துகொண்டேன். எனக்கு எப்பவும் எழுத்தாளனை விட எழுத்தில்தான் ஆர்வம். கஷ்டப்பட்டாரா, அடப் பாவமே என்பதற்கு மேல் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. மருமகள் வாக்கு என்ற சிரஞ்சீவிக் கதையை எழுதினார், வேறு ஒன்றும் தேறாது என்று ஏனோ தோன்றியது.

தோழி அருணாவுக்கு நம்பி பெரியப்பா என்று தெரிந்தது. அவர் வீட்டில் இருந்து ராஜமார்த்தாண்டன் தொகுத்த அவரது ஆக்கங்களின் முழுத் தொகுப்பை லவட்டிக் கொண்டு வந்தேன். முதல் இரண்டு சிறுகதைகளும் சுமாராக இருந்தன. அடுத்து எனக்கு ஒரு வேலை வேண்டும் என்ற கதையைப் படித்தேன். மனிதர் பிஸ்தாதான். பிறகு புஸ்தகத்தை கீழே வைக்க முடியவில்லை, எல்லா சிறுகதைகளையும் கிடுகிடுவென்று படித்து முடித்தேன். புஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்க இன்னும் மனசு வரவில்லை, அவ்வப்போது புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

நம்பியின் உலகம் பற்றாக்குறை உலகம். அதில் சந்தோஷமாக இருப்பவர்கள் குறைவு. அவரது பலம் தோற்றுக் கொண்டு இருக்கும் மனிதர்களின் மனப் போராட்டத்தை சித்தரிப்பதுதான். அவருடைய சிறந்த கதைகள் எல்லாவற்றிலும் இந்த தீம் அடி நாதமாக ஓடுகிறது. அந்த அடிநாதம் பல முறை வீரியத்துடன் வெளிப்படுகிறது, கதை எங்கேயோ போய்விடுகிறது.

நம்பியின் இரண்டாவது பலம் குழந்தைகளை சித்தரிப்பது. குழந்தைகளின் rejuvenating freshness, குரூரம் இரண்டையும் அருமையாகக் கொண்டு வருகிறார். குழந்தை மனம் படைத்த பெரியவர்களை (மருமகள் வாக்கு, எனக்கு ஒரு வேலை வேண்டும்) அவர் சித்தரிக்கும்போதும் இது அவருக்கு கை கொடுக்கிறது.

மருமகள் வாக்கில் மருமகளை அடக்கி ஆளும் மாமியார். மருமகள் கொஞ்சூண்டு எதிர்க்க நினைக்கிறாள். பிறகு?

எனக்கு ஒரு வேலை வேண்டும் கதையின் நாயகன் மனதளவில் குழந்தைதான். ஏழைக் குடும்பம். அர்ச்சகர் அப்பாவுக்கு கிடைக்கும் மடைப்பள்ளி உண்டைக்கட்டிகளில் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. தம்பி ராஜப்பா மெட்ராசில் ஏதோ ஒரு வேலையில். நாயகனின் கோணத்தில் கதை சொல்லப்படுகிறது. நாயகனுக்கு ஒரு வேலை வேண்டும், ராஜப்பா மாதிரி ஒரு வேலை வேண்டும், அதில் வரும் பணத்தைக் கொண்டு கொஞ்சம் மினுக்க வேண்டும். தனக்கு குறை இருக்கிறது என்பது தெரியாத மனம்.

தங்க ஒரு மாதிரி ஒரு கதையை தமிழில் நான் முன்னால் படித்ததில்லை. சென்னையில் தன் சொற்ப சம்பளத்தில் தங்க ஒரு வீடு தேடும் நாயகன் என்பதற்கு மேல் கதையைப் பற்றி பேச விரும்பவில்லை. நேராக படித்துக் கொள்ளுங்கள்.

எக்சென்ட்ரிக் ஒரு பற்றாக்குறை குடும்பத்தின் தலைவனின் சம்பள நாளை விவரிக்கிறது. அவனுக்கும் தன் கவலை எல்லாம் மறக்க வேண்டும். எப்படி மறப்பது?

நிம்மதியும் அப்படித்தான். யோசித்து யோசித்து ஒரே ஒரு தோசை ஆர்டர் செய்யும் சூரி ஹோட்டலில் எதிர் டேபிளில் ஒரு பிடி பிடிப்பவனை எதிரியாகப் பார்க்கிறான். உண்மையில் அவன் சூரியின் நண்பன். எப்படி?

கணக்கு வாத்தியார் குழந்தைகள் உலகம். மூன்றாவது பாஸ் ஆக வேண்டும் என்று டென்ஷனாக இருக்கும் பையன் வாத்தியாரிடம் அடி வாங்குகிறான்.

காணாமல் போன அந்தோணி மாதிரிதான் கதை எழுத ஆசைப்படுகிறேன். (அசோகமித்திரன் எல்லாம் ரொம்ப தூரம்!) கச்சிதமான கதை. கிழவி வளர்க்கும் ஆடு – கசாப்புக் கடைக்காரர்கள் கேட்டுத் தராத ஆடு – காணாமல் போய்விடுகிறது. அருமையான ட்விஸ்ட்.

சத்திரத்து வாசலில் கதையில் இயலாமை எப்படி கோபமாக மாறுகிறது என்று.

பல கதைகள் நன்றாக இருக்கின்றன. தேரோடும் வீதியிலே நல்ல சித்தரிப்பு. சங்கிலி இன்னும் கொஞ்சம் subtle ஆக எழுதப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காலை முதல் நத்தை மாதிரி கூட்டுக்குள் வாழும் ஒருவனைப் பற்றி. கிணற்றுத் தவளைத்தனத்தை நன்றாக காட்டி இருக்கிறார். நீலக்கடல் நெகிழ்வான கதை, குழந்தைகள் உலகில் சாவு பற்றி. விளையாட்டுத் தோழர்களும் குழந்தைகள் உலகம்தான். ஊனமுற்ற ஒரு குழந்தை. சிங்கப்பூர்ப் பணம் ஓ. ஹென்றி டைப் கதை. கடைசி வரிகளுக்காக எழுதப்பட்டதுதான், ஆனால் படிக்கலாம். கருமிப் பாட்டி, சத்திரத்து வாசலில், நாணயம், போட்டி எல்லாம் சுமாரான கதைகள். நாணயம் மாதிரி ஒரு கதையை ஆர்.கே. நாராயணும் எழுதி இருக்கிறார். வருகை எனக்கு சரியாகப் புரியவில்லை.

புத்தகத்தை ராஜமார்த்தாண்டன் தொகுத்திருக்கிறார். “கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்” என்ற பேரில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிறுகதைகளைத் தவிர அவர் எழுதிய கவிதைகள், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், சில கடிதங்கள் கூட இருக்கின்றன. விலை 350 ரூபாய். வாங்குங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். இங்கே வாங்கலாம்.

ஜெயமோகன் மருமகள் வாக்கு, தங்க ஒரு, சத்திரத்து வாசலில் ஆகியவற்றை சிறந்த கதைகள் என்று குறிப்பிடுகிறார். எஸ்.ரா.வுக்கு மருமகள் வாக்கு, தங்க ஒரு. எனக்கோ மருமகள் வாக்கு, தங்க ஒரு, காணாமல் போன அந்தோணி, எக்சென்ட்ரிக், எனக்கு ஒரு வேலை வேண்டும். இவற்றுக்கு ஓரிரண்டு மாற்றுக் குறைந்த, ஆனால் நல்ல சிறுகதைகள் இன்னும் ஒரு ஆறேழு இருக்கும். 25 சிறுகதைகள்தான் எழுதி இருக்கிறார். 23-தான் கிடைத்திருக்கிறது. அப்படி என்றால் பாதிக்குப் பாதி நல்ல கதைகள். மனிதர் இன்னும் நிறைய எழுதவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கிருஷ்ணன் நம்பி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
மருமகள் வாக்கு சிறுகதை
தங்க ஒரு சிறுகதை

1 thoughts on “கிருஷ்ணன் நம்பி – மீள்பதிவு

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.