அம்பைக்கு சாஹித்ய அகடமி விருது

2021க்கான சாஹித்ய அகடமி விருது அம்பைக்கு தரப்பட்டிருக்கிறது.  சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை புத்தகத்திற்காக. என்னவோ என் ஒன்றுவிட்ட அக்காவுக்கு விருது கிடைத்த மாதிரி சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதைத் தொகுப்பை முதல் முறையாகப் படித்தபோது எனக்கு 22 வயது இருக்கலாம். சுப்ரபாரதிமணியன் பரிந்துரையினால்தான் வாங்கினேன். பத்து பக்கம் படிப்பதற்குள் – முதல் சிறுகதையான வெளிப்பாடு – எனக்கு அப்போது இருந்த value system-த்தை தாக்கியது. குறிப்பாக எத்தனை தோசை சுட்டேன் என்று கணக்கெடுக்கும் வரி. “காதல் ஒருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து” என்ற கருத்து புரட்சி என்று நினைத்திருந்தது ஒரே கணத்தில் மாறி அதன் போதாமை புரிந்தது. கறுப்பு குதிரை சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதைகள்.

பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி முதலியோர் இன்னொரு நல்ல சிறுகதை, எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமானதும் கூட.

அம்மா ஒரு கொலை செய்தாள் அவருக்கு பெரும்புகழ் பெற்றுத் தந்த  சிறுகதை. ஆனால் அது எனக்கு தேய்வழக்காகத்தான் தெரிந்தது. தோழி அருணா அதைப் புரிந்து கொள்ள நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும், அப்போதுதான் புரியும் என்பார். 🙂

ஜெயமோகன் அம்மா ஒரு கொலை செய்தாள்,  கறுப்பு குதிரை சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ஆகிய சிறுகதைகளை தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ராவுக்கு அம்மா ஒரு கொலை செய்தாள் மற்றும் காட்டில் ஒரு மான்.

அவருக்கு ஏற்கனவே விருது கிடைத்திருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஏன் இத்தனை தாமதம் என்று தெரியவில்லை.  தாமதம் ஆனாலும் சரியான தேர்வு. தேர்வுக்குழுவினரான இமையம், பேராசிரியர் ராமகுருநாதன், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டுக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம், விருதுகள் பக்கம்