நாட்டுடமை ஆன எழுத்து: சி.பி. சிற்றரசு

சி.பி. சிற்றரசு தி.மு.க.வில் தீவிரப் பணியாற்றியவர். நாடகங்கள் பல எழுதி இருக்கிறார். புனைவுகள், அபுனைவுகள் – அதுவும் வெளிநாட்டு வரலாற்றை விளக்கி சில அபுனைவுகள் எழுதி இருக்கிறார். கட்சிக்காரர், நாலு புத்தகம் எழுதினார் என்று அவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

சிற்றரசின் சில புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.

அறுபதுகளில், ஏன் எழுபதுகளில் கூட பள்ளிகளில் விரும்பி நடிக்கப்பட்ட பல காட்சிகள் உடைய நாடகம் விஷக்கோப்பை. அதுவும் நான் படித்த பள்ளிகளில் வருஷாவருஷம் இதைதான் நடிப்பார்கள். சாக்ரடீசின் வாதங்கள் அப்படி ஒன்றும் அபூர்வமானவை இல்லை என்றாலும் இன்றும் படிக்க முடிகிறது. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் இதை மட்டுமே பரிந்துரைப்பேன்.

மதி என்று ஒரு நாடகம் எழுதி இருக்கிறார். படுசுமார்.

இவற்றைத் தவிர சிற்றரசு எழுதிய சிந்தனைச் சுடர் (வழக்கமான பிராமண எதிர்ப்பு), சாய்ந்த கோபுரம் (மாஜினியின் வாழ்க்கை வரலாறு) நூல்களும் படித்தேன். இவற்றை எல்லாம் யார் படித்தார்கள் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். அன்று இது போன்ற வரலாற்று அறிமுக நூல்களுக்குத் தேவை இருந்திருக்க வேண்டும். ராஜாஜி, சாமிநாத சர்மா, கே.ஆர். ஜமதக்னி எல்லாரும் எழுதி இருக்கிறார்கள், மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இவரது புகைப்படம் கிடைக்கவில்லை. அவருக்கு வைக்கப்பட்ட சிலையின் புகைப்படத்தைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன். 1906-இல் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். அண்ணாதுரைக்கு நெருக்கமாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். கலைஞர் கருணாநிதியின் முதல் ஆட்சிக் காலத்தில் மேல்சபைத் தலைவர். திராவிடர் கழகம், திமுக, அதிமுக என்று அரசியல் பயணம்.

சிற்றரசுக்கு தரப்பட்டிருக்கும் கௌரவம் அதிகப்படியானது. வழக்கமான, நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லாத திராவிடக் கழக எழுத்து. விஷக்கோப்பை நாடகம் மட்டுமே என் கண்ணில் கொஞ்சம் பொருட்படுத்தக் கூடிய படைப்பு. என் பள்ளி நாட்கள் நினைவாலும், ஆரம்ப கால தமிழ் நாடகங்களில் எனக்குப் புதிதாகப் பிறந்திருக்கும் ஆர்வத்தாலும் படித்தேன். இப்படி ஏதாவது உங்களுக்கும் காரணம் இருந்தால் மட்டுமே படியுங்கள்…

தொகுக்கப்பட்ட பக்க்ம: நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து

4 thoughts on “நாட்டுடமை ஆன எழுத்து: சி.பி. சிற்றரசு

  1. பிராமண எதிர்ப்பு எல்லாம் நீர்த்து போய் வரும் இந்த காலத்தில் சிற்றரசு போன்றவர்களை திராவிட அரை டிக்கெட்கள் கூட இனி படிப்பார்களா என்பது சந்தேகம். ஆனாலும் நீங்கள் பதிவு செய்து இருப்பது உங்கள் வாசிப்பு வெறியை காட்டுகிறது. அந்த வெறிக்கு ஒரு சல்யூட்… வழக்கம் போல் கிளாசிக் பற்றி எழுதுங்கள். ஜெ மோ வை முன்னிறுத்தி சொல்வதை விட நீங்கள் உங்கள் வாசிப்பை முன் வைத்து சொல்வது இன்னும் நன்றாக இருக்கும். யோசனை அல்ல…. கருத்து மட்டுமே…

    Like

  2. ஸ்பரிசன், எனக்கு அந்தக் காலத்திலேயே யாராவது சிற்றரசுவை படித்தார்களா என்று எனக்கு சந்தேகம். 🙂 நாட்டுடமை ஆன எல்லா எழுத்துக்களையும் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை, அவ்வளவுதான்.

    ஜெயமோகனை முன்னிறுத்துகிறேன் என்று ஏன் நினைக்கிறீர்கள்? இது என் தளம், என் கருத்துகள்தான் முக்கியம். ஆனால் அவ்வப்போது இப்படி சொல்லப்படுகிறது. நான் உங்களை மறுப்பதற்காக இதைச் சொல்லவில்லை, ஆனால் நான் கடந்து 100 பதிவுகளைப் பார்த்தேன்; ஒன்றில் ஜெயமோகன் விக்ரமாதித்யனை அணுகும் முறை தவறு என்று வாதிட்டிருக்கிறேன். ஒன்றில் விஷ்ணுபுரம் விருது விக்ரமாதியனுக்கு தரப்பட்ட செய்தி. ஒன்றில் அவரது சிறுகதை ஒன்றை பாராட்டி எழுதி இருக்கிறேன். 100 பதிவில் இரண்டு (சரி 3 என்றே வைத்துக் கொள்வோம்) பதிவு கூட பெறாதவரா ஜெயமோகன்?

    ஒரு வேளை நாலைந்து பதிவுகளில் இந்தப் புத்தகத்தை ஜெயமோகனும் பரிந்துரைக்கிறார் என்று ஒரு வரி வரும், அதைச் சொல்கிறீர்களா? அப்படி வரும் எல்லாப் பதிவுகளிலும் அடுத்த வரி எஸ்ரா என்ன சொல்கிறார், இதைப் பரிந்துரைக்கிறாரா என்று இருக்கும், அது எஸ்ராவை முன்வைப்பதாக ஏன் யாருக்கும் தெரியவில்லை?

    நான் உங்களை மறுக்கவோ, குறை சொல்லவோ இந்தக் கணக்கை எடுக்கவில்லை. உண்மையிலேயே ஏன் இப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.