எஸ்.வி. சஹஸ்ரநாமம் – தமிழ் நாடகங்களில் பாரதி

எஸ்.வி. சஹஸ்ரநாமம் பெயர் நினைவிருந்தால் உங்களுக்கு நாற்பது வயதாவது இருக்க வேண்டும். மிக இயல்பான நடிகர். திரைப்படங்கள் மூலம்தான் இன்று கொஞ்சமாவது நினைவில் இருக்கிறார், ஆனால் நாடகம் நாடகம் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

பசுபதி சார் தளத்தில் அவர் 1981-இல் எழுதிய ஒரு கட்டுரை கிடைத்தது, அவருக்கு நன்றி! பாரதியை அவர் எப்படி எல்லாம் தனது நாடகங்களில் பயன்படுத்திக் கொண்டார் என்று எழுதி இருக்கிறார். பாரதிக்கும் முன்னால் இருந்த நாடக உலகம் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கிறார்.

கனபரிமாண காட்சி முறையை அவரது நாடகம் ஒன்றில் கலை இயக்குனர் கலாசாகரம் ராஜகோபால் அறிமுகப்படுத்தினாராம். அது என்ன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

வசதிக்காக கட்டுரையை தட்டச்சி இருக்கிறேன். ஓவர் டு சஹஸ்ரநாமம் சார்!


தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர்களான டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் நான் சேர்ந்த புதிதில் அநேகமாக எல்லா நாடகங்களும் புராண, இதிகாச வகைகளாக இருந்தன. அத்துடன் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடியனவாகவும் இருந்தன. பிறகு கால மாறுதலுக்கேற்ற வகையில் சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள் மேடைக்கு வர காரணமாக இருந்தவர் நாடக மேதை எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான். நடிகர் எம்.கே. ராதா அவர்களின் தந்தை.

நான் கம்பெனியில் சேரும்போது அவர் இருக்கவில்லை. பிறகு வந்து சேர்ந்தார்கள். அவரால் தயாரான சமூக நாடகங்கள் ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்தகிருஷ்ணன்; இவ்வளவும் ஜே.ஆர். ரங்கராஜு அவர்களால் நாவல் வடிவத்தில் எழுதப்பட்டவை. வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல் மேனகாவும் கந்தசாமி முதலியார் அவர்களால்தான் மேடையில் நாடகமாக ஆக்கப்பட்டது. அவர்தான் எனது குரு. நாடக ஆசிரியர். எனக்கு நல்ல பாத்திரங்களை அளித்து அதிலே, பயிற்சி அளித்து பிறர் பாராட்டைப் பெறும் பாக்கியமும் நான் பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் திரு எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான்.

தேசீய விடுதலைப் போராட்டம் மும்முரமாகத் தொடங்கியபோது சமுதாயத்தின் ஒரு பகுதியான கலைஞர்களும் தங்கள் தொழில் மூலம் தேசீயப் போராட்டத்துக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். நாடகங்கள் எதுவானாலும் தேசியக் கிளர்ச்சிக்குத் தேவையான பணிகளில் மக்கள் மனத்தைப் பண்படுத்தும்படியாக தங்கள் நடிப்பு, இசை அனைத்தையும் பயன்படுத்தலானார்கள். தேசியப் போராட்டத்தில் தமிழகத்துக் கலைஞர்களுக்கு பெரும் பங்குண்டு. பாரதியாரின் பல பாடல்கள் நாடகங்களில் பாடப்பட்டன.

1946-ஆம் ஆண்டில் என்.எஸ்.கே. நாடக சபாவை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது புதிதாக நாடகம் போட வேண்டும் என்ற எண்ணத்தில் திரு. ப. நீலகண்டன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். “தியாக உள்ளம்” என்ற ஒரு கதையைக் குழுவில் படித்துக் காண்பித்தார். அந்தக் கதை கருத்துடையதாகவும் விடுதலைப் போராட்ட எழுச்சிக்குத் தூண்டுவதாகவும் இருந்தது. இரண்டொரு பாத்திரங்களை புதிதாக உருவாக்கி “நாம் இருவர்” என்று அந்நாடகத்துக்கு பெயரிட்டு தயாரிக்க ஏற்பாடு செய்தோம். இதில் இடம் பெற்ற பாரதியின் பாடல்கள் வெற்றிக்கு வழி காட்டின. இந்தச் சமயத்தில் மகாத்மா காந்தியடிகள் சென்னை வந்திருந்தார்கள். அப்போது பிரார்த்தனைக் கூட்டத்தில் நாங்கள் குழுவுடன் கலந்து கொள்வோம். எந்த நேரமும் புதிய நாடகத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் எனக்கு மகாத்மா தரிசனமும் நாடக வெற்றிக்கான வழியைக் காட்டியது. அதன் பலன்… மூன்று நான்கு காட்சிகளும் தேசியப் பாடல்களும் ஒரு சகோதரியின் பாகமும் உருவாகின. மகாத்மாவின் சிலையும் நாடகத்தில் முக்கியப் பங்கேற்றது. நாடகம் மிக வெற்றிகரமாக மேடை ஏறியது.

அன்று அந்த நாடகத்துக்குத் தலைமை ஏற்று, நாடகத்தை மிக மிக அழகாக ரசித்துப் பாராட்டி ஆசிரியரையும் கலைஞர்களையும் வாழ்த்தியவர் திரு. வ.ரா. அவர்கள். அவரைச் சந்திப்பதற்கு முன்னால், எனது எண்ணங்களில் கலக்கமும், செயலிலே தடுமாற்றமும், பார்வையில் சூன்யமும் இருந்தன. அந்தப் பெரியாரின் நட்பும் உறவும் கிடைத்த பின் எனது எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டது; செயலிலே நிதானம் ஏற்பட்டது; பார்வையிலே பிரகாசம் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு திரு. ப. நீலகண்டன் அவர்களால் கொடுக்கப்பட்டது “இரத்த சோதனை” என்ற ஒரு நாடகம். அதை ஆதாரமாகக் கொண்டு பல மாற்றங்களுடன் “பைத்தியக்காரன்” என்ற நாடகத்தை உருவாக்கினோம். இந்த நாடகத்தின் மூலம் திரைப்படத்திலும் நான் முக்கிய பாத்திரமேற்று நடித்து, திரைக்கதை வசனமும் எழுதியதில் வெற்றியும் புகழும் கிடைத்தன; திரைப்பட வாழ்க்கைக்கு இது வழிகாட்டியது.

திரைப்படத்தில் நடிப்பதும், நாடகத்தில் நடிப்பதுமாகச் சில நாட்கள் சென்றன. திரைப்படத்து வருமானம் நாடக மேடையில் புதிய முறையில் நாடகங்களை நடத்தவும், காட்சிகளை அமைப்பதற்கும் உதவியாக இருந்தது.

1952-ஆம் ஆண்டு எங்களது சொந்தக் குழுவான சேவா ஸ்டேஜ் நாடக சபா ஆரம்பிக்கப்பட்டது. இலக்கியத் தரம் படைத்த பல எழுத்தாளர்களை நாடக ஆசிரியராக அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றோம். அந்த வரிசையில் திரு என்.வி. ராஜாமணி, திரு. தி. ஜானகிராமன், குகன், கு. அழகிரிசாமி, திரு. கோமல் சுவாமிநாதன், திரு. தாமரைமணாளன், திரு. மல்லியம் ராஜகோபால், திரு. எம்.கே. மணி சாஸ்திரி, திரு. கௌசிக் போன்றவர்கள்.

திரு. கலாசாகரம் ராஜகோபால் அவர்கள் கலை இயக்குனராக பணி மேற்கொண்டு, புதிய முறையில் காட்சி அமைப்புகளில் பலரும் பாராட்டும்படி சாதனைகள் செய்தார். கனபரிமாண காட்சி முறையை முதன்முதலில் தமிழக மேடைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாடகத்தில் சுழலும் காட்சியையும் அமைத்துக் கொடுத்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக “நாடகக் கல்வி நிலையம்” ஒன்று ஆரம்பித்து, நடிப்பு – நாடகத் தயாரிப்பு – நாடகம் எழுதுவது – நாடகக் காட்சி அமைப்பு, என்று நான்கு பிரிவுகளை ஏற்படுத்தி, அதில் 16 மாணவ மாணவியர் பயிற்சி பெற வழி செய்தோம். அதில் தோன்றியவர்தான் இன்று புகழடைந்துள்ள நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன். நடிகையர் வரிசையில் டி.கே. வசந்தாவும் தேர்ச்சி படைத்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கு பெருமை உண்டு.

இந்த நாடகக் கல்வி நிலையத்தில் நடிப்புப் பயிற்சி அளிப்பது என்னுடைய கடமையாக இருந்தது. எனது வெகு நாளைய ஆசை மஹாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை மேடை ஏற்ற வேண்டும் என்பது. அதற்காக நானாகவே மஹாகவியின் கவிதைகளில் வர்ணனைகளை எல்லாம் நீக்கிவிட்டு, நாடக உணர்ச்சிகளுக்கு வேண்டிய உரையாடல்களை மட்டும் தொகுத்து, கல்வி நிலைய மாணவர்களுக்கு மொழிப் பயிற்சிக்கு வலிமை ஊட்டுவதற்காகப் பயன்படுத்தினேன்.

இந்தக் கவிதை நாடகப் பயிற்சி நடக்கும் சமயம் அமரர் அவ்வை சண்முகம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் வகுப்பு முடிந்து போகும்போது, என்னிடம் தனியாகக் கூப்பிட்டு, இந்தக் கவிதை நாடகத்தை, தொழில்முறை நாடகம் நடத்தும் உங்கள் நடிகர்களைக் கொண்டு மேடை ஏற்றினால் பெருமையாக இருக்குமே எனத் தெரிவித்தார். பிறகு இதே கவிதை நாடகத்தை திரு. பி.எஸ். ராமையா அவர்களிடம் கொடுத்து தொழில் நடிகர்களான நாங்கள் நடிப்பதற்கேற்ற முறையில் நாடக உணர்ச்சியும் பண்பாடும் மெருகேற்றித் தொகுத்தளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடி அவரும் செய்து கொடுத்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற ஆதரவுடன் நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம். இது வரை எங்களுக்குக் கிடைக்காத பாராட்டும் வாழ்த்துக்களும் மஹாகவியின் கவிதை நாடகத்தில் நாங்கள் பெற்றோம். அமரர் அவ்வை சண்முகத்துக்கு எனது மானசீகமான அஞ்சலியை நான் இப்போதும் செலுத்திக் கொள்ளுகிறேன்.

இந்த மஹாகவியின் பாஞ்சாலி சபதம் எங்களுக்குத் தமிழகத்தில் மட்டுமல்ல, பம்பாய், கல்கத்தா, டில்லி போன்ற நகரங்களிலெல்லாம் பெருமையும், புகழும் ஏற்படக் காரணமாக இருந்தது. டில்லி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பான முதல் தமிழ் நாடகம் என்ற சிறப்பையும் அடைந்தது. கல்கத்தாவில் மஹாகவி தாகூர் நூற்றாண்டு விழாவில் இந்த நாடகம் நடத்தும் நல்வாய்ப்பையும் பெற்றோம். பெரிய அளவில் அரங்கம் அமைத்திருந்தார்கள். நாடகம் முடிந்ததும் பல வங்காள ரசிகர்கள், கலைஞர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மேடையில் உள்ளே வந்து, எங்களை நேரடியாகப் பாராட்டினார்கள். அவர்கள் “எங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும், இனிமையான சொற்களை இசை போலக் கேட்க முடிந்தது, காட்சிகளும் நடிப்பும், வெகுவாக எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின, இந்த நாடகம் எங்கள மனத்தில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

தென்னகமும் வடநாடும் மட்டுமல்லாமல் பாரதியார் கவிதை மூலம் என்னுடன் ரஷ்யாவுக்கும் பயணமானார். ஆம்! 1961-ஆம் ஆண்டில் பாரதீய நாட்டிய சங்கத்தார் நாடகக் கலையை அறிவது சம்பந்தமாக கலைத் தூதுக்குழு ஒன்றை ரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். அதில் தமிழகத்தின் சார்பில் என்னைத் தேர்ந்தெடுத்திருந்தனர். என்னுடன் வங்காள நாட்டு மின்சார நிபுணரான திரு. தபன் சென் அவர்களும் உடன் வந்தார்கள். இவர் மத்திய சர்க்காரது நாடகப் பயிற்சிப் பள்ளியில் சிறந்த நாடகத் தயாரிப்பாளர். நான் வயதில் மூத்தவனாக இருந்தபடியால் என்னை அந்தக் கலைத் தூதுக்குழுவின் தலைவராக அனுப்பி வைத்தார்கள்.

ரஷ்யா செல்லும்போது பாரதியின் கவிதை நாடகமான பாஞ்சாலி சபதத்தை எங்கள் குழு நடிகர்களைக் கொண்டு டேப்பில் ஒலிப்பதிவு செய்து எடுத்துப்போய் மாஸ்கோ வானொலி நிலையத்தில் கொடுத்தேன். அதற்கு அவர்கள் உடன் ஒரு தொகையையும் கொடுத்துவிட்டார்கள். இரு முறை பாஞ்சாலி சபதத்தை ஒலிபரப்பியதாக என் ரஷ்ய நண்பர் திரு. செம்பியன் அவர்கள் எனக்குத் தகவல் தெரிவித்தார்கள்.

பாஞ்சாலி சபதம் கவிதை நாடகம் வெளிநாட்டிலும் எனக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளது.

எனது நாடகக்கலை அனுபவத்தில் எத்தனையோ பட்டங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன என்றாலும் திருச்சியில் 1959-ஆம் ஆண்டில் கலை இலக்கியப் பெருமன்றம் ஆதரவில் பாஞ்சாலி சபதம் நாடகம் நடைபெறும்போது அவர்கள், செப்பேடு தகட்டில் “பாரதிக் கலைஞன்” என்று பொறுத்துக் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கரத்தால் பாராட்டி வழங்கச் செய்ததை நான் இன்னும் பெரிதாக மதித்துப் போற்றி வருகிறேன்.

பாரதியாருக்கு நாடக உணர்வுகள் மிகுதியாக இருந்திருக்கின்றன. பாஞ்சாலி சபதம் இரண்டாவது சூதாட்டச் சருக்கம் ஆரம்பிக்கும் முன் கடவுள் வாழ்த்து வருகிறது. அது நாடகக் கலைக்கு இலக்கணம் யாத்துள்ளதைப் போலுள்ளது. அதை இங்கே எடுத்துக் சொல்ல விரும்புகிறேன்.

தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
கவிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல் கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல் இங்கிவை எல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ!
ஒளிவளருன் தமிழ்வாணீ! அடியேனேற் கிவையனைத்தும் உதவுவாயே!

நாடக உணர்வுகளைத் தட்டி எழுப்பவும் மஹா கவிஞர் தவறவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம், தமிழ் நாடகங்கள்

1 thoughts on “எஸ்.வி. சஹஸ்ரநாமம் – தமிழ் நாடகங்களில் பாரதி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.