கம்பாநதி ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம், எப்படியோ விட்டுப் போய்விட்டது. ஆனால் படித்த பிறகு இத்தனை நாள் படிக்கவில்லையே என்று வருத்தம் ஏற்படவில்லை. தமிழில் ஒரு டிக்மார்க், எனக்கு அவ்வளவுதான்.
கதை மிகவும் எளிமையானது. திருநெல்வேலி பக்கத்தில் எழுபதுகள் காலகட்டத்தில் ஒரு சிறு உலகத்தின் (microcosm) சித்தரிப்பு. வேலை இல்லா இளைஞர்கள், வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் தலைவர் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் தன் தேவைகளையும் சமாளிப்பது, காதல், உறவுகள், நண்பர்கள். மெய்நிகர் சித்தரிப்பு. அவ்வளவுதான். ஒரு விதத்தில் பார்த்தால் அன்பான, கனிவான, பலவீனங்கள் நிறைந்த போரடிக்கும் மனிதர்கள். ரஜோகுணம் இல்லாமல் ரொம்ப சாத்வீகமாக இருந்தால் புனைவுகள் சுவாரசியப்படுவதில்லை. இதுவும் எனக்கு அப்படித்தான் இருந்தது.
வண்ணநிலவன் சித்தரிக்கும் உலகம் – வேலை இல்லா இளைஞர்கள், பணப்பற்றாக்குறையால் தடுமாறும் குடும்பம் எனக்கு பரிச்சயமானதுதான், நான் பார்த்தது/அனுபவித்ததுதான். ஆனால் அதில் இருந்து வெளியே வந்து பல வருஷம் ஆயிற்று. இப்போதெல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுவதில்லை, பணப்பற்றாக்குறை வேறு லெவலில் இருக்கிறது. 🙂 ஆனால் இப்படி தேங்கிக் கிடப்பதின் சித்தரிப்பை பார்க்கும்போது இத்தனை தடுமாறினால் அதை நீயேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
புத்தகத்தின் பலம் மெய்நிகர் சித்தரிப்பு. பலவீனம் சுவாரசியமின்மை. சிறந்த பகுதி பாப்பையாவும் கோமதியும் நடந்து போய் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பது.
அது என்ன கம்பாநதி? தேங்கி, மறைந்தே போய்விட்ட நதியாம். இவர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்று சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.
கம்பாநதி எஸ்ராவின் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் இடம் பெறுகிறது. ஜெயமோகன் பட்டியலில் இல்லை. அவர் இதை அற்பமான நாவல் என்று விமர்சித்திருக்கிறார். ஞாபகம், சரியாக நினைவில்லை. என் ஞாபகம் தவறாக இருக்கலாம். அவரே இந்தப் புத்தகத்தை பரிந்துரைக்கவும் செய்திருக்கிறார்.
படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை. என்னைக் கேட்டால் வண்ணநிலவனின் சிறுகதைகளே – குறிப்பாக எஸ்தர் – அவரை தமிழ் வாசகனின் நினைவில வைத்திருக்கும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்