பிடித்த சிறுகதை: பிரேம்சந்தின் இத்கா

பிரேம்சந்த் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய கதைகள் எளிமையானவை, நேரடியானவை, உண்மையானவை. அவற்றில் அனேகமாக உத்திகள் இருப்பதில்லை, பெரிய வீச்சு என்று சொல்லும்படி எதுவும் இருக்காது, பிரச்சாரம் அறவே கிடையாது. அவை காட்டுவது (கிராம) வாழ்வின் எளிய கோட்டுச் சித்திரங்கள்தான். ஆனால் பல கதைகள் மனதைத் தொடுகின்றன.

இத்கா அப்படிப்பட்ட ஒரு கதைதான். இருபது இருபத்தி இரண்டு வயதில் நண்பன் ஸ்ரீகுமார் சொல்லி முதல் முறையாகப் படித்தேன். அன்று ஏற்பட்ட நெகிழ்ச்சி இன்று மீண்டும் படிக்கும்போதும் ஏற்படுகிறது.

idgah

பிரேம்சந்த் பாணி, எளிய நேரடியான கதைதான். தாய் தந்தை இல்லாமல் பாட்டியால் வளர்க்கப்படும் நாலு வயது ஏழைச் சிறுவன் ஹமீத். ஈத் பண்டிகை. கிராமத்தின் பிற சிறுவர்களோடு பெரிய சந்தைக்குப் போகிறான். அவனிடம் இருப்பது மூன்றே பைசா. பிற சிறுவர்கள் அவனைப் போல நாலைந்து மடங்கு பணம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் பொம்மைகளை, தின்பண்டங்களை வாங்குகிறார்கள், ரங்கராட்டினத்தில் சுற்றுகிறார்கள். ஹமீத் ஒரு கிடுக்கியை மட்டும் வாங்குகிறான். வீடு திரும்பியதும் பாட்டி தலையில் அடித்துக் கொள்கிறாள். கிறுக்குப் பிள்ளையே எதையாவது உனக்குப் பிடித்ததை வாங்கி சந்தோஷமாக இருக்கக் கூடாதா, எதற்கு இந்த கிடுக்கியை வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்கிறாள். நீ ரொட்டி சுடும்போது கையால் எடுக்க வேண்டி இருக்கிறதே, அவ்வப்போது கையை சுட்டுக் கொள்கிறாயே என்று ஹமீத் சொல்கிறான். பாட்டி ஏன் அழுகிறாள் என்று ஹமீதுக்குப் புரிவதில்லை.

இந்தக் கதைக்கு என்ன விளக்கம் வேண்டும்? நேராக படித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஹமீதும் பிற சிறுவர்களும் தங்கள் பொம்மைகளின் உயர்வு தாழ்வைப் பற்றி பேசிக் கொள்ளும் இடம் அருமை!

மொழிபெயர்த்தவர் குஷ்வந்த் சிங். அர்விந்த் குப்தா தளத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பிரேம்சந்த் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்

 

Oh Frabjous Day!

(மீள்பதிவு)

Lewis Caroll

இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஜாபர்வாக்கி மீண்டும் கண்ணில் பட்டது. கண்ணில் பட்ட தினம் ஒரு Frabjous Day-தான்!

Jabberwocky, Walrus and the Carpenter, எட்வர்ட் லியரின் limericks, சுகுமார் ரேயின் ஹா ஜா போ லா ரா மற்றும் அபோல் தபோல் போன்றவை சிறு வயதில் படிக்க ஏற்றவை என்பார்கள். எனக்கோ இவற்றில் கிடைக்கும் மகிழ்ச்சி enjoyment இத்தனை வயதான பிறகும் குறையவே இல்லை. மன அளவில் நான் வளரவே இல்லை என்று நினைக்கிறேன்!

Twas brillig, and the slithy toves
Did gyre and gimble in the wabe:
All mimsy were the borogoves,
And the mome raths outgrabe.

“Beware the Jabberwock, my son!
The jaws that bite, the claws that catch!
Beware the Jubjub bird, and shun
The frumious Bandersnatch!”

He took his vorpal sword in hand;
Long time the manxome foe he sought—
So rested he by the Tumtum tree
And stood awhile in thought.

And, as in uffish thought he stood,
The Jabberwock, with eyes of flame,
Came whiffling through the tulgey wood,
And burbled as it came!

One, two! One, two! And through and through
The vorpal blade went snicker-snack!
He left it dead, and with its head
He went galumphing back.

“And hast thou slain the Jabberwock?
Come to my arms, my beamish boy!
O frabjous day! Callooh! Callay!”
He chortled in his joy.

Twas brillig, and the slithy toves
Did gyre and gimble in the wabe:
All mimsy were the borogoves,
And the mome raths outgrabe.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர்களுக்காக

வேடிக்கைப் பட்டியல்: நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகங்கள்

திருமலை முத்துசாமி நூலகத்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். இவரது நூல்கள் 2010-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன.

எளிய கையேடுகளைத்தான் நிறைய எழுதி இருக்கிறார். பள்ளி நூலகம் எப்படி இருக்க வேண்டும், கிராம நூலகக் கையேடு, அமெரிக்காவில் நூலகங்கள் எப்படி செயல்படுகின்றன என்ற மாதிரி. துறை சார்ந்தவர்களுக்கே இன்று படிக்க ஆர்வம் இருக்குமா என்று தெரியவில்லை. புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.

நான் புரட்டிப் பார்த்தது கிராம நூலகக் கையேடு என்ற புத்தகத்தால்தான். என் வாழ்க்கையில் கிராம நூலகங்கள் பெரிய பங்கு வகித்திருக்கின்றன. ஒரு பத்து வருஷமாவது நான் கிராம நூலகங்களின் தீவிரப் பயனாளன். வாண்டு மாமாவும் சாண்டில்யனும் ஜெயகாந்தனும் அங்குதான் அறிமுகமானார்கள். பெ.நா. அப்புசாமி புத்தகங்கள்தான் எனக்கு அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தின. இந்த நூலகங்களின் தாக்கம் என் வாழ்வில் முக்கியமானது.

இவர் மாதிரி யாராவது போட்ட பட்டியல்தான் இந்த நூலகங்களில் என்ன புத்தகங்கள் இருக்கும் என்று தீர்மானித்திருக்கும். அதனால்தான் புரட்டிப் பார்த்தேன். மீண்டும் மீண்டும் வியக்க வைத்த பட்டியல். நான் பார்த்த புத்தகங்களுக்கும் இவற்றுக்கும் அதிகத் தொடர்பு இல்லை!

கே.எஸ். லட்சுமணன் என்பவர் எழுதிய “நரை வழுக்கையைப் போக்க சில வழிகள்” என்று ஒரு புத்தகம் கட்டாயமாக ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டுமாம். இவருக்கு தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சினையோ, பாவம்.

எம்ஜிஆர் ஆட்சி ஆரம்பிக்கும் முன்பே, எழுபதுகளில் ஓய்வு பெற்றிருப்பார் என்று நினைத்தேன், ஆனால் இந்தப் புத்தகம் 1979-இல்தான் பதிக்கப்பட்டிருக்கிறது. எம்ஜிஆர் காலத்தில் போடப்பட்ட பட்டியலில் கருணாநிதி, மதியழகன், ஆசைத்தம்பி போன்றவர்கள் எழுதிய புத்தகங்கள் இடம் பெற்றிருப்பது ஆச்சரியம்தான்.

கண்ணில் பட்ட சில புன்னகையை வரவழைத்தன. தமிழ்வாணன் எழுதிய அதிர்ஷ்ட நம்பர்கள் புத்தகத்தை எல்லாம் பரிந்துரைக்கிறார். கணபதி ஐயர் ஆடு வளர்ப்பு என்ற புத்தகத்தை, கோழிகள் வளர்ப்பதைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார். ஆடு, கோழி வளர்த்த ஐயரா? மேலும் தான் எழுதிய புத்தகங்களையே பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒன்று நிச்சயம்; இவர் யோசனைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தால் நான் நூலகம் பக்கம் தலை வைத்துக் கூட படுத்திருக்கமாட்டேன்.

முதல் பொது நூலக இயக்கம் என்ற புத்தகத்தையும் புரட்டிப் பார்த்தேன். இங்கிலாந்தில்தான் முதன்முதலாக நூலக்ங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை பக்கம்

கலைஞர் கருணாநிதி தேர்வுகள்

கலைஞரிடம் கேள்வி பதில்:

தலைசிறந்த 10 புத்தகங்களை பட்டியல் இடுங்களேன்?

  1. திருக்குறள்
  2. தொல்காப்பியம்
  3. புறநானூறு
  4. சிலப்பதிகாரம்
  5. பெரியார் ஈவேரா சிந்தனைகள்
  6. அண்ணா எழுதிய பணத்தோட்டம்
  7. கார்க்கியின் தாய்
  8. நேருவின் உலக வரலாறு
  9. அண்ணல் காந்தியின் சத்திய சோதனை
  10. ராகுல் சாங்கிருத்தியாவின் வால்கா முதல் கங்கை வரை

திருக்குறளும் தொல்காப்பியமும் புறநானூறும் சிலப்பதிகாரமும் ஈவேரா சிந்தனைகளும் சரிதான்; ஆனால் பணத்தோட்டம்! அது வடஇந்தியர், இல்லை இல்லை பனியா வெறுப்பைத் தவிர வேறு எதையும் முன்வைக்கவில்லை. அண்ணாவிடம் இவருக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையா? நேருவை காலம் முழுவதும் எதிர்த்தவர், நேருவின் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது வியப்புதான். சத்தியசோதனையே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது…

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

நாட்டுடமை ஆன எழுத்து: நாரண. துரைக்கண்ணன்

நாரண. துரைக்கண்ணன் 1906-இல் பிறந்து கிட்டத்தட்ட 90 வயது வரை வாழ்ந்திருக்கிறார். பிரசண்டவிகடன் பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார். பாரதியின் கவிதைகள் நாட்டுடமை ஆக வேண்டும் என்று நிறைய உழைத்திருக்கிறார். அவரது புனைவுகள் என்னைப் பொறுத்த வரையில் காலாவதி ஆனவையே. ஆனால் அந்த காலகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்த அகிலனுக்கு எவ்வளவோ தேவலாம். 2007-இல் இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

கொஞ்சம் பற்றாக்குறை வாழ்க்கை என்றுதான் தோன்றுகிறது.

துரைக்கண்ணன் எழுதிய சில புத்தகங்கள் கிடைத்தன. தும்பைப்பூ அகிலன் பாணி நாவல். விதவை இளைஞிக்கு அக்கா கணவன் மீது கொஞ்சம் ஈர்ப்பு ஏற்பட்டாலும் சமாளித்துக் கொள்கிறாள். ஈர்ப்பு இருக்கிறது என்று வெளிப்படையாக சொல்வதே அந்த காலத்துக்கு புரட்சியாக இருந்திருக்கலாம். நாவலில் ஒரு இடத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றால் சிதம்பரம், சிவம், பாரதி, கல்யாணசுந்தரம், வரதராஜன், ராமசாமி, சத்தியமூர்த்தி, சீனிவாசன், ராஜகோபால் என்கிறார். காமராஜின் பேரைத்தான் காணோம்.

தரங்கிணி (1964) இன்னொரு காலாவதி ஆன நாவல். நாயகனின் தியாகம் அந்தக் காலத்தில் படிப்பவர்களைக் கவர்ந்திருக்கலாம். இன்று அம்புலிமாமா கதை போலத்தான் இருக்கிறது. அனாவசிய மிகைப்படுத்தல்கள் இல்லாதது மட்டுமே நினைவில் நிற்கிறது.

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன் மகா கற்றுக்குட்டித்தனமான எழுத்து.

திருவள்ளுவர் தமிழனின் (பழம்)பெருமை பேசும் நாடகம். பல கர்ண பரம்பரைக் கதைகளைத் தொகுத்து ஒரு நாடகம் ஆக்கிவிட்டார்.

ராஜாஜியைப் பற்றி சம்பிரதாயமான வாழ்க்கை வரலாறு ஒன்றையும் எழுதி இருக்கிறார்.

சூத்திரனுக்கு தமிழ் கற்றுத் தரமாட்டேன் என்று உ.வே.சா. இவருக்குத் தமிழ் கற்றுத் தர மறுத்ததாக ஒரு செய்தியைப் பார்த்திருக்கிறேன். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர்; சவேரிநாதப் பிள்ளையின் சக மாணவர்; தன் வீட்டிற்கு தியாகராஜ செட்டியாரை கௌரவிக்க தியாகராஜ விலாசம் என்று பெயர் வைத்தவர்; சேலம் ராமசாமி முதலியாரிடம் காலம் முழுவதும் நன்றி பாராட்டியவர்; திருவாவடுதுறை ஆதீனத்தோடு இரண்டு மூன்று தலைமுறையாகத் தொடர்பு கொண்ட குடும்பத்தவர் அப்படி சொல்லி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் கற்றுத் தர இயலவில்லை என்று சொல்லி இருக்கலாம், அது பிற்காலத்தில் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

காலாவதி ஆகிவிட்ட எழுத்து என்று நான் கருதினாலும் இந்த கௌரவத்தை ஏற்க தகுதி உள்ளவரே என்றுதான் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

 

ஆதவன் சிறுகதைகள் II

ஆதவனின் சில சிறுகதைகள் பற்றி சமீபத்தில்தான் எழுதினேன். அந்தப் பதிவை எழுதும்போது ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் இந்திரா பார்த்தசாரதி தொகுத்த ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு ஒன்று கண்ணில் பட்டது.

ஆதவனை பலரும் இ.பா.வின் சிஷ்ய பரம்பரை என்றே கருதுகிறார்கள். இ.பா.வே அவரது சிறுகதைகளத் தேர்ந்தெடுத்து தொகுத்திருப்பது மிகப் பொருத்தம்.

இந்தத் தொகுப்பையும் படித்த பிறகு ஆதவனைப் பற்றி எனக்குத் தோன்றுவது:

  • ஆதவனின் முதன்மை பலம் அவரது களம். வேர்களில் ஊடாடி நிற்கும் நேற்றைய விழுமியங்களின் போதாமை, அவற்றை விஞ்சி மேலே புதிய உலகங்களைக் கண்டுபிடிக்கும் விழைவு, ஆனால் இந்த உலகங்களும் புதிய விழுமியங்களும் கூட முழு நிறைவு தருவதில்லை. இந்த ஊசலாட்டம் என்றும் காலாவதி ஆகாத கரு.
  • அவரது இரண்டாவது பலம் அவர் அந்த ஊசலாட்டத்தை எந்த போலித்தனமும் இல்லாமல் நேர்மையாக அணுகுவது, அதில் நிரவி நிற்கும் மெல்லிய நகைச்சுவை.
  • அவரது பலவீனம் அவர் அந்தக் கருவை அவர் மிகவும் குறுகிய முறையில் அணுகி இருப்பது. அறுபது எழுபதுகளில் இந்த ஊசலாட்டம் அறிவுஜீவித்தனமாக அறியப்பட்டது. இப்படிப்பட்ட அறிவுஜீவிகள் சத்யஜித் ரே திரைப்படங்களைப் பார்த்தார்கள், ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தார்கள், அதே நேரத்தில் குறை சொல்லிக் கொண்டே எம்ஜிஆர் படங்களையும் பார்ப்பார்கள். அந்த ஊசலாட்டம் என்று வேறு முறையில் வெளிப்படுகிறது, நாளை இன்னும் மாறுபட்ட முறையில் வெளிப்படும். ஏன் மாதவையா காலத்தில் வேறு மாதிரி வெளிப்பட்டது, அதை அவரும் சித்தரித்திருக்கிறார். நான் எழுபது எண்பதுகளின் சிறுவன், எனக்கு அவரது விவரிப்பிலிருந்து அவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பது புரிகிறது. ஆனால் இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வார்களா, அவர்களைப் பொறுத்தவரைஅது காலாவதி ஆகிவிட்ட சித்தரிப்பா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது.
  • எப்படி இருந்தாலும் சரி, இளைஞர்களின் உலகத்தை – குறிப்பாக அறுபது, எழுபதுகளின் இளைஞர் உலகத்தை ஆதவனால் பிரமாதமாக சித்தரிக்க முடிந்திருக்கிறது. அதுவும் என், எனக்கு நெருக்கமான நண்பர்களின் மனநிலை, சிந்தனை முறை போலவே அவரது இளைஞர்களின் மனநிலையும் சித்தரிக்கப்பட்டது அவரது கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது. என்ன, அவரது நாயகர்கள் போல மனதில் தோன்றியதை எல்லாம் வெளியில் சொல்லிவிட முடிந்ததில்லை. அப்படி தப்பித் தவறி சொல்லிவிட்டால் திமிர் பிடித்தவன் என்ற பேச்சைக் கேட்க வேண்டி இருந்தது. கல்லூரியிலாவது டோண்ட் கேர் என்று போக முடிந்தது, வேலைக்கு போன பிறகு கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பேசத் தொடங்கினேன். இன்றும் என் நெருங்கிய நண்பன் ஒருவனோடு பணி புரிகிறேன், அலுவலக மீட்டிங்களில் அவன் அடக்கி வாசிக்கும் தருணங்கள் எனக்கு மட்டும் புரிகின்றன and vice versa.

போன பதிவில் சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல், முதலில் இரவு வரும், ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும், லேடி, புதுமைப்பித்தனின் துரோகம், புகைச்சல்கள், ஒரு தற்கொலை, கௌரவம், நிழல்கள், மூன்றாமவன், கருப்பை சிறுகதைகளைப் பற்றி எழுதி இருந்தேன்.

அவற்றைத் தவிர இ.பா. ஐந்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவற்றில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை இன்டர்வியூ. அன்று வேலைக்காக நேர்காணலுக்கு செல்லும் அனுபவமற்ற இளைஞனின் உணர்வுகளை தத் ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார். இன்றும் பொருந்தும்.

ஞாயிற்றுக் கிழமைகளும் பெரிய நகரமும் அறையில் ஓர் இளைஞனும் சிறுகதையில் இன்றைய இளைஞர்களும் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியும். திருமணம், காதல், பெண் இல்லாத இளைஞர்கள். அவர்கள் வாழ்வின் வெறுமை, என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பது ஞாயிறுகளில்தான் அதிகமாக வெளிப்படுகிறது. அதை மிக அருமையாக சித்தரித்திருக்கிறார்.

கால்வலி இன்னொரு நல்ல சிறுகதை. நிச்சயம் ஆன பெண்ணுடன் திரைப்படம் பார்க்க வேண்டும், இவன் முன்னால் போய் காத்திருக்கிறான். இன்னொரு அழகியைப் பார்க்கிறான். கடைசி வரி மிகவும் நிஜமானது –

தூரத்தில் சித்ராவும் அவள் தம்பியும் வருவது தெரிந்தது.அவனுக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியா வருத்தமா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இறந்தவன் இன்னொரு நல்ல சிறுகதை. ஊருக்குப் போயிருக்கும் மனைவி. நூல் விடும் சகா. ஆனால் இவனுக்கு தைரியமில்லை. சிறுகதையின் தலைப்பு வெகு பொருத்தம்.

ஆதவனின் 4 சிறுகதைகள் –  ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும், முதலில் இரவு வரும், சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல், லேடி – ஜெயமோகனின் முக்கிய தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன. இரண்டு சிறுகதைகள் – சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – எஸ்ராவின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன.

ஆதவன் இறந்த பிறது அவருடைய முதலில் இரவு வரும் என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. (1987)

ஆதவன் சிறுகதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. அது என்னையும் என் வாழ்க்கையையும் அவ்வப்போது அவற்றில் காண்பதால்தானா என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. எப்படி இருந்தால் என்ன, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆதவன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

தமிழறிஞர் வரிசை: வ.சுப. மாணிக்கம்

மாணிக்கம் பேராசிரியர், துணைவேந்தராக இருந்தவர். பல ஆய்வுப் புத்தகங்களை எழுதி இருக்கிறார். கவிஞரும் கூட. பல நாடகங்களையும் எழுதி இருக்கிறாராம். ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். 2007-இல் இவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன். அப்படி நாட்டுடமை ஆக்கப்படவில்லை என்றால் நான் இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டேன்.

சில புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் எனக்கானவை இல்லை. நாட்டுடமை எல்லாம் அனாவசியம் என்றுதான் தோன்றுகிறது. பெரிய பதவிகளில் இருந்தவர், என்பதனால் நாட்டுடமை ஆக்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவரின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டால் அவரது சில புத்தகங்களையாவது, புரட்டியாவது பார்த்துவிட வேண்டும், ஏதாவது குறிப்பு எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை, அதனால்தான் இந்தப் பதிவு.

ஆனால் தமிழ் கற்றவர் என்பது தெளிவு. இவர் போன்றவர்களின் பங்களிப்பு பேச்சுகளில்தான், கற்பிப்பதில்தான் வெளிப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

தொடர்புடைய சுட்டி:

சுஜாதா குறுநாவல்: விரும்பிச் சொன்ன பொய்கள்

கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட குறுநாவல். ஆனால் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் தரத்தில்தான் இருக்கிறது.

குங்குமச்சிமிழ் இதழில் தொடர்கதையாக 1987-இல் எழுதப்பட்டது. வார நாவல்களில் ஏதாவது சொதப்பல் இல்லாமல் எழுதுவது கச்சிதமாக எழுதுவது கஷ்டம். இதில் செய்திருக்கிறார்.

ராதாகிருஷ்ணன் முன்னாள் சர்க்கஸ் வில்வித்தைக்காரன். அங்கே ஒரு பெண்ணோடு காதல், அவள் கழற்றிவிடும்போது அவள் மீது அம்பு எய்து காயப்படுத்திவிடுகிறான். மூன்றாண்டு சிறை. அதற்கப்புறம் கஷ்டப்பட்டு ஒரு வேலையில் சேர்கிறான். நேர்மையாக உழைக்கிறான். முதலாளி புருஷோத்தமின் மனைவிக்கு மதுரையை சுற்றிக் காட்டும் பொறுப்பு தரப்படுகிறது.

மந்தாகினி அன்றைய மதுரையின் சமூக விழுமியங்களின்படி கொஞ்சம் மென்டல் என்றே சொல்லலாம். அறிவுஜீவித்தனம் நிறையத் தெரிகிறது. இரவு கூத்து பார்க்கப் போகிறாள். கடற்கரையில் முழு நிர்வாணமாக ஓடுகிறாள், ராதாகிருஷ்ணனோடு உறவு கொள்கிறாள். அவனிடமிருந்து ஒரு அம்பைப் பரிசாகப் பெற்றுக் கொள்கிறாள். ஆனால் இதெல்லாம் ஒரு நாள் கூத்து (one night stand) என்று சொல்லிவிட்டு அவனை நிர்தாட்சண்யமாக கழற்றிவிட்டுப் போய்விடுகிறாள்.

ராதாவுக்கு ஏறக்குறைய பித்து பிடித்துவிடுகிறது. மந்தாகினி மந்தாகினி என்று அலைகிறான். சில மாதங்கள் கழித்து மந்தாகினி தொலைபேசியில் அழைக்கிறாள். சென்னை வந்து என்னைப் பார் என்கிறாள்.

ராதா சென்னை ஓடுகிறான். புருஷோத்தமுக்கு இவர்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை. என் மனைவிக்கு சில சமயம் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும் என்று சொல்கிறார். அவரே எதேச்சையாக என் வீட்டுக்குப் போய் என் மனைவியைப் பார், கொஞ்சம் தேறுதல் சொல் என்கிறார்.  மந்தாகினி ராதாவைப் பார்த்து நீ யார் என்கிறாள், பிறகு அணைத்தும் கொள்கிறாள், தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி பேசுகிறாள், புருஷோத்தம் வருவது தெரிந்ததும் விலகுகிறாள்.

அன்று இரவு இறக்கிறாள். அம்பு நெஞ்சில். தற்கொலை என்றுதான் போலீஸ் நினைக்கிறது, ஆனால் கொலையாக இருக்குமோ என்று விசாரிக்கிறது. புருஷோத்தமுக்கு மனைவியின் இறப்பால் நிறைய சொத்து வரும்; ஆனால் வலுவான alibi இருக்கிறது. ராதா மீதும் விசாரணை நடக்கிறது.

முடிவைப் படித்துக் கொள்ளுங்கள்.

உண்மையில் இன்றும் சுஜாதாவை விஞ்சிய குற்றப் பின்னணி நாவல்களை தமிழில் யாராவது எழுதுகிறார்களா என்பது சந்தேகமே. வடிவ கச்சிதம் அருமை. சீராக ஒரு முடிவை நோக்கிப் போகிறது. கணேஷ்-வசந்தை நுழைத்திருந்தால் நாவல் இன்னும் பிரபலமாக ஆகி இருக்குமோ என்னவோ.

சுஜாதா ரசிகர்கள் தவறவிடக் கூடாது, மற்றவர்களும் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

 

 

 

தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர்

தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர்

கிருஷ்ணசாமி பாவலரின் சகோதரர் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம். ஆனால் ஒரு காலத்தில் அவர் பாவலரின் சகோதரர் என்றே அறியப்பட்டிருப்பார். பாவலரின் நாடகங்கள் – கதரின் வெற்றி, பதிபக்தி, பஞ்சாப் கேசரி, தேசியக்கொடி போன்றவை அந்தக் காலத்தில் அத்தனை பிரபலமாக இருந்தன.

பாவலர் 43 வயதிலேயே (1934-இல்) இறந்துவிட்டார். பத்து பதினைந்து வருஷமாவது நாடகத் துறையில் பிரபலமாக இருந்தார். சதாவதானம் செய்யக் கூடியவராம், சதாவதானம் கிருஷ்ணசாமி பாவலர் என்றே அறியப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கிறார். அவரது முக்கியப் பங்களிப்பு என்பது நாடகங்கள் மூலம் காங்கிரஸை, காங்கிரஸ் கொள்கைகளைப் பிரபலமாக்கியதுதான்.

பதிபக்தி நாடகம் மதுவின் தீமைகளை பிரச்சாரம் செய்ததாம். கதரின் வெற்றி கதரை; பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராயைப் பற்றியதாம். பதிபக்தி, பஞ்சாப் கேசரி இரண்டும் பிற்காலத்தில் திரைப்படங்களாக வந்தன. இந்த நாடகங்கள் எல்லாம் கிடைக்கமாட்டேன் என்கின்றன.

பாவலரின் தேசிங்கு ராஜன் என்ற புத்தகத்தைப் படித்தேன். இதில் எத்தனை சரித்திரம், எத்தனை கற்பனை என்று தெரியவில்லை. தேசிங்குக்கு ஒரு மாற்றாந்தாய் மகன் – தாவூத் கான் – இருந்ததாகவும் அவன் தேசிங்கை எதிர்த்துப் போரிட்டு இறந்ததாகவும், தான் கொன்றவன் தன் சகோதரனே என்று தெரிந்ததும் தேசிங்கு தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் எழுதி இருக்கிறார். எம்ஜிஆர் நடித்த ராஜா தேசிங்கு திரைப்படத்தின் கதை இப்படியேதான் இருக்கிறது.

விஜயவிலோசனை (1916) நாடகம் சரளமாகச் செல்லும் இன்னொரு நாடகம். சொந்தமாக யோசித்து எழுதப்பட்ட நாடகம், புராண இதிகாச தொன்மங்களின் நாடகமாக்கம் இல்லை என்பதுதான் இதன் முக்கியத்துவம், அன்று – 1916இல் – முன்னேற்றமாக இருந்திருக்க வேண்டும்.

பிரஹ்லாதா, சாவித்ரி நாடகங்களில் புதுமை எதுவுமில்லை. ஆனால் அன்று இந்த மாதிரி நாடகங்களுக்குத் தேவை இருந்தது, வெற்றி பெற்றிருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

தஞ்சை பிரகாஷ்: சிறுகதைகள்

thanjai_prakashதஞ்சை பிரகாஷ் என்ற பேரை கேட்டிருந்தாலும் அதிகம் படித்ததில்லை. பிரகாஷின் சிறுகதைகள் எதுவும் ஜெயமோகனின் seminal பட்டியலில் இடம் பெறாததும் ஒரு காரணமாக இருக்கலாம். archives.org தளத்தில் சில சிறுகதைகள் கிடைத்தன.

பிரகாஷின் சிறுகதைகளை நான் பரிந்துரைக்க மாட்டேன். ஓரிரண்டு சிறுகதைகளைத் தவிர மற்றவை படுசுமாராக இருக்கின்றன. ஆனால் அவருக்கு ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்கும் பிரபலம் வியப்பூட்டுகிறது. எனக்குத்தான் ரசிக்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை.

சரி நான் மதிக்கும் விமர்சகர்களான ஜெயமோகன், எஸ்ரா என்ன நினைக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். எஸ்ரா பிரகாஷின் மேபல் சிறுகதை, கரமுண்டார் வீடு நாவல் ஆகியவற்றை முறையே தன் சிறந்த தமிழ் சிறுகதைகள், சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார், ஆனால் பிரகாஷைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவரது தளத்தில் இல்லை. பிரகாஷின் கள்ளம் நாவல் ஜெயமோகனின் தமிழின் சிறந்த நாவல் பட்டியலில் இடம் பெறுகிறது. ஆனால் ஜெயமோகன் பிரகாஷை பொருட்படுத்த வேண்டிய எழுத்தாளராகக் கருதவில்லை. ஜெயமோகன் ரசனையும் என் ரசனையும் பெருமளவு ஒத்துப் போகும்…

ஒரே ஒரு சிறுகதை படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம். சிறுகதையில் என்னவோ இருக்கிறது. அது என்ன என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. தொழுநோய் என்று ஒதுக்கப்பட்ட பெண் வரைந்து தள்ளுகிறாள் என்று எல்லா விதத்திலும் பற்றாக்குறை உள்ள கதைச்சுருக்கம் மட்டும்தான் எழுத முடிகிறது.

ஆலமண்டபம் சிறுகதை தமிழை பெரும் ஆலமரம் ஆயிரங்கால் மண்டபமாக மாறியதாக உருவகிக்கிறது. சிலப்பதிகாரத்திலிருந்து புதுமைப்பித்தன் வரை எல்லாரும் பெரும் விழுதுகள்/தூண்கள்!

நாகம் சிறுகதையில் வழக்கமான முக்கோணம் – வயதான கிழவன், மிக அழகிய மனைவி, திருமணத்துக்கு முன் (பின்னும் கூட) அவள் மேல் ஆசை வைத்திருந்த ஏழை வாலிபன். படிக்கலாம்.

வடிகால் வாரியம் சிறுகதை தஞ்சாவூரில் – காவிரிக்கரை தஞ்சாவூரில்! குழாயில் தண்ணீர் வராத சூழ்நிலை, ஊழல், தண்ணீர் எடுத்துப் பிழைக்கும் பாட்டியின் சாவு என்ற ஒரு சோக சித்திரத்தைக் காட்டுகிறது. 1992-இல் எழுதப்பட்ட கதை, அப்போதே இந்த நிலையா என்று வியக்க வைத்தது.

பொறா ஷோக்கு என்ற சிறுகதையைப் படிக்கும்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. பிரகாஷுக்கு தஞ்சையின் வரலாறு – அதுவும் நுண்ணிய வரலாறு (micro-history) நன்றாகவே தெரியும். அதை வைத்து அவர் இன்னும் எழுதி இருக்கலாம், அவை நல்ல இலக்கியமாக வர வாய்ப்பு இருந்திருக்கிறது.

அங்கிள் படிக்கக் கூடிய கதை. பக்கத்து வீட்டு இளம் பெண் மேல் அரைக்கிழம் அங்கிளுக்கு ஈர்ப்பு. உம்பளாயி சிறுகதையையும் படிக்கலாம். மீன்வாசம் உள்ள பெண்ணை சுகிக்கும்போதும் மூக்கை மூடிக் கொள்ளும் பிராமணப் பையன் என்ற கரு மனதில் நிற்கிறது. நியூசன்ஸ் சிறுகதையையும் படிக்கலாம். ஆனால் இதே கருவை இதை விட நன்றாக யாரோ (பட்டுக்கோட்டை பிரபாகர் என்று நினைக்கிறேன்) எழுதி படித்த நினைவிருக்கிறது. திண்டி சிறுகதையும் படிக்கலாம். தஞ்சையின் முதல் சுதந்திரப் போராட்டம் தஞ்சாவூரில் அமர்சிங்குக்குப் பிறகு சரபோஜி ஆட்சிக்கு வந்த காலகட்டத்தை தளமாக வைத்து எழுதப்பட்ட கதை, படிக்கலாம். பூகோஸ் சிறுகதையையும் படிக்கலாம். அஞ்சுமாடி இன்னொரு படிக்கக் கூடிய சிறுகதை. பூடகமாகச் சொல்வது – அல்லது அவர் பூடகமாகச் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றுவது – நன்றாக வந்திருக்கிறது. அங்குசம் சிறுகதையில் 13 வயதில் காதலிக்க ஆரம்பிப்பது 20-30 வருஷங்களாகியும் கல்யாணத்தில் முடியவில்லை…

எஸ்ரா பரிந்துரைக்கும் மேபல் (1988) சிறுகதை முரட்டு அப்பா பெண் உறவை விவரிக்கிறது. என் கண்ணில் படுசுமார்அதே போலத்தான் வெட்கம் கெட்டவன் சிறுகதையும் – மனைவியை போட்டு அடிக்கும் கணவனை விவரிக்கிறது. வைரமலையில் காசில் குறியாக இருக்கும்  மனைவி, எளிய வாழ்க்கை வாழ விரும்பும் கணவன். வத்சலி விகல்பம் இல்லாமல் வளர்ந்த பெண்ணின் மண வாழ்வில் கஷ்டங்கள். கயாமத் என்னும் இறுதி நாள் என்ற சுமாரான சிறுகதையில் ரௌடி மனைவி. கொலைஞன் சிறுகதையிலும் அதே. கடைசிகட்டி மாம்பழம் சிறுகதையில் பத்து சகோதரிகளும் ஆசைப்படுபவனுக்கு அவர்கள் அம்மா மீது ஆசை. சோடியம் விளக்குகளின் கீழ், ராவணசீதை, ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள், இருட்டின் நிறங்கள், எரித்தும் புதைத்தும் எல்லாம் சுமார்தான். என்னை சந்திக்க வந்த என் கதாபாத்திரம், உனக்கும் ஒரு பக்கம், சுயம், புலன்விசாரணை, பேய்க்கவிதை எல்லாம் ஒரு கதையா! பள்ளத்தாக்கு (1983) எல்லாம் என்ன எழவு என்று புரியவில்லை. படித்த நல்ல பதவியில் இருக்கும் பெண். ஆண்களைக் கண்டால் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என்னதான் சொல்ல வருகிறார்?

சுருக்கமாகச் சொன்னால் அலுப்புத் தட்டுகிறது. சிறுகதைகளை மட்டும் வைத்து சொல்கிறேன்; பிரகாஷ் இலக்கியவாதிதான்; இலக்கியம் படைக்க முயன்றிருக்கிறார்தான்; இலக்கியம் படைக்கத் தேவையான பின்புலம், கருக்கள் எல்லாம் இருக்கின்றனதான். ஆனால் அவர் சில வக்ரங்களை எழுத வேண்டும் என்று ஒரு சின்ன வட்டத்தில் சிக்கிக் கொண்டுவிட்டார். நல்ல இலக்கியம் படைப்பதில் வெற்றி பெறவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்: